கன்யாகுமாரி - Page 16
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7571
ஜெயன் அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் சிரிக்க முயற்சிக்கிறான். வலிய வரவழைத்துக் கொண்ட அசட்டுச் சிரிப்புடன்-
ஜெயன்: தேங்க் யூ. தேங்க் யூ. வெரி நைஸ் டூ ஹேவ் மெட் யூ.
அவன் வெளியே புறப்பட, கிழவர் ரெயில்வே டைம் டேபிளை அவனை நோக்கி நீட்டுகிறார்.
அதை கவனிக்காமல், வாங்காமல்
ஜெயன்: தேங்க்யூ... தேங்க்யூ...
கிழவர் டைம் டேபிளை மேஜை மேல் எறிந்து, கதவைப் பலமாக ஓசை உண்டாகும் வண்ணம் அடைத்து, உரத்த குரலில்:
"குட் நைட்."
52
இரவு.
ஃப்ரெடரிக்கின் அறை. கதவு அடைக்கப்படும் சத்தம். அவன் டம்ளரில் மீதியிருந்த மதுவைக் குடித்து முடிக்கிறான். பிறகு கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வெளியே நடக்கிறான்.
52-ஏ
கதவைப் பூட்டிவிட்டு ஃப்ரெடரிக் படியில் இறங்கத் தொடங்கும்போது வராந்தாவில் தனியாக, பரபரப்புடன் நின்று கொண்டிருக்கும் ஜெயனைப் பார்த்து அவன் நிற்கிறான்.
ஃப்ரெடரிக்: எனி லக்? சரக்கு எப்படி?
வந்த கோபத்தை அடக்க முடியாமல் தன்னைவிட பலசாலியும் முரடனுமான ஃப்ரெடரிக்கை முகத்தில் அடிக்கிறான் ஜெயன்.
மது தந்த போதையும், தன்னுடைய உடல் வலிமையில் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் கொண்ட ஃப்ரெடரிக் தனக்கு ஒரு எதிரி கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறான். அவன் உரத்த குரலில் கத்துகிறான்.
"யூ பாஸ்டர்ட்!"
சொல்லிவிட்டு ஜெயனை கண்மண் தெரியாமல் அடிக்கிறான். ஜெயன் கீழே விழுகிறான். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சாமியார் கீழே விழுந்து கிடக்கும் ஜெயனை அடித்துக் கொண்டிருக்கும் ஃப்ரெடரிக்கைத் தடுக்கிறார். ஃப்ரெடரிக் கீழே விழுந்து கிடக்கும் ஜெயனை சர்வ சாதாரணமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அலட்சியமாக சிரித்தவாறு படிகளில் இறங்கிச் செல்கிறான்.
விழுந்து கிடந்த இடத்தைவிட்டு ஜெயன் மெதுவாக எழுந்து நிற்கிறான். சாமியார் அவன் எழ உதவுகிறார்.
வாயின் ஓரத்தில் வழிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்தவாறு-
ஜெயன்: தமாஷ்... எல்லாமே சும்மா தமாஷுக்காக...
கிழவரும் இளம் பெண்ணும் அந்தக் காட்சியைப் பார்த்தவாறு நின்றிருக்கிறார்கள்.
கிழவர்: வா ரஜனி... கதவை மூடு. பொறுக்கிப் பசங்க... எங்கே போனாலும் மனுஷனுக்கு நிம்மதின்றதே இல்ல...
53
கிழவர் அறைக்குள் வருகிறார். ரஜனி அப்போதும் வெளியிலேயே நின்றிருக்கிறாள்.
கிழவர்: நீ கதவை மூடிட்டு உள்ளே வர்றியா இல்லியா?
அவள் உள்ளே வருகிறாள். கதவை மூடுகிறாள். கிழவர் பயங்கர கோபத்தில் இருக்கிறார்.
ரஜனி: அலட்டிக்காம பேசாம படுக்க வேண்டியதுதானே! இப்போ மூச்சுவிட முடியாம தவிக்கப் போறீங்க.
கிழவர்: நான் சீக்கிரம் தூங்கினா நல்லதுன்னு நினைக்கிறியா?
கிழவரின் வார்த்தைகளில் மறைந்து இருக்கும் உட்பொருளை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது.
ரஜனி: உடம்பு மேலும் மோசமாயிடப் போகுதேன்னு நான் நினைச்சேன்...
கிழவர்: (வெறுப்புடன்) நான் ஒரு நோயாளி. எனக்கு வயசாயிடுச்சு. சீக்கிரம் நான் சாகணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோ.
கிழவர் இருமத் தொடங்குகிறார். அவள் அவனின் முதுகைத் தடவிவிட முயற்சிக்க, கிழவர் அவளுடைய கையைத் தட்டிவிடுகிறார். மீண்டும் அவர் இருமுகிறார். மூச்சுத் திணறல் உண்டாகிறது.
