கன்யாகுமாரி - Page 15
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7571
ஃப்ரெடரிக் அவனையே பார்த்தவாறு நின்றிருக்கிறான். சிகரெட் புகைத்தவாறு அலமாரியில் இருந்து விஸ்கி குப்பியை எடுக்கிறான். அதில் கொஞசம் டம்ளரில் ஊற்றி குடிக்கிறான். பிறகு டம்ளரில் நாட்டு சாராயத்தின் மீதியை ஊற்றி அழைக்கிறான்.
"வீரப்பா!"
வீரப்பன்: (கண்களைத் திறந்து) சார்!
ஃப்ரெடரிக்: எழுந்திரு...
போதையுடன், சுய நினைவே இல்லாமல் அவன் எழுந்து உட்காருகிறான். எங்கிருக்கிறோம் என்பதையே அவன் அப்போதுதான் உணர்கிறான்.
வீரப்பன்: ஆனா, ஒரு விஷயம் சொல்றேன். எவ்வளவு குடிச்சாலும் வீரப்பனுக்கு ஒண்ணுமே ஆகாது.
ஃப்ரெடரிக்: சரி... இதையும் குடி...
அவன் டம்ளரை கையில் வாங்குகிறான்.
ஃப்ரெடரிக்: நான் சொன்னது உனக்கு ஞாபகத்துல இருக்கா?
அவன் கண்களை மூடிக் கொண்டு டம்ளரை காலி செய்கிறான். பயங்கர சத்தத்துடன் அதைக் கீழே வைக்கிறான்.
வீரப்பன்: எவ்வளவு குடிச்சாலும், வீரப்பன் எதையும் மறக்க மாட்டான். இன்னொரு தடவை வேணும்னா நான் அதைச் சொல்லட்டா, சார்?
அதிகாரக் குரலில்-
ஃப்ரெடரிக்: உன்னால முடியுமா?
வீரப்பன்: வீரப்பன் ஒரு தடவை வாக்கு கொடுத்தா, கொடுத்ததுதான். நான் கொண்டு வருவேன். எட்டு மணிக்கு அவ இங்கே இருப்பா.
அவன் வாசல் வரை போய் ஏதோ யோசித்தவாறு திரும்பி வந்து தலையைச் சொறிகிறான்.
வீரப்பன்: சார்... காசு...
ஃப்ரெடரிக் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டுகிறான். வீரப்பன் அதை வாங்குவதற்கு ஆர்வத்துடன் கையை நீட்ட, அவன் கையைப் பின்னால் எடுத்து-
ஃப்ரெடரிக்: எட்டு மணி!
வீரப்பன்: எட்டு மணி.
அவன் பணத்தைத் தருகிறான். அவன் வெளியே சென்றவுடன் ஃப்ரெடரிக் விஸ்கி குப்பியைப் பார்க்கிறான். அழைப்பு மணியை அடிக்கிறான்.
49
வராந்தா.
சாமியார் அறைக் கதவைத் திறக்கிறார். சாமியாரின் கையிடுக்கில் ஒரு பேப்பர் பொட்டலம் இருக்கிறது. அப்போது ஜெயன் வேகமாக அங்கு வருகிறான்.
ஜெயன்: அவங்க காலையில போறாங்க. மேனேஜர் சொன்னாரு.
சாமியார்: போகட்டும். யாரும் எங்கேயும் நிரந்தரமா இருக்க முடியுமா என்ன?
ஜெயன்: என்கூட வாங்க. நாம அவங்க கூட பேசுவோம். சாமி... நீங்க என் கூட இருந்தா எனக்கு தைரியமா இருக்கும்.
சாமியார் கதவைத் திறந்து, பாதி உள்ளே நுழைந்தவாறு, திரும்பி நின்று-
சாமியார்: நானா? புறம்போக்கு நிலத்துல அலைஞ்சு திரியிற ஆளு நான்... குடும்பத்துல எனக்குன்னு என்ன இடம் இருக்கு? சொல்லு ஜெயன்.
ஜெயன்: நான் தனியாவே போயிடுவேன்... என்ன நடக்கப் போகுது?
சாமியார்: ஆசிகள்! வாழ்த்துக்கள்!
பொட்டலத்தில் இருந்த பல வர்ண உடைகளையும் வெளியே எடுத்து காட்டியவாறு-
சாமியார்: காலையில ஒரு பெண்ணை பார்த்து இந்த ஆடைகளை ஒப்படைச்சிட்டு நானும் இங்கேயிருந்து கிளம்புறேன்.
திகைத்து நிற்கும் ஜெயனிடம்-
சாமியார்: வரன் வானத்தின் அளவிற்கு தலையை உயர்த்தி நடந்து வர்றப்போ தேவதைகளே திகைப்படைஞ்சு நின்னுடுறாங்க. மணமகளோட காலடிகளை பூமி முத்தமிடுது. உலகம் காதலர்களை ஆதரிக்கிறது. சன்னியாசிகளும்தான்.
சாமியார் உள்ளே போகிறார்.
50
இரவு.
