பைத்தியக்காரன் - Page 3
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8425
பைத்தியக்காரன்
நான் எப்படி பைத்தியம் ஆனேன் என்று நீங்கள் கேட்கிறீர்கள். தேவர்கள் கூட பிறந்திராத காலத்தில், ஒருநாள் நான் ஆழமான தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தேன். பார்த்த போது கண்ணில் பட்டது இதுதான். ஏழு பிறவிகளாக நான் அணிவதற்காக சம்பாதித்து வைத்திருந்த என்னுடைய எல்லா ஆடைகளும் திருடு போயிருந்தன. மக்கள் கூட்டம் நிறைந்த தெரு வழியாக ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஓடிக் கொண்டே நான் உரத்த குரலில் சொன்னேன்: ‘திருடன்! திருடன்! திருடன்!’ என்னைப் பார்த்த ஆண்களும், பெண்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வேறு சிலரோ உள்ளே ஓடி மறைந்தார்கள்.
நான் கடைத்தெருவிற்குச் சென்றேன். அங்கு இருந்த மாளிகையின் வாசலில் ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
அவன் என்னைப் பார்த்து சொன்னான்: பைத்தியம்! பைத்தியம்! அவனைப் பார்ப்பதற்காக தலையை உயர்த்திய போது என்னுடைய நிர்வாணமான முகத்தில் சூரிய கதிர்களின் முதல் முத்தம் விழுந்தது. என்னுடைய ஆன்மா சூரியனின் கதிர்கள் பட்டு பிரகாசித்தது. அதற்குப் பிறகு எனக்கு ஆடைகள் தேவை என்று தோன்றவில்லை.
‘என்னுடைய ஆடைகளைத் திருடியவன் நன்றாக இருக்கட்டும்’ -நான் உரத்த குரலில் சொன்னேன்.
நான் பைத்தியம் ஆனது இப்படித்தான். பைத்திய நிலையில் என்னால் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், இருக்க முடிந்தது. தனிமை தந்த சுதந்திரம்! புதிரான பாதுகாப்பு!
எனக்கு என்னுடைய பாதுகாப்பைப் பற்றி அந்த அளவிற்கு பெரிய மதிப்பொன்றும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்ட ஒரு திருடன் இன்னொரு கொள்ளைக்காரனால் பாதுகாக்கப்படுகிறான்.
கடவுள்
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு என்னுடைய உதடுகள் மலர்ந்தபோது நான் புனித மலையின் உச்சியில் ஏறி நின்றேன். கடவுளிடம் சொன்னேன்: ‘கடவுளே உங்களின் அடிமை நான். உங்களுடைய ஆழமான விருப்பங்கள், எனக்கு மேல் உள்ள சட்டங்கள். எப்போதும் உங்களின் கட்டளைகளின் படி நான் நடப்பேன்.’
அதற்கு கடவுள் பதிலெதுவும் கூறவில்லை. ஒரு புயலின் வேகத்துடன் அவர் மறைந்து போனார்.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு நான் அந்த புனித மலை மீது மீண்டும் ஏறிச் சென்று கடவுளிடம் பிரார்த்தித்தேன்: ‘உலகைக் காப்பவரே’ உங்களின் படைப்பு நான். நீங்கள் என்னை மண்ணும், களிமண்ணும் சேர்த்து படைத்தீர்கள். என்னிடமிருப்பவை அனைத்தும் நீங்கள் மனம் கனிந்து எனக்கு அளித்தவை.
அவர் எதுவும் சொல்லாமல் பறவைகளின் வேகத்துடன் பறந்து போனார்.
அதற்குப் பின்னால் ஆயிரம் வருடங்கள் ஓடிய பிறகு நான் புனித மலையின் உச்சியில் ஏறி நின்று கடவுளை புகழ்ந்து கொண்டு சொன்னேன்:
‘கடவுளே, உங்களின் குழந்தை நான். மிகுந்த பாசத்துடன் என்னை நீங்கள் படைத்தீர்கள். கருணையுடன் காப்பாற்றுகிறீர்கள். உங்களின் அன்பு, ஆதரவுடன் நான் உங்கள் சாம்ராஜ்யத்தின் அரசனாக ஆவேன்.’
கடவுள் பதில் எதுவும் சொல்லாமல் மலையிலிருந்து தூரத்தில் பரந்து கிடந்த மூடுபனியைப் போல காணாமற் போனார்.
அதற்குப் பின்னால் ஆயிரம் வருடங்கள் கடந்த பிறகு நான் அந்த புனித மலையின் சிகரத்தில் ஏறி நின்று கடவுளை அழைத்து மீண்டும் சொன்னேன்:
‘தந்தையே! நீங்கள்தான் என்னுடைய இலட்சியம். நீங்கள்தான் என்னுடைய நிறைவு. நான் உங்களின் இறந்த காலம். நீங்கள் என்னுடைய எதிர்காலம். நான் பூமியில் உங்களின் உயிர் அணு. நீங்கள் என்னுடைய உயிர் ஓட்டம். நம்முடைய வளர்ச்சி சூரிய வெளிச்சத்தில் ஒரே மாதிரியானது.
இவ்வளவு காலமும் பார்க்காமல் இருந்த கடவுள் என்னை நோக்கித் திரும்பினார். அவர் என்னுடைய காதில் இனிமையான குரலில் மெல்ல சொல்லிக் கொண்டிருந்தார். பாய்ந்து கொண்டிருக்கும் அருவியைத் தன்னுடைய மார்பில் ஏற்றிக்கொள்ளும் கடலைப் போல அவர் என்னைத் தன் மார்போடு சேர்த்து இணைத்துக் கொண்டார்.
