கன்யாகுமாரி - Page 8
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
18
ரெஸ்ட் ஹவுஸ். சாமியாரின் அறை.
பெட்டியைத் திறந்து வைத்து உட்கார்ந்திருக்கும் சாமியார் என்னவோ யோசிக்கிறார். பிறகு அதில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் வெளியே எடுக்கிறார். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து அறைக்குள் எடுத்து வைக்கிறார். கட்டிலின்மேல் புடவைகளையும், குழந்தையின் ஆடைகளையும் வைக்கிறார்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு குடும்பம் அறைக்குள் இருப்பதாக சாமியார் கற்பனை பண்ணி பார்க்கிறார். நாற்காலியில் வந்து அமர்ந்து ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட அறையைப் பார்க்கிறார் சாமியார்.
எங்கோயிருந்து கேட்கும் குரல். சாமியாரின் காதில் அது விழுகிறது.
பெண்ணின் குரல்: நீ பாலைக் குடிச்சு தூங்கமாட்டியா?
சிறுமி: ஊஹும்.
இன்னொரு சிறுமி: தாத்தா... இந்தக் கணக்கை சொல்லித் தாங்க.
சிறுமிகளின் சிரிப்பு.
தாயின் குரல்: மகளே, நான சொன்னதை கேக்குறியா?
இரண்டு சிறுமிகளும் சேர்ந்து: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ ஒண்டர் வாட் யூ ஆர்
அப் எபவ் தி பேர்ட்ஸ் ஸோ ஹை
லைக் எ டயமண்ட் இன் தி ஸ்கை
சாமியார் தனியாக அமர்ந்து கனவில் மூழ்கியிருந்தது, திடீரென்று அறைக்குள் நுழைந்த ஒரு ஹிப்பியால் கெடுகிறது. அந்த ஹிப்பி அறை கதவைத் திறந்து உள்ளே வருகிறான். அவன் ஏதோ மயக்க மருந்து உள்ளே போனதால் உண்டான போதையில் இருக்கிறான்.
ஹிப்பி: டெல் மீ வாட் இஸ் குண்டலினி?
சாமியார்: அதிர்ச்சியடைந்து உட்கார்ந்திருக்கிறார். ஹிப்பி பின்னால் பார்க்கிறான்.
சிதறிக் கிடக்கும் பெண்கள் அணியும் ஆடைகளைப் பார்க்கிறான். அவனுடைய முகத்தில் எல்லாமே புரிந்து விட்டதைப்போல் ஒரு சிரிப்பு அரும்புகிறது. மூடியிருக்கும் பாத்ரூம் வரை அவனின் பார்வை போகிறது. ஹிப்பி கண்களைச் சுருக்கியவாறு -
“ஸாரி... ஐ டிட் நாட் நோ யூ ஹேட் கம்பெனி. ஐ ஆம் ஸேம் ஃபன் ஓல்ட் பாய்!”
அவன் வெளியே சென்றபிறகு, சாமியார் இருந்த இடத்தை விட்டு எழுகிறார்.
தர்மசங்கடமான மனநிலையுடன் பிரிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து பெட்டிக்குள் வைக்கிறார். சுவரில் இருந்த அழைப்பு மணியை அழுத்துகிறார்.
பணியாள் பாஸ்கரன் வந்து நிற்கிறான்.
சாமியார்: இந்தப் பெட்டியை கவுண்டர்ல கொடுத்திடு. யாராவது வந்து கேட்பாங்க.
பாஸ்கரன் இலேசான போதையில் இருக்கிறான்.
பாஸ்கரன்: அப்போ?
சாமியார்: பஸ்ல வச்சு இந்தப் பெட்டி மாறிடுச்சு...
பணியாள்: அப்போ... சாமி உங்க பெட்டி காணாமப் போயிடுச்சா?
சாமியார்: ஆமா...
பணியாள்: விலை அதிகமான பொருட்கள் ஏதாவது அதுல...
சாமியார்: என் பெட்டியில என்ன இருக்கப் போகுது?
பாஸ்கரன் வெளியே செல்கிறான்
19
ஜெயன் வராந்தாவில் நின்றிருக்கிறான். பணியாள் பெட்டியுடன் போகும்போது ஜெயனைப் பார்த்து நிற்கிறான்.
பணியாள்: தூக்கம் வரலியா?
ஜெயன்: ஆமா...
பணியாள்: குடிக்கிறதை நிறுத்தினா சில நேரங்கள்ல இப்படித்தான்... (குரலைத் தாழ்த்திக் கொண்டு) ஒரு இருநூறு அடிச்சாத்தான் எனக்கு தூக்கமே வருது. இன்னைக்கு எனக்கு எவ்வளவு பிரச்னைன்றீங்க?
