பைத்தியக்காரன் - Page 7
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8425
மூன்று எறும்புகள்
ஒரு மனிதன் வெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று எறும்புகள் அவனுடைய மூக்கின்மீது உட்கார்ந்து கொண்டு மரியாதை நிமித்தமாக ஒன்றையொன்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தன - பேசிக் கொண்டிருந்தன.
முதல் எறும்பு: ‘இந்த மலைப்பகுதிகளிலும், புதர்களிலும், வயலிலும், வரப்பிலும்... எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தும் எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை.’
இரண்டாவது எறும்பு: ‘நானும் அலைந்து திரிந்தேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. சுற்றிலும் சந்தோஷமும் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில்தான் எதுவுமே நடக்கவில்லை என்று நம்முடைய ஆட்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.’
அதைக்கேட்டு மூன்றாவது எறும்பு தன் தலையை உயர்த்தியது.
அது சொன்னது:
‘நண்பர்களே! நாம் இப்போது ஒரு மிகப்பெரிய மனிதனின் மூக்கின் மீது இருக்கிறோம். நாம் பார்த்தால் கூட பார்வைக்கு எட்டாத அளவிற்குப் பெரிய உடலை இவன் கொண்டிருக்கிறான். எப்படிப்பட்டவன் என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பயங்கரமானது. இவனுடைய குரல் நம்முடைய காதுகளால் கேட்க முடியாத அளவிற்கு கம்பீரமானது. மொத்தத்தில் பயம் தரக் கூடியவன் இவன்.
மூன்றாவது எறும்பின் பேச்சைக் கேட்டு, மற்ற இரு எறும்புகளும் விழுந்து விழுந்து சிரித்தன. அந்த மனிதன் அதிர்ச்சியடைந்து தூக்க கலக்கத்துடன் மூக்கைக் கையால் தடவினான். அடுத்த நிமிடம் மூன்று எறும்புகளும் நசுங்கி இறந்துவிட்டன.’
குழி வெட்டுபவன்
ஒரு நாள் ஒரு இறந்த உடலைப் புதைக்கும்போது குழி தோண்டும் மனிதன் என்னிடம் சொன்னான்:
‘இங்கு ஏராளமான பேர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தாலும், எனக்கு உங்களைத்தான் மிகவும் பிடித்திருக்கிறது.’
நான் சொன்னேன்: ‘மிகவும் மகிழ்ச்சி! நீங்கள் என்னை விரும்புவதற்கான காரணம் என்ன?’
அவன் காரணம் சொன்னான்: ‘மற்றவர்கள் இங்கு அழுது கொண்டே வருகிறார்கள். அழுதுகொண்டே போகிறார்கள். ஆனால், நீங்கள் சிரித்துக் கொண்டே வருகிறீர்கள். இப்போது சிரித்துக் கொண்டே போகிறீர்கள்.’
மண்டபத்தில்
ஒரு பெண், நேற்று சாயங்காலம் தேவாலயத்தின் பளிங்குக் கல்லால் ஆன மண்டபத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
அவளின் இரு பக்கங்களிலும் இரு ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவளுடைய ஒரு கன்னம் வெளிறிப் போயிருந்தது. இன்னொரு கன்னம் சிவந்து போய் காணப்பட்டது.
புனித நகரம்
என் இளமைக் காலத்தில் நான் ஒரு புனித நகரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிக்கிறேன். வேதங்களில் கூறப்பட்டிருப்பதைப் பின்பற்றி அங்குள்ள மக்கள் ஒழுக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
நான் அந்த நகரத்தைப் பார்க்க வேண்டும். அந்த புண்ணிய பூமிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
நகரம் மிகவும் தூரத்திலிருந்ததால், நான் நீண்ட தூர பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.
நாற்பதாவது நாள் நகரத்தை நெருங்கினேன். மறுநாள் நகரத்திற்குள் நுழைந்தேன்.
அந்த நகரத்து மக்கள் எல்லாரும் ஒற்றைக் கண் உள்ளவர்களாகவும், ஒரே ஒரு கையை உள்ளவர்களாகவும் இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.
என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய இரு கண்களும், இரு கைகளும் தான் அதற்குக் காரணம். பேசிக்கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் கேட்டேன்: ‘இதுதான் வேதத்தில் கூறப்பட்டிருப்பதன்படி நடந்து கொண்டிருப்பவர்களின் புனித நகரமா?’
‘ஆமாம்.... அது இதுதான்.’
நான் கேட்டேன்: ‘உங்களுக்கு இது எப்படி நடந்தது? உங்களின் வலது கைக்கும் வலது கண்ணுக்கும் நடந்தது என்ன?’
வாருங்கள்.... காட்டுகிறோம்.’ அந்த மனிதர்கள் சொன்னார்கள். அவர்கள் என்னை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அது நகரத்தின் நடுவில் இருந்தது. வாசலில் கோடிக்கணக்கான கண்களும் கைகளும் மலையென குவிந்திருந்தன. அவை கீழே கிடந்து துடித்துக் கொண்டிருந்தன.
நான் சொன்னேன்: ‘இந்தப் பயங்கரச் செயலைச் செய்தது யார்?’
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். வயதான மனிதர் சொன்னார்: ‘இது எங்களின் வேலைதான. வேறு யாரும் இதைச் செய்யவில்லை. தெய்வம் எங்களின் பாவச் செயல்களுக்காக கொடுத்த தண்டனை இது.’
அவர் என்னை ஒரு உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். எங்களை மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். அங்கு இப்படி எழுதப்பட்டிருந்தது:
‘உங்களுடய வலது கண் உங்களை வழி தவறி நடக்கச் செய்கிறது என்றால், அதைத் தோண்டி எடுத்து விடுங்கள். உடல் முழுவதும் நகரத்தில் கிடந்து துடிப்பதை விட ஒரு உறுப்பு இல்லாமற்போவது எவ்வளவோ மேல். உங்களுடைய வலது கை கெட்ட செயலைச் செய்யும்படி தூண்டினால், அதை வெட்டி எடுத்து விடுங்கள். உங்களுக்கு ஒரு உறுப்பு இல்லாமற்போகும். மீதி உடலை நரகத்திலிருந்து காப்பாற்றலாம்.’
அதைப் படித்தபோது எனக்கு விஷயம் புரிந்து விட்டது. நான் திரும்பி நின்று எல்லோரையும் பார்த்து