அவள் பெட்டியில் இருந்து மாத்திரைகளைத் தேடி எடுத்து கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிறைத்து கிழவரிடம் தருகிறாள். அவர் மாத்திரைகளை விழுங்கி நீரைக் குடித்து, மெதுவாக கட்டிலில் சென்று விழுந்து மேல்மூச்சு, கீழ்மூச்சு விடுகிறார். சிறிது நேரத்தில் அவர் அமைதியாகிறார். போர்வையை எடுத்து அவருடைய கழுத்து வரை மூடிய அவள் மீண்டும் ஜன்னலருகில் போய் நிற்கிறாள்.
இருண்டு போய் கிடக்கும் கடலைப் பார்த்தவாறு நின்றிருக்கும் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் முதுகுப் பக்கம் இலேசாக ஆடுவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
54
ஹிப்பிகள் கிட்டாரின் இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் போதை மருந்தின் பிடியில் சிக்கிக் கிடக்கிறார்கள்.
அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடக்கிறார்கள்.
மயக்க நிலையில் இருக்கும் கண்களுடனும், திறந்த உதடுகளுடனும் காட்சியளிக்கும் ஒரு ஹிப்பி பெண்ணின் உடல் அசைவுகளைப் பார்க்கும்போது அவள் ஏதோ போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கிறாள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
55
சாலையோரத்தில் மின் கம்பத்திற்குக் கீழே பயங்கர போதையில் சுயநினைவே இல்லாமல் வீரப்பன் விழுந்து கிடக்கிறான். ஃப்ரெடரிக் அவனைப் பார்க்கிறான்.
ஃப்ரெடரிக்: வீரப்பா!
அவன் அசையாமல் கிடக்கிறான். ஃப்ரெடரிக் கோபத்தில் அவனை அசைத்துப் பார்க்கிறான்.
ஃப்ரெடரிக்: வீரப்பா!
வீரப்பன் போதை மயக்கத்தில்-
"வீரப்பன் கூட விளையாடலாம்னு நினைக்கக்கூடாது. ப்பூ! போலீஸ்காரனைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன்டா இந்த வீரப்பன்! ப்பூ..."
ஃப்ரெடரிக்: வீரப்பா!
என்ன செய்வதென்று தெரியாமல், அடக்க முடியாத கோபத்துடன் ஃப்ரெடரிக் ஒரு நிமிடம் அவனையே பார்த்தவாறு நின்றிருக்கிறான்.
ஃப்ரெடரிக்: வீரப்பா... ப்ளடி ராஸ்கல்!
பயங்கர போதையில்-
வீரப்பன்: அதை உன் பொண்டாட்டிக்கிட்ட போய் சொல்லு...
அவனை அடிப்பதிலோ, உதைப்பதிலோ அர்த்தமே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட ஃப்ரெடரிக் அந்த இடத்தை விட்டு நீங்கி நடக்கிறான்.
56
தீப்பந்தத்தில் யாரோ எண்ணெய் ஊற்றுகிறார்கள். பந்தம் பெரிதாக எரிகிறது.
சேரியில் தீப்பந்தங்கள், பெட்ரோமாக்ஸ் ஆகியவற்றின் வெளிச்சத்தில் சிறிய மாரியம்மன் கோவிலுக்கு வெளியே இருக்கும் வெற்றிடத்தில் ஒரு தெருக்கூத்து நடந்து கொண்டிருக்கிறது. பல வர்ண புடவைகளைக் கட்டிய பெண்கள்... கறுத்துப் போன ஆண்கள்...
அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்தில் பார்வதியும் இருக்கிறாள். தாவணி அணிந்திருக்கிறாள். தலையில் சாமந்திப்பூ வைத்திருக்கிறாள்.
கூட்டத்திற்குப் பின்னால் வந்து நிற்கும் ஃப்ரெடரிக் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான். பார்வதியின் கவனம் முழுவதும் தெருவில் நின்றிருக்கும் கூட்டத்தின் மீதுதான் இருக்கிறது. சங்கரன் வந்துவிட்டானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவள் அடிக்கொரு தரம் ஆண்கள் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
தெருக்கூத்து முடிகிறது. அந்த இடத்திற்கு செண்டை அடிப்பவர்கள் வந்ததும், பார்வதி இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கிறாள்.
56-ஏ
நிலவொளி விழுந்து கொண்டிருக்கும் கடற்கரை. பார்வதி நடக்கிறாள். காதுகளைத்த தீட்டி கேட்கிறாள். சுத்தியல் கருங்கல் மேல்படும் சத்தம். அவள் அந்தச் சத்தம் கேட்கும் திசையை நோக்கி வேகமாக நடக்கிறாள்.
57
சாமியாரின் அறை.
மெத்தையில் கண்களை மூடி படுத்திருக்கும் சாமியார் கண்களைத் திறக்கிறார். அவருக்கு தூக்கமே வரவில்லை. எழுந்து கதவைத் திறக்கிறார்.