பைத்தியக்காரன் - Page 4
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8425
சோலைக் கொள்ளை பொம்மை
நான் சோலைக் கொள்ளை பொம்மையைப் பார்த்து ஒரு நாள் கேட்டேன்: ‘இந்த பாழாய்ப் போன வயலில் நின்று நின்று உங்களுக்கே ஒரு மாதிரி வெறுப்பு உண்டாகி இருக்குமே!’
அதற்கு அது சொன்னது: ‘மிருகங்களை பயமுறுத்தி விரட்டுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம். பிறகு எதற்கு வெறுப்பு தோன்றப் போகிறது?’
நான் ஒரு நிமிடம் சிந்தித்தேன்: ‘நீங்கள் கூறுவது உண்மைதான். நானும் இத்தகைய ஆனந்தத்தை அனுபவித்திருக்கிறேன்.’
‘புல்லும் வைக்கோலும் நிறைக்கப்பட்ட உடலைக் கொண்டவர்க்கே அதன் உண்மை தெரியும்.’
அதைக் கேட்டவாறு நான் அதே இடத்தில் நின்று விட்டேன். என்னை அந்த சோலைக்கொள்ளை பொம்மை புகழ்ந்ததா இல்லாவிட்டால் கேவலமாகப் பார்த்ததா என்று எனக்குத் தெரியாது.
ஒரு வருடம் கடந்தது. இதற்கிடையில் சோலைக் கொள்ளை பொம்மை தத்துவஞானியாக மாறி விட்டிருந்தது. நான் மீண்டும் அதைக் கடந்து சென்றபோது, இரண்டு காகங்கள் அதன் தலையில் கூடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
கனவில் நடப்பவர்கள்
நான் பிறந்த கிராமத்தில் ஒரு தாயும் மகளும் இருந்தார்கள். அவர்களுக்கு கனவில் நடக்கும் பழக்கம் இருந்தது.
உலகமே மிகவும் அமைதியாக இருந்த ஒரு இரவு வேளையில் தாயும் மகளும் நடந்து திரிந்து மூடுபனி போர்த்திக் கொண்டிருந்த ஒரு மைதானத்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள்.
தாய் சொன்னாள்: ஆமாம் ஆமாம்... விஷயம் புரிந்து விட்டது. அப்படியென்றால் நீதான் என் விரோதி. நீதான் என்னுடைய இளமையை அழித்தவள். நீ என் வாழ்க்கையின் அழிவில் உன்னுடைய வாழ்க்கையின் வனப்பை உண்டாக்கிக் கொண்டாய். உன்னை நான் கழுத்தை நெரித்து கொன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
அதற்கு மகள் சொன்னாள்: ‘அடியே... சுயநலம் பிடித்த தாயே ! நீ என்னுடைய அமைதியான வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பவள். என்னுடைய இளமை உன்னுடைய வாடி வதங்கிப்போன வாழ்க்கைக்கு எதிரானது என்று யார் கூறினார்கள்? கடவுள் உன்னைக் கொன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’
கோழி கூவியது. இருவரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். தாய் அன்புடன் சொன்னாள்: ‘என் அருமை மகளே...’
மகள் மிகுந்த பாசத்துடன் பதில் சொன்னாள்: ‘என்னுடைய அன்பான அன்னையே...’
புத்திசாலியான நாய்
ஒரு பூனைக் கூட்டத்திற்கு மத்தியில் புத்திசாலியான ஒரு நாய் போய் நின்றது. அவன் பார்த்தபோது பூனைகள் தங்களை மறந்திருந்தன. அவன் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்தபோது, அவன் அந்த பூனைகள் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து கேட்டான். ஒரு தடித்து கொழுத்த பூனை எழுந்து சென்று மற்ற பூனைகளைப் பார்த்து சொன்னது: ‘சகோதரிமார்களே! நீங்கள் பக்தி உணர்வுடன் கடவுளைத் தொழ வேண்டும். தொடர்ந்து கடவுளைத் தொழுதால், வானத்திலிருக்கும் மேகங்களிலிருந்து எலிகள் மழையாகப் பெய்யும்.’
