பைத்தியக்காரன் - Page 10
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8425
ஆசை
என் சகோதரனான மலைக்கும், சகோதரியான கடலுக்கும் மத்தியில் நான் இருக்கிறேன். நாங்கள் மூவரும் தனியாக இருக்கும்போது ஒரே மாதிரியானவர்கள். எங்களைப் பிணைத்திருக்கும் அன்பு ஒன்றோடொன்று நெருக்கமானதும், ஆழமானதும், ஆச்சரியமானதும், நினைத்துப் பார்க்க முடியாததும், கண்ணால் பார்க்க முடியாததும் ஆகும். அதன் ஆழம் என் சகோதரியிடம் இருப்பதை விட அதிகம். அதன் சக்தியோ என் சகோதரனிடம் இருப்பதை விட அதிகம். அது என் பைத்திய நிலையை விட வினோதமானது.
பல யுகங்கள் கடந்து விட்டன. நாங்கள் முதல் புலர் காலைப் பொழுதின்போது ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்றாலும், நாங்கள் குழந்தைப் பருவ - இளமைப் பருவ மரணங்களைப் பார்த்தவர்கள் என்றாலும், அதற்குப் பிறகும் இளமை எண்ணங்கள் கொண்டவர்களாக, ஆவேசம் உள்ளவர்களாக, இனிமையாக வாழ்கிறோம். எங்களின் இதயத்தில் ஆசைகளும், பேராசைகளும் இருக்கின்றன என்றாலும் நாங்கள் எல்லா நேரத்திலும் தனிமையானர்களே. யாரும் அருகில் வராமல், கால ஓட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொள்கிறோம். எனினும், நாங்கள் சந்தோஷத்துடன் இல்லை. அழுத்தப்பட்டிருக்கும் ஆசைகள், பேராசைகள் ஆகியவற்றுக்கு எங்கு அமைதி கிடைக்கும்?
என் சகோதரியின் படுக்கைக்கு வெப்பம் தரும் நெருப்புக் கடவுள் எங்கு இருக்கிறான்? சகோதரனின் இதயத்தைக் குளிரச் செய்யும் சக்திகள் எங்கே? என் மனதை அடக்கி ஆளும் அந்த அழகி எங்கே?
என் சகோதரி இரவின் அமைதியில் வெப்பம் தரும் நெருப்புக் கடவுளை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறாள். சகோதரன் குளிர் தேவதையை அழைத்து அழுது கொண்டு இருக்கிறான். ஆனால், யாரை அழைப்பது? தெரியவில்லை.
நான் இங்கு சகோதரனான மலைக்கும, சகோதரியான கடலுக்கும் மத்தியில் இருக்கிறேன். எங்களை ஒருவரோடொருவர் பிணைத்திருக்கும் அந்த அன்பு மிகவும் ஆழமானது. அசாதாரணமானது. கண்ணால் பார்க்க முடியாதது. பலமானது.
புல் கூறியது
இலையுதிர் காலத்தில் கீழே விழுந்த இலைகளைப் பார்த்து புல் சொன்னது: ‘நீங்கள் விழும்போது எதற்காக ஓசை உண்டாக்க வேண்டும்? இந்த ஓசை, என்னுடைய ஆழமான அமைதியைக் கெடுக்கிறது.
அதைக்கேட்டு இலைகளுக்கு கோபம் வந்தது. அவை கூறின: ‘முட்டாளே பாடலைப் பற்றித் தெரியாத புல்லே, காற்றில் பறக்க முடியாத உனக்கு ராகத்தின் இனிமையைப் பற்றி என்ன தெரியும்?’
இலைகள் நிலத்தில் விழுந்து உறக்கத்தில் ஆழ்ந்தன. அவற்றின் கண்கள் வசந்த காலத்தில் திறந்தன. அப்போது அவை புற்களாக மாறி விட்டிருந்தன.
இலையுதிர் காலம் மீண்டும் வந்தது. குளிரில் புல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. சுற்றிலும் கூடியிருந்த இலைகளைப் பார்த்து புல் கோபப்பட்டது. ‘இந்த இலையுதிர் காலத்தில் இலைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டு என் சுகமான உறக்கத்தைக் கெடுக்கின்றன.’
பார்வை
ஒரு நாள் கண் சொன்னது: ‘இந்த அடிவாரத்தைத் தாண்டி இருக்கும் பனி படர்ந்த மலைகள் எவ்வளவு அழகானவை.’
காது அதைக் கேட்டு சிறிது சிந்தித்தவாறு சொன்னது: ‘மலை எங்கே இருக்கிறது? என்னால் அதைக் கேட்க முடியவில்லையே!’