பணியாள் பேசுவதில ஆர்வம் காட்டாமல் அவன் கிழவரும் இளம் பெண்ணும் தங்கியிருக்கும் அறைக் கதவையே பார்த்தவாறு நின்றிருக்கிறான். பணியாள் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நின்று அது நடக்காது என்பது தெரிந்து ஏமாற்றத்துடன் நடந்து செல்கிறான்.
நீச்சலடிக்கும் இளைஞன் வெளியே வருகிறான். அந்தப் பக்கம் இருக்கும் சேட் தங்கியிருக்கும் அறையின் மூடப்பட்ட கதவை பார்க்கிறான். வராந்தாவில் நின்றிருக்கும் ஜெயனையும் பார்க்கிறான். அவனைப் பெரிதாக எடுக்காமல் ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு இங்குமங்குமாய் நடந்தவாறு ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து புகைத்தவாறு மீண்டும் தன்னுடைய அறைக்குள் போகிறான்.
நான்காம் எண் அறையில் இருந்து கிழவரின் இருமல் சத்தம். இருமல் நீண்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
20
நான்காம் எண் அறை.
கிழவர் ஒரு மஃப்ளரால் தலையையும் கழுத்தையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தவாறு விடாமல் இருமிக் கொண்டிருக்கிறார். குளியலறைக்குள் இருந்து ஆடைகளை மாற்றி விட்டு வெளியே வருகிற இளம் பெண் அதைப் பார்த்து கிழவரின் முதுகைத் தடவி விடுகிறாள். கிழவர் அவளின் கையைத் தட்டிவிட்டு குனிந்தவாறு இருமுகிறார். இருமலின் முடிவில் அவர் மேல் மூச்சு, கீழ்மூச்சு விடுகிறார்.
இளம்பெண்: மருந்து தரட்டுமா?
மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் கிழவர் பேசுவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு -
“ம்...”
இளம்பெண் மேஜைமேல் இருந்த ஒரு சிறு பெட்டியைத் திறந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறாள். கிழவர் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கைப்பிடியில் இரண்டு மாத்திரைகளை வைக்கிறாள். கிழவர் அதைப் பார்க்கிறார்.
கிழவர்: ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து என்னைக் கொல்லலாம்னு பாக்குறியா?
இளம்பெண்: மூச்சு விடுறதுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குறப்போ ரெண்டு மாத்திரை சாப்பிடலாம்னு டாக்டர்தானே சொன்னாரு?
கிழவர்: ரெண்டு மாத்திரை சாப்பிடுறது இதயத்துக்கு நல்லது இல்ல. உன் முன்னாலதானே டாக்டர் பை சொன்னாரு? அதை மறந்துட்டியா?
அவள் ஒரு மாத்திரையை எடுத்து மீண்டும் பெட்டிக்குள் வைக்கிறாள். கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து தயங்கி நிற்கிறாள்.
பெண்: தண்ணி...
கிழவர் பேசாமல் இருக்கிறார். புரிந்துகொள்ள முடியாத அமைதி.
பெண்: படுக்கலியா?
கிழவர் பெருமூச்சு விட்டவாறு தரையையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.
பெண்: என்ன யோசிக்கிறீங்க?
திடீரென்று கிழவரின் குரல் உயர்கிறது.
கிழவர்: ஏன், நான் யோசிக்கக் கூடாதா?
வெளியே இருப்பவர்கள் எங்கே கேட்டுவிடப் போகிறார்களோ என்று எண்ணிய அவள் பாதி திறந்திருக்கும் கதவை முழுமையாக அடைக்கிறாள்.
21
வராந்தாவில் நின்று கொண்டிருக்கும் ஜெயனின் காதுகளில் அடைக்கப்பட்ட கதவுச்சத்தம் வந்து ஒலிக்கிறது.
அவன் காதுகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேட்கிறான்.
பூட்டிய கதவுக்கு அப்பால் தேம்பி அழும் அந்தப் பெண்ணின் குரல் இலேசாக அவனுக்குக் கேட்கிறது.
நீச்சலடிக்கும் இளைஞன் மீண்டும் வெளியே வந்து சிகரெட்டைப் புகைத்தவாறு நின்றிருக்கிறான். கையில் விஸ்கி கிளாஸ் இருக்கிறது. ஜெயன் தன்னுடைய அறையை நோக்கி நடக்கிறான்.
22
நீச்சலடிக்கும் இளைஞன் வாயில் ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு ஆள் யாரும் இல்லாத வராந்தாவில் இங்குமங்குமாய் நடக்கிறான்.
சேட்டின் பாதி அடைக்கப்பட்ட வாசல் கதவுக்கு வெளியே ஒரு நிமிடம் நிற்கிறான். சேட் படுத்திருக்கிறார். வெண்மையான தடித்த இரண்டு கைகள் அவரின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கின்றன.