நாய் அதைக்கேட்டு சிரித்தவாறு தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தது. ‘கண் இல்லாத முட்டாள்களே! பிரார்த்தனை பண்ணுவதால் மகிழ்ச்சியடையும் கடவுள் எலிகளை அல்ல, எறும்புகளைத்தான் மழையாகப் பெய்ய வைப்பார் என்று உங்களின் முன்னோர்கள் கூறியதாக நீங்கள் கேள்விப்படவோ, புராணங்களில் படிக்கவோ இல்லையா?’
இரண்டு துறவிகள்
இரண்டு துறவிகள் ஒரு மலையில் வாழ்ந்தார்கள். கடவுளைத் தொழுவதையும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்துவதையும் தவிர அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. அவர்களிடம் ஒரு மண் சட்டி இருந்தது. அவர்களிடமிருந்த ஒரே சொத்து அதுதான். ஒரு நாள் மூத்த துறவியின் மனதில் பொறாமைத் தீ உண்டானது. அவர் இளைய துறவியின் அருகில் சென்று சொன்னார்: ‘ நீண்ட காலமாக நாம் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இப்போது நாம் பிரிய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. வாருங்கள்... நம்முடைய சொத்தை நாம் பிரித்துக் கொள்வோம்.’
‘உங்களைப் பிரிந்திருப்பது என்பது எனக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் இங்கிருந்து பிரிந்து போவது என்று முடிவெடுத்து விட்டால், அதைப் பற்றி நான் என்ன கூற இருக்கிறது?’ என்று கூறியவாறு இளைய துறவி மூத்த துறவிக்கு முன்னால் மண் சட்டியைக் கொண்டு வந்து வைத்தார்.
‘இது மட்டுமே நமக்கு என்று இருக்கின்ற ஒரே சொத்து. இதை இரண்டாகப் பிரிப்பது என்பது முடியாத காரியம்; அதனால் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’
‘வேண்டாம்’ மூத்த துறவி சொன்னார்: ‘எனக்கு இன்னொருத்தரின் இரக்கம் தேவையில்லை. எனக்கு என்னுடைய சொத்து கிடைத்தால் போதும். வேறொருவரின் சொத்து வேண்டாம். அதனால், இந்தச் சட்டியைப் பாகம் பிரித்தே ஆக வேண்டும்!’
‘இது உடைந்து போய் விட்டால் நமக்கு அதனால் என்ன பயன்? உங்களுக்கு சம்மதம் என்றால் இலைபோட்டு தீர்மானிப்போம்!’
அதற்கு மூத்த துறவி ஒத்துக்கொள்ளவில்லை.
‘நியாயமாக எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும். கூடுதலாகவும் வேண்டாம். குறைவாகவும் வேண்டாம். நியாயத்தை அதிர்ஷ்டத்திற்கு விட்டுத் தர நான் தயாராக இல்லை. கட்டாயம் நாம் இதை பங்கு வைக்க வேண்டும்.’
இளைய துறவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவர் சொன்னார்:
‘உங்களுக்கு அதுதான் விருப்பமென்றால், இதைத் தட்டி உடைப்போம்.’
அதைக் கேட்டதும் மூத்த துறவியின் முகம் சிவந்து விட்டது. ஆச்சரியத்துடன் சொன்னார்:
‘அடே கோழை மனிதனே! நீ இந்த சட்டிக்காக என்னுடன் போர் புரிய தயாராக இல்லையா?’
கொடுக்கல் – வாங்கல்
கொஞ்சம் ஊசிகளை வைத்திருந்த ஒருவன் இருந்தான். அவனிடம் சென்று ஒரு பெண் கேட்டாள்: ‘என் மகனுடைய துணி கிழிந்துவிட்டது. பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பு அதைத் தைத்துத் தர வேண்டும். ஒரு ஊசி தர முடியமா?’
அவன் ஊசியைத் தரவில்லை. கொடுக்கல் - வாங்கலைப் பற்றி ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றினான். பிறகு பெண்ணிடம் சொன்னான்:
‘பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பு மகனுக்கு இந்தச் சொற்பொழிவை ஆற்று.’