கை சொன்னது: ‘தொடவோ, என்னால் உணரவோ முடியவில்லை. எனக்கு ஒரு மலையும் கிடைக்கவில்லை.’
மூக்கு சொன்னது: ‘இங்கு ஒரு மலையும் இல்லை. எனக்கு அதன் ஒரு வாசனையும் தெரியவில்லை.’
கண் திரும்பிப் பார்த்தது. அதைப்பற்றி மூவரும் ஆச்சரியத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கூறினார்கள்: ‘கண்ணுக்கு ஏதோ பிரச்னை! அது மட்டும் உண்மை.’
இரண்டு முக்கிய மனிதர்கள்
ஒரு பழமையான நகரத்தில் இரண்டு முக்கிய மனிதர்கள் இருந்தார்கள். முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் அவர்கள். எந்த நேரத்திலும் ஒருவரையொருவர் கிண்டல் பண்ணிக் கொண்டு அவர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். இன்னொருவர் கடவுள் மறுப்பாளர்.
கடை வீதியில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். தங்களைப் பின்பற்றும் மனிதர்கள் முன்னால் அவர்கள் இருவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. கடவுளுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் நீண்ட நேரம் சண்டை போட்டு விட்டு அவர்கள் பிரிந்து சென்றார்கள்.
அன்று மாலையில் தேவாலயத்திற்குச் சென்ற கடவுள் மறுப்பாளர் தன்னுடைய பாவச் செயல்களைச் சொல்லி மன்னிப்பு கேட்டார். அதே நேரம் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தவர், தனக்குள் இருந்த கடவுள் பற்றிய சிந்தனைகளை விட்டெறிந்து விட்டு தான் வைத்திருந்த வேத நூல்களை நெருப்புக்கு இரையாக்கினார். அதற்குப் பிறகு அவர் கடவுள் மறுப்பாளராக மாறிவிட்டார்!
கவலை பிறந்த போது
கவலை பிறந்த போது நான் அதை கவனம் செலுத்தி அக்கறையுடன் வளர்த்தேன்.
மற்ற எல்லா விஷயங்களையும் போல என்னுடைய சுக துக்கங்களும் வளரத் தொடங்கின- பலமாக, அழகாக மகிழ்ச்சியுடன்.
நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருந்தோம். எங்களைச் சுற்றி இருந்த உலகத்தை நேசித்தோம்.
சினேகத்தின் மென்மைதான் துக்கத்தின் இதயத்தில் இருக்கிறது. என் இதயம் கவலைகளால் நிறைந்த ஈரத்துடன் இருந்தது.
நானும் என்னுடைய கவலைகளும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தபோது பகல் விரிந்த சிறகுகளுடன் பறந்து செல்லும். கனவுகள் கொண்ட இரவு. பேச்சில் திறமைசாலி துக்கம். அதன் மூலம் நானும் பேசுவதில் திறமைசாலியாக மாறினேன்.
நானும் என் துக்கமும் ஒன்றாக அமர்ந்து பாடுவது உண்டு. எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் சாளரத்தைத் திறந்து வைத்துக் கொண்டு அதைக் கேட்பார்கள். கடலைப் போல, ஆழமானது எங்களின் பாட்டு. ஆச்சரியத்தின் நினைவுகள் எங்களின் குரல்களில் ஒளிந்து கிடந்தன.
நானும் என் துக்கமும் ஒன்று சேர்ந்து பயணம் செய்யும்போது மக்கள் பாசத்துடன் எங்களைப் பார்த்து இனிய குரலில் பாடுவார்கள். ஆனால், சிலர் எங்களை வெறுக்கவும் செய்தார்கள். அதற்குக் காரணம் - என் துக்கம் மதிப்பு மிக்கதாக இருந்தது. எனக்கும் என் துக்கத்தின் மீது மரியாதை இருந்தது. சாதாரணமாக அழியும் பொருட்களைப் போல என் துக்கமும் அழிந்து போனது! அழுவதற்கு நான் மட்டும் எஞ்சி நின்றேன்.
நானொன்று கூறட்டுமா? இனிமேல் என் குரல் என் செவிகளுக்குள் நுழையும் திரிசூலமே. நான் பாடும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பதற்கு காத்து நிற்பதில்லை. நான் நடக்கும்போது அவர்கள் பார்ப்பதற்காக நிற்பதில்லை.
முழுமையான வேதனை நிறைந்த குரல்கள் இப்போது என் காதுகளில் கேட்கின்றன.
‘அதோ பாருங்கள், அவனிடம் இப்போது கவலைகள் இல்லை!’