பைத்தியக்காரன் - Page 5
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8425
ஏழு ஆத்மாக்கள்
நடு இரவின் அமைதியில் நான் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கும் போது என்னுடைய ஏழு ஆத்மாக்களும் தீவிரமான உரையாடலில் ஈடுபட்டன.
முதல் ஆத்மா: இந்த பைத்தியக்கார நிலையில்தான் இவ்வளவு காலமும் நான் வாழ்ந்திருக்கிறேன். பகலில் அவனுடைய வேதனையைப் புதுப்பித்தேன். இரவில் அவனுடைய துக்கத்தை வேறு மாதிரி ஆக்கினேன். இந்த குழப்பங்கள் உள்ள வேலையில் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் புரட்சிக்குத் தயாராக இருக்கிறேன்.
இரண்டாவது ஆத்மா: சகோதரா! உன் தலையெழுத்து என் தலையெழுத்தைவிட நன்றாக இருக்கிறதே! என்னை இந்த மனிதனின் ஆனந்த ஆத்மாதான் படைத்திருக்கிறது. நான் இவனுடைய சிரிப்பைச் சிரிக்கிறேன். பாடலைப் பாடுகிறேன். நடனத்தை ஆடுகிறேன். நான் துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக்கு எதிராக புரட்சி செய்ய தயார்.
மூன்றாவது ஆத்மா: பிரேத ஆத்மாவான என் கதையைக் கேட்க வேண்டுமே! பலவிதப்பட்ட ரசனைகளின், பலவகைப்பட்ட செயல்களின் படைப்பு நான். இவனுக்கு எதிராக போர் புரிவதுதான் என் நோக்கம்.
நான்காவது ஆத்மா: தாங்க முடியாத வெறுப்பு, அழிவைத் தரும் செயல்கள்- இவற்றைத் தவிர வேறு எதுவும் கிடைத்திராத என் கதை உங்களுடைய கதைகளை விட எவ்வளவு பரிதாபமானது! நரகத்தின் இருட்டறையில் பிறந்த புயலைப் போன்ற ஒரு ஆத்மா மட்டுமான நான், இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக போர் புரியப் போகிறேன்.
ஐந்தாவது ஆத்மா: நிரந்தர சிந்தனையாளனும் செயல் வீரனும் ஆன என்னுடைய தலையில் அறிவுக்கு வேலையற்ற கற்பனையான பொருட்களைக் குறித்து கஷ்டப்பட்டு விசாரிக்க வேண்டும் என்ற கட்டளை வைக்கப்பட்டிருக்கிறது. நீங்களல்ல - நான்தான் புரட்சிக்கு இறங்க வேண்டியவன்.
ஆறாவது ஆத்மா: தளர்ந்து போன கைகளையும் தாகமெடுத்த கண்களையும் கொண்டு வேலை செய்யும் சோர்வடைந்து போன தொழிலாளி நான். நாட்டுக்கு மிகப் பெரிய வடிவத்தையும், நிமிடங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தையும் தருகிறோம். நான் இந்த பைத்தியக்காரனுக்கு எதிராக புரட்சி செய்வேன்.
ஏழாவது ஆத்மா: நீங்கள்தான் உங்களில் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள எழுத்தை எழுதி முடிக்க வேண்டியவர்கள். கஷ்டம்! நான் உங்களைப் போல ஒரு தலையில் எழுத்து உள்ளவனாக இருந்தால்...! ஆனால், என் விதி அதுவல்ல. நான் ஒரு தேவைப்படாத ஆத்மா. நீங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை இயக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது, நான் செய்யக் கூடாததும் இலக்கு அற்றதுமான ஒரு இடத்தில் அடங்கி ஒதுங்கி உட்காந்திருப்பேன்.
என் நண்பர்களே, நீங்கள் ஒன்று கூறுங்கள். போருக்குத் தயாராக வேண்டியது நீங்களா, நானா?
ஏழாவது ஆத்மா இதைச் சொன்னதும், மற்ற ஆறு ஆத்மாக்களும் அதை இரக்கத்துடன் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். இரவு முடிவற்று நீண்டு கொண்டிருந்தபோது, புதுமையான ஆனந்தத்தின் அடிமைத் தனத்தில் அவை திருப்தியடைந்து தூங்க ஆரம்பித்தன.
ஆனால், ஏழாவது ஆத்மா அன்னியர்கள் பார்க்க முடியாத பொருட்களுக்கு இடையிலுள்ள கூர்மையான விஷயங்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தது.
