கன்யாகுமாரி - Page 17
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7571
57-ஏ
சாமியாரின் அறைக்குள் மெத்தை காலியாகக் கிடக்கிறது. அறையில் யாரும் இல்லை.
சாமியார் ஒரு நிமிடம் என்னவோ சிந்திக்கிறார். அடுத்த நிமிடம் வேகமாக வெளியேறி நடக்கிறார்.
58
நிலவு காய்ந்து கொண்டிருக்கும் இரவு-கடற்கரை.
சாமியார் கடற்கரையைச் சுற்றியிருக்கும் பாதையில் நின்றிருக்கிறார். யாரையும் அங்கு காணோம். நடக்கிறார். மின் கம்பத்திற்குக் கீழே போதையில் சுய நினைவில்லாமல் விழுந்து கிடக்கும் வீரப்பனைக் கடந்து சாமியார் நடக்கிறார்.
அப்போது சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வெளுத்த உருவத்தைப் பார்க்கிறார். பக்கத்தில் சென்று பார்க்கும்போது, உட்கார்ந்திருப்பது ஜெயன் என்பது தெரிகிறது. அவன் மது அருந்தியிருக்கிறான். பக்கத்தில் காலி சாராய குப்பி இருக்கிறது.
சாமியார்: ஜெயன்... ஜெயன்...
அவன் போதையில் கண்களைத் திறக்கிறான்.
ஜெயன்: சாமியா? ஸாரி.. ஒய்? தேரீஸ் நத்திங் டூ பி ஸாரி. சிறைக் கதவை நான் உடைச்சிட்டேன்.
சாமியார் அவனைப் பிடித்து எழுந்து உட்கார வைக்க முயற்சிக்கிறார்.
சாமியார்: சரி... எழுந்திரு!
ஜெயன்: (ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உளறுகிறான்) எனக்கு புரிஞ்சு போச்சு. லைக் எஃபூல் ஐ பர்காட் எவ்ரி திங்(சாராய குப்பியை எடுக்கும்போது அது அவனின் கையிலிருந்து கீழே விழுகிறது. சிமென்ட் தரையில் அது விழுந்து உடைகிறது). பசுவை மேய்க்குறுதுக்கு தோட்டத்துக்கு ஒரு பொண்ணு வருவா. அவ மடியில நாவல் பழம் இருக்கும்(சிரித்து குரலை மாற்றியவாறு) அம்மா பார்த்துடக்கூடாது... பணக்கார வீட்டு பையன் நாவல் பாத்தைத் தின்னக் கூடாதாம்.
சாமியார் மிகவும் கஷ்டப்பட்டு அவனைத் தாங்கி பிடிக்கிறார். சாமியாரின் தோள் மேல் அவன் சாய்ந்து கிடக்கிறான். அவனைப் பாதி சுமந்தவாறு சாமியார் நடக்கும் போது-
ஜெயன்: நாம எங்கே போறோம? திரையில் இரண்டு பேரின் நிழல்கள். நெருக்கமாக நடக்கும் நிழல்கள் மேல் மீண்டும் கேள்வி-
"நாம் எங்கே போறோம்?"
59
மூச்சு விட்டவாறு கஷ்டப்பட்டு ஜெயனைச் சுமந்து வரும் சாமியார் படிகளில் ஏறி மேலே வருகிறார்.
ரஜனியின் குரல்: நான் பிடிச்சுக்கிர்றேன்...
சாமியார் பார்க்கும் போது ரஜனி,
இரண்டு பேரும் சேர்ந்து அவனை அறைக்குள் தாங்கியவாறு கொண்டு செல்கிறார்கள்.
60
ஜெயனின் அறை.
மெத்தையில் படுத்துக் கிடக்கும் ஜெயன் மெதுவாகக் கண்களைத் திறக்கிறான். முன்னால் சாமியார், ரஜனி.
ஜெயன் சிரமப்பட்டு எழ முயற்சிக்கிறான்-
சாமியார்: பேசாம படு.
அவர் சொன்னதைக் கேட்காமல் அவன் எழுந்து உட்காருகிறான்.
ரஜனியை நோக்கி-
ஜெயன்: நன்றி.
அவள் கவலையுடன் அவனைப் பார்க்கிறாள்.
ஜெயன்: ரஜனி... ரஜனி... நாவல் காட்டைத் தாண்டி இருக்குற வீடு. எல்லையில ஓடைப் பூக்கள். பாறைமேல விழும் நீர் ஓசை. பறந்து திரியிற கிளியைப் போல பேச முயற்சிக்கிற பொண்ணு...
ரஜனி: (கவலையான குரலில்) நான் நினைச்சுப் பார்க்குறேன். எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்குறேன்.
ஜெயன்: அந்த ஜெயன் செத்துட்டான்...
ரஜனி: (கவலையுடன்) அந்த ரஜனியும் செத்துட்டா ஜெயன்!
சாமியார்: சரி... தூங்கு(ரஜனியிடம்) நீ புறப்படும்மா...