ஜெயன் வராந்தாவில் தயங்கி நிற்கிறான்.
நீச்சலடிக்கும் இளைஞனின் அறைக்கு ட்ரேயில் சோடா குப்பிகளையும் மதுவையும் எடுத்துக் கொண்டு போகும் பணியாள் அவனைத் தாண்டி நடந்து போகிறான்.
பணியாள்: ஸ்டாக் வந்திடச்சு. ஓ... இவர்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்?
ஜெயனின் நரம்புகள் முறுக்கேறுகின்றன. இருந்தாலும், அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான்.
பணியாள்: ஃபாரின் அடிச்சா, அவ்வளவு கெடுதல் இல்ல... இல்லியா?
சேட் காலி செய்த அறையில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது.
ஜெயன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கவே பணியாள் பாஸ்கரன் நடக்கிறான்.
"வாவோ, வாவோ, வாவோ! மகனே நீ உறங்கு..."
அறைக்குள் தாய் மகனைத் தூங்க வைக்க முயற்சி செய்கிறாள். ஜெயன் நடக்கிறான். ஃப்ரெடரிக்கின் அறைக்கு முன்னால் வந்தபோது நிற்கிறான். நீச்சலடிக்கும் இளைஞனின் அறைக்குள் சோடாக் குப்பி திறக்கும் சத்தம்.
கையில் விஸ்கி க்ளாஸுடன் ஸ்போர்ட்ஸ் ஷர்ட், ஷாட்ஸ் அணிந்தவாறு ஃப்ரெடரிக் வெளியே வருகிறான். வராந்தாவில் நின்றிருக்கும் ஜெயனைப் பார்த்து மீண்டும் அவன் உள்ளே போகிறான்.
எதிர்பார்க்காமல் ஃப்ரெடரிக் மீண்டும் வெளியே வருகிறான்.
ஜெயனிடம்-
ஃப்ரெடரிக்: யூ வாண்ட் சம்திங்?
ஜெயன்: நோ. தேங்க் யூ.
ஃப்ரெடரிக் உள்ளே போகிறான்.
50ஏ
ஃப்ரெடரிக் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருக்கிறான். அவன் பயங்கர போதையில் இருக்கிறான். கடிகாரத்தைப் பார்க்கிறான். நேரம் எட்டுமணி ஆகிறது. அவன் வெளியே வருகிறான். வராந்தாவில் இங்குமங்குமாய் பார்க்கிறான். அப்போது கிழவரின் அறைக்கு வெளியே தயங்கியவாறு நின்றிருக்கும் ஜெயனை அவன் பார்க்கிறான். கோபம் மாறி அவன் முகத்தில் புன்னகை படர்கிறது.
51
கிழவர் சாய்வு நாற்காலியில் மஃப்ளரால் தலையை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். ரஜனி ஜன்னலருகில் வெளியே பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கிழவர் முகத்தைத் திருப்புகிறார்.
மீண்டும் கதவு தட்டப்படுகிறது.
ரஜனி ஜன்னலருகிலிருந்து நடந்து வந்து கதவைத் திறக்கிறாள்.
ஜெயன் அங்கு நின்றிருக்கிறான். ஒரு நிமிடம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் கிழவர் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து அவளின் தோளுக்கு அப்பால் நின்றிருக்கும் ஜெயனைப் பார்க்கிறார்.
கிழவர்: என்ன வேணும்?
இளம்பெண் இலேசாக விலகி நிற்க, ஜெயன் இரண்டடி தாண்டி முன்னால் வருகிறான். தடுமாற்றத்துடன்-
ஜெயன்: ஸாரி... நான்...
கிழவர்: என்ன வேணும்?
ஏதாவது சொல்ல வேண்டுமே என்று எண்ணியவாறு, கொஞ்சமும் சம்பந்தமும் இல்லாமல் கேட்கிறான்-
"ரெயில்வே டைம் டேபிள் இருக்கா?"
கிழவர் எதுவுமே புரியாமல் அவனையே மேலிருந்து கீழ்வரை பார்க்கிறார்.
கிழவர்: இல்ல...
அவள் மேஜை மேல் இருந்த டைம் டேபிளை நோக்கி நீண்ட தன்னுடைய கையை பின்னால் இழுத்துக் கொள்கிறாள்.
ஜெயன்: நான் ஒண்ணாம் நம்பர் அறையில இருக்கேன். உங்ககூட பேசலாம்னு வந்தேன்.
கிழவர்: எனக்கு உடம்புக்கு சரியில்ல. என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.
ஜெயன்: என் பேரு ஜெயன். வீடு மூணாறுல இருக்கு. க்ளாட் டூ மீட் யூ.
ஜெயன் இலேசாக நடுங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கையை கிழவர் முன்னால் நீட்டுகிறான். கிழவர் தயங்கியவாறு-
"ஐ ஆம் சோமசுந்தரம். அம்பிகா மில்ஸோட மேனேஜிங் டைரக்டர்... (பெண்ணைப் பார்த்து) இது என்னோட மனைவி ரஜனி..."