கன்யாகுமாரி - Page 11
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7571
29
கடற்கரை.
அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வரிந்து கிடக்கும் கடற்கரை. சாமியாரும் ஜெயனும் அங்கு அமர்ந்திருக்கிறார்கள்.
ஜெயன்: டைனிங் ரூம்ல ராத்திரி பார்த்தப்போ எனக்கு நிச்சயமா தெரிஞ்சிடுச்சு - நான் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன். ராத்திரி முழுக்க யோசிச்சுப் பார்த்தேன். எங்கே பார்த்தோம்னு ஞாபகத்துலயே வரல...
சாமியார்: நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். ஜன்னல் பக்கத்துல முதல் தடவையா ஜெயன், உன்னோட முகத்தைப் பார்த்தப்போ எனக்கே எங்கேயோ உன்னைப் பார்த்தது மாதிரி இருந்துச்சு.
ஜெயன்: (ஆச்சரியத்துடன்) என்னையா?
சாமியார் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டுகிறார். அப்போது ரெஸ்ட் ஹவுஸிலிருந்து வரும் பாதையில் கிழவரும், அந்த இளம் பெண்ணும் நடந்து வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். பெண்ணின் கையில் பூத்தட்டும், பூஜை சாமான்களும் இருக்கின்றன. கோவிலில் இருந்து சேட்டும் அவரின் மனைவியும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிழவரையும் இளம் பெண்ணையும் கடந்து ரெஸ்ட் ஹவுஸை நோக்கி போகிறார்கள்.
நீச்சல் உடையணிந்து, பெரிய ஒரு துண்டை தோளில் போட்டவாறு பாதையில் நடந்து வந்த நீச்சலடிக்கும் இளைஞன் ஃப்ரெடரிக் சாமியாரையும் ஜெயனையும் கடந்து தண்ணீரை நோக்கி நடக்கிறான்.
ஜெயனின் கண்கள் அப்போது கிழவருடன் இருக்கும் இளம் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஜெயன்: நானும் கோயிலுக்குப் போகப் போறேன்...
சாமியார் புன்னகைக்கிறார்.
ஜெயன்: சாமி, நீங்க வர்றீங்களா?
சாமியார்: நீ போ, நிழல்களைப் பின்பற்றிப் போகிற காலம் என் வாழ்க்கையில் என்னைக்கோ முடிஞ்சு போச்சு தம்பி...
30
அதிகாலை நேரம்.
சாமியார் நடக்கிறார். ஹிப்பிகள் கூட்டம் எதிரில் வந்து கொண்டிருக்கிறது. சாமியார் அவர்களைக் கடந்து போகும்போது முதல் நாள் இரவு அறைக்குள் வந்த ஹிப்பி அழைக்கிறான்:
“ஹை...!”
அதைக் கேட்டு சாமியார் நிற்கிறார். ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டவாறு நடக்கும் ஹிப்பி அவளை இறுக அணைத்தவாறு சாமியாரிடம்-
ஹிப்பி: டிட் வி ஹாவ் எ டிஸ்கஷன் லாஸ்ட் நைட்?
சாமியார்: (தயங்கியவாறு) இட் வாஸ் நாட் மச் ஆஃப் ஏ டிஸ்கஷன்.
ஹிப்பி: டிட் வி ரீச் எனி வேர்?
சாமியார்: நோ.
ஹிப்பி: ஹா! ஐ தாட் ஸோ!
31
பகல்.
ஓலையால் ஆன கதவுக்கு வெளியே மணலில் வெயில் காய்ந்து கொண்டிருக்கிறாள் கண் பார்வை தெரியாத கிழவி.
விற்பனை செய்யக்கூடிய பொருட்களை தயார் பண்ணும் சிறுவர் - சிறுமிகளும், வயதானவர்களும் மணலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பனை நுங்கு வெட்டுபவர், இளநீர் விற்பவர், மாலை கோர்க்கும் சிறுமிகள்- எல்லோரும் அங்கு இருக்கின்றனர்.
இடுப்பில் மண்குடத்தில் நீர் எடுத்துக் கொண்டு வரும் பார்வதி அவர்களைத் தாண்டி தன்னுடைய சொந்த குடிசையை நோக்கி வருகிறாள். வரும் வழியில் அவள் நிற்கிறாள்- ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.
சாமியார் சேரியின் பின் பக்கத்திலிருந்து நடந்து வருகிறார். அவளைப் பார்த்த சாமியார் மெதுவாக அவளை நோக்கி நடந்து வருகிறார்.
சாமியார்: வியாபாரத்துக்கு இறங்கியாச்சா?