அவன் மீண்டும் படுத்து கண்களை மூடுகிறான். அப்போது அவனின் முகத்தில் திருப்தியை வெளிப்படுத்தும் புன்னகை அரும்புகிறது.
சாமியார் விளக்கை அணைக்கிறார்.
சாமியாரும் ரஜனியும் அறையை விட்டு வெளியே வருகிறார்கள்.
61
வராந்தா.
சாமியாரும் ரஜனியும்.
சாமியார்: தூக்கம் வராதவங்களோட இரவு இது... இல்லியா?
அப்போது கிழவரின் உரத்த குரல்:
"ரஜனி!"
வாசலில் கண்களைக் கசக்கியவாறு நின்றிருக்கும் கிழவர் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு வேகமாக அருகில் வருகிறார்.
ரஜனி: நான் இன்னும் உறங்கல. எனக்குத் தூக்கமே வரல. ஏதோ பொணம் இருக்கற பெட்டிக்குள்ள படுத்திருக்குறது மாதிரியே தோணுது.
கிழவர்: (ரஜனியிடம்) உனக்கு இந்த ஆளுக்கிட்ட என்ன வேலை?
சாமியார்: நாங்க ஒரு நாவல் காட்டு கதையைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.
மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு, அடக்க முடியாத கோபத்துடன்
கிழவர்: முப்பது வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்திருந்தா உன் பல்லு உன்கிட்ட இருந்திருக்காது. போலி சாமியார்...
சாமியார் புன்னகைக்கிறார்.
கிழவர்: ரஜனி!
ரஜனி பேசாமல் இருக்கிறாள்.
கிழவர்: (உரத்த குரலில்) ரஜனி!
திடீரென்று அவளின் குரல் உயர்கிறது.
ரஜனி: நான் இங்கேதான் இருக்கேன். ஒரு பொணத்தைப் போல கடந்த ஆறு வருஷமா உங்க கூட தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இங்க பாருங்க...
கிழவர்: (கோபத்தை அடக்க முடியாமல்) எனக்கு எல்லாம் தெரியும். நான் செத்துப் போன பிறகு சந்தோஷமா வாழலாம்னு நினைக்காதே. எல்லாத்தையும் நான் அனாதை இல்லத்துக்கு எழுதி வச்சிடுவேன். என்னை ஏமாத்தணும்னு யாராவது நினைச்சா...
ரஜனி: வியாபாரத்துல உங்களுக்கு என்னைக்குமே லாபம்தான். தொந்தரவு பண்ணாம பேசாம போகக்கூடாதா?
கிழவர்: ரஜனி!
ரஜனி: (உரத்த குரலில்) இங்கேயிருந்து போங்க...!
அவளிடம் இதுவரை இப்படியொரு கோபத்தைப் பார்த்திராத கிழவர் என்ன செய்வதென்று தெரியாமல், அதே சமயம் கொஞ்சம் கூட நம்பவே முடியாமல் ரஜனியையே பார்க்கிறார். பிறகு மூச்சுவிட முடியாமல் மூச்சுவிட்டவாறு திரும்பிப் போகிறார்.
அவள் தூணின் மேல் சாய்ந்து நின்றவாறு தேம்பித் தேம்பி அழுகிறாள்.
சாமியார் அமைதியாக நின்றிருக்கிறார்.
அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவர் ரஜனியின் தலையைப் பாசத்துடன் தடவுகிறார்.
சாமியார்: எல்லாத்தையும் தாங்கிக்கிற சக்தியைக் கடவுள் தரட்டும். அழாதம்மா... அழாதே.
ரஜனி: எனக்கு ஒண்ணும் ஏமாற்றம் இல்ல. பதினெட்டு வயசுல இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறப்பவே, இதுக்கு மேல நான் எதையும் எதிர்பார்க்கல.
அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.
சாமியார்: அழாதே... அழாதே...
ரஜனி: (கண்ணீரைக் கையால் துடைத்தவாறு) இல்லை... இனி நான் அழல. இந்த வியாபாரத்தால குடும்பம் பிழைச்சது. ரெண்டு தம்பிமாருங்க படிச்சாங்க. படுக்குறதுக்கு வீடு கிடைச்சது. அடுப்புல ஒரு நாளு கூட தீ அணையல. எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் கிடையாது.
என்னதான் அவள் தனக்குத்தானே ஒரு கட்டுப்பாடு போட்டாலும் அவளால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. அது தகரவே செய்தது. அழுதவாறு அவள் அறைக்குள் ஓடுகிறாள்.
62
நிலவொளி விழுந்து கொண்டிருக்கும் கடல்.
கட்டுமரத்தில் சங்கரனும் பார்வதியும் கரையை நோக்கி வருகிறார்கள். அவள் ஒரு அமைதியான இசையைப் போல கடலில் பயணம் செய்து கரையை அடைகிறாள். கட்டுமரத்திலிருந்து அவன் அவளைக் கையைப் பற்றி கரையில் இறக்குகிறான்.