நான் மலை உச்சியிலிருந்து இறங்கி அடிவாரத்திற்கும், வெட்டவெளியை நோக்கியும் நடந்தேன். அவர் அங்கேயும் இருந்தார்.
நண்பன்
என் நண்பரே, உண்மையானது நான் இப்போது இருப்பது அல்ல. என்னுடைய வடிவம் நான் மூடியிருக்கும் இந்தப் போர்வை மட்டும்தான். இந்தப் போர்வை மிகவும் அறிவுப்பூர்வமாக நெய்யப்பட்டிருக்கிறது. உங்களின் கேள்விகளில் இருந்து என்னையும், என்னுடைய நிராகரிப்பில் இருந்து உங்களையும் அது காப்பாற்றுகிறது. மவுனத்தின் மறைவில் அது ஓளிந்திருக்கிறது. எப்போதும் அது ஒளிந்துதான் இருக்கும். யாரும் அதை அறிந்திருப்பதில்லை. அங்கு போவதும் இல்லை.
அன்பு நண்பரே, நான் கூறுவதை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியம் பண்ணி கூற நான் விரும்பவில்லை. நான் கூறுவதெல்லாம் என்னுடைய வார்த்தைகள். உங்களுடைய எண்ணங்களின் எதிரொலியே அவை. என்னுடைய செயல்கள் உங்களின் விருப்பங்கள். இந்த நெய்யப்பட்ட ஆடையின் வெளிப்பாடே அதுதான். காற்றின் போக்கு மேற்கு நோக்கி என்று நீங்கள் கூறும்போது, நான் உடனடியாக அதைத் திரும்பச் சொல்கிறேன். இதயத்தில் காற்று இருப்பதற்குப் பதிலாக பெருங்கடலில் அலையடிக்கிறது என்று கூற இப்போது நான் விரும்பவில்லை. நான் விரும்புவது நீங்கள் அங்கு போகாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான். இந்தக் கடலில் தனியாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கிறது.
அன்பு நண்பரே, உங்களுக்கு காலை ஆகும்போது எனக்கு மாலை ஆகிறது. எனினும், நான் மீண்டும் மலை உச்சியில் சுட்டுக் கொண்டிருக்கும் நடுப்பகல் நேரத்தில் ததிக்கும் வெயிலைப் பற்றி பேசுகிறேன். செடிகள் வளர்ந்த புதர்களில் விழுந்திருக்கும் மரங்களின் நிழல்களைப் பற்றிப் பேசுகிறேன். உங்களால் என்னுடைய இருளின் இசையைக் கேட்கவோ நான் நடத்தும் வான நடனத்தைப் பார்க்கவோ முடியாது. நீங்கள் என்னுடைய பாடல்களைக் கேட்பதையோ நடனத்தைப் பார்ப்பதையோ நான் விரும்பவில்லை.
அன்பு நண்பரே, நீங்கள் சொர்க்கத்திற்குப் பறந்து செல்லும்போது நான் நரகத்திற்கு இறங்குகிறேன். கடக்க முடியாத கடலின் கரையில் நின்று கொண்டு நீங்கள் அப்போது என்னை அழைக்கிறீர்கள்:
‘அன்பு நண்பரே, சினேகிதரே!’ அப்போது நானும், உங்களை ‘அன்பு நண்பரே, சினேகிதரே!’ என்று அழைக்கிறேன். நான் என்னுடைய நரகத்தை உங்களுக்குக் காட்ட விரும்பவில்லை. அதன் நெருப்புப் பொறி உங்களின் கண்களில் தெரித்து விழும். உங்களை அதன் புகை மூச்சை அடைக்கச் செய்யும். எனக்கு என்னுடைய நரகத்தைத்தான் மிகவும் பிடித்திருக்கிறது. என் நரகத்தில் நான் மட்டும் தனியே இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.
அன்பு நண்பரே, நீங்கள் சத்தியம், தர்மம், அழகு விஷயங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவற்றுடன் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு பாராட்டப்படக்கூடியது, பொருத்தமானது. நான் உங்களுடைய ஈடுபாட்டை நினைத்து சில வேளைகளில் புன்னகை செய்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சிரிப்பை நீங்கள் பார்ப்பதை நான் விரும்பவில்லை. காரணம் - நான் தனிமையில் சிரிக்க விரும்புகிறேன்.
நண்பரே, நீங்கள் தீர்க்கதரிசி. அனுபவங்கள் கொண்டவர். நீங்கள் எல்லா விஷயங்களிலும் முதல் மனிதர் என்பது எனக்குத் தெரியும். அதனால் நான் உங்களிடம் மிகவும் கவனத்துடன் பேசுகிறேன். அது மட்டுமல்ல; நான் ஒரு பைத்தியக்காரன்! என்னுடைய பைத்தியத் தன்மையை நான் மறைத்து வைக்கிறேன். பைத்தியத்தன்மை வெடிப்பது நான் சிறிதும் விரும்பாத ஒரு விஷயம்.
உண்மையாக சொல்லப்போனால் நீங்கள் என்னுடைய நண்பர் அல்ல. என் பாதை உங்களின் பாதையிலிருந்து மாறுபட்டது என்பதை நான் உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்! எனினும், நாம் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடக்கிறோம்.