சட்டம் செயலாக்கல்
அன்று இரவு அரண்மனையில் ஒரு விருந்து நடைபெற்றது. அரசனுக்கு நேராக ஒரு மனிதன் போய் நின்றான். விருந்தினர் அந்த மனிதனை வெறித்துப் பார்த்தார்கள். அந்த மனிதனின் ஒரு கண் வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. காயத்திலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ‘உங்களுக்கு எப்படி இது நடந்தது?’ மன்னன் கேட்டான்.
அவன் சொன்னான்: ‘நான் ஒரு திருடன். ஒரு பணக்காரனின் வீட்டிற்கு நிலவு தோன்றுவதற்கு முன்பு திருடுவதற்காகச் சென்றேன். ஆனால், வழி தவறி நெசவு நெய்பவன் வீட்டிற்குள் நுழைந்து விட்டேன். நான் சாளரத்தின் வழியாக உள்ளே குதித்தபோது, என்னுடைய தலை தறியில் மோதி கண் பாதிக்கப்பட்டுவிட்டது. அந்த நெசவு நெய்பவனை வரவழைத்து, விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
மன்னன் நெசவு நெய்பவனை வரவழைத்து, அவனுடைய ஒரு கண்ணைத் தோண்டி எடுக்க வேண்டுமென்று உத்தரவு போட்டான்.
அதற்கு நெசவு நெய்பவன் சொன்னான்: ‘மன்னரே! தங்களின் தீர்ப்பு நியாயமற்றதாகவும், பொருத்தமில்லாததாகவும் இருக்கிறது. எனக்கு இரண்டு கண்கள் இருந்தால் தான் ஆடைகள் நெய்யும்போது இரண்டு பக்கங்களையும் பார்க்க முடியும். என் தெருவில் ஒரு செருப்பு தைப்பவன் இருக்கிறான். உண்மையாக சொல்லப் போனால் அவனுக்கு இரண்டு கண்கள் தேவையே இல்லை!’
அதைக் கேட்டு மன்னன் செருப்பு தைப்பவனை வரவழைத்து, அவனுடைய இரண்டு கண்களில் ஒன்றைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவு போட்டான்.
அந்த வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நரி
காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது: ‘எனக்கு இன்று காலை உணவுக்கு ஒரு யானை கிடைக்க வேண்டும்.’
யானையைத்தேடி மதியம் வரை அது அலைந்து திரிந்தது. ஆனால், மதியம் தன் நிழலைப் பார்த்த நரி சொன்னது: ‘எனக்கு ஒரு எலி கிடைத்தால் கூட போதும்!’
அறிவாளி அரசன்
பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஒரு நகரத்தில் ஒரு அரசன் இருந்தான். எல்லோரும் அவனுடைய வீரச் செயல்களைப் பார்த்து பயப்பட்டார்கள். புத்திசாலித்தனத்திலும், காரியங்களை நிறைவேற்றுவதிலும் அவன் மக்கள் விரும்பக்கூடிய வகையில் இருந்தான்.
அவனுடைய நகரத்தின் நடுவில் ஒரு கிணறு இருந்தது. குளிர்ந்த பனிக்கட்டியைப் போல அதிலிருந்த நீர் இருந்தது. முத்துமணியைப் போல அது தெளிவானதாகவும் இருந்தது. நகரத்தின் மக்களும், அரசரும், அவனுடைய படைகளும் அந்தக் கிணற்றில்தான் நீர் பருகினார்கள். அங்கு வேறு கிணறு எதுவும் இல்லை.
ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்தக் கிணற்றிற்குள் ஏழு துளிகள் மருந்தை ஊற்றியவாறு கெட்ட தேவதை சொன்னது: ‘இனி இந்தக் கிணற்றில் நீர் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.
மறுநாள் அரசனையும் அமைச்சர்களையும் தவிர, மற்ற எல்லாரும் கிணற்றிலிருந்த நீரைக் குடித்தார்கள். கெட்ட தேவதை சொன்னதைப் போல அவர்கள் பைத்தியக்காரர்களாக ஆனார்கள்.
அன்று நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு மூலையிலும் நின்று கொண்டு மனிதர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்: ‘நம்முடைய அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது. நம்மால் இனிமேல் இவர்களுடைய ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களை பதவியிலிருந்து இறக்க வேண்டும்.’
மாலை நேரம் ஆனதும் அரசன் ஒரு பொற்குடத்தில் அந்தக் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரும்படி செய்தான். அவன் அதைக் குடித்ததோடு நிற்காமல் அமைச்சர்களையும் குடிக்கும்படி செய்தான். அதற்குப் பின் நடந்த கதை என்ன! நகரம் முழுக்க பாட்டும், மேளச் சத்தமும், கொண்டாட்டமும் தான். அரசன், அமைச்சர்கள் ஆகியோரின் பைத்தியம் குணமாகிவிட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.