பார்வதி: வீட்டு வேலை முடியலையே!
சாமியார் சுற்றிலும் பார்க்கிறார். அவளின் குடிசை வாசலில் வெயில் காய்ந்து கொண்டிருக்கும் கிழவி.
சாமியார்: சங்கரன் எங்கே?
பார்வதி: முதல் படகுல வேலைக்குப் போயாச்சு.
சாமியார்: என்ன இருந்தாலும் சங்கரன் திறமையான ஆளு... நான் சொல்றது சரிதானே?
பார்வதி பேசாமல் இருக்கிறாள். அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.
சாமியார்: அவனுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும் அப்படித்தானே?
பார்வதி: (கூச்சத்துடன்) சாமி, உங்களுக்கு எப்படி எது தெரியும்?
சாமியார்: எனக்கு எல்லாமே தெரியும். அந்த கரும்பனைக்கு அப்பால் முன்னாடி ஒரு பழைய குளம் இருந்துச்சு. உனக்கு அதெல்லாம் தெரியாது. மல்லிகைத் தோட்டத்தைத் தாண்டி மாரியம்மன் கோவில் இருந்துச்சு.
பார்வதி: சாமி, நீங்க எல்லாத்தையும் நடந்தே பார்த்திருப்பீங்க.
சாமியார்: அதைப் பார்க்காமலே எனக்கு தெரியும். உன் பாட்டியோட பேரு கண்ணம்மாதானே?
பார்வதி: அது எப்படி உங்களுக்குத் தெரியும்?
சாமியார்: சங்கரனுக்கு உன்னைப் பிடிக்கும்னு எனக்கு எப்படித் தெரிஞ்சது?
அவள் வெட்கப்பட்டு அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்துடன் நின்றிருக்கிறாள். ஒரு வேப்பங்குச்சியில் பல்லைத் துலக்கியவாறு வந்து கொண்டிருக்கும் வீரப்பனைப் பார்த்த அவள் வேகமாக குடிசையை நோக்கி நடக்கிறாள். சேரிக்குள் யாரென்றே தெரியாத ஒரு வெளியாள் எதற்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரப்பன் அங்கு வருகிறான்.
சாமியார் அவனை உற்று பார்த்துவிட்டு சுற்றிலும் இருக்கும் ஏழைகளின் உலகத்தைப் பார்க்கிறார். மீண்டும் தனக்கு முன்னால் நின்றிருக்கும் வீரப்பனைப் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் அவன் ஒரு மாதிரி நெளிகிறான். பந்தாவாக வந்த வீரப்பன் பயபக்தியுடன் நின்றிருக்கிறான்.
வீரப்பன்: வணக்கம்!
சாமியார் அமைதியாக கை கூப்புகிறார். பிறகு திரும்பி நடக்கிறார்.
32
பகல்.
வரிசையாக அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள். ஒவ்வொரு கடையாக சுற்றுலாப் பயணிகள் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கிழவரும், அந்த இளம்பெண்ணும்கூட இருக்கிறார்கள். அவர்களுக்குச் சற்று அப்பால் ஜெயன் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான். இப்போது அவனின் நெற்றியில் சந்தனக்குறி இருக்கிறது. ஒரு கடையில் இருந்து வெளியே வருகிறபோது அவள் கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவன் தன்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். கிழவருக்கு அது தெரியாது.
ஒருவகை வெறுப்புடன் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டு இளம் பெண்ணுடன் நடக்கும் கிழவர். அவள் இன்னொரு கடையில் ஏறும்போது -
கிழவர்: என்னால இதுக்கு மேல முடியாது.
பெண்: அப்படின்னா நிழல்ல உட்காருங்க. நான் இப்போ வந்திர்றேன்.
கிழவர்: இங்கே இருக்குற கடைக்காரங்க திருட்டுப் பசங்க. ஒண்ணுக்கு நாலு விலை சொல்லுவாங்க. இங்கே வாங்குற எதுவுமே நாலு நாளுக்கு மேல தாங்காது...
பெண்: சும்மா பார்த்துட்டு வர்றனே!
கிழவர்: (வெறுப்புடன்) வாங்கு... வாங்க வேண்டாம்னு நான் சொன்னேனா என்ன?
33
பலவகைப்பட்ட சங்குகள், வீட்டில் வைக்க வேண்டிய அலங்காரப் பொருட்கள். கடைக்குள் அவள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வருகிறாள். எதுவுமே அவளுக்குப் பிடிக்கவில்லை.
கடைக்காரன்: இதைப் பாரும்மா... எல்லாமே கையால செய்யப்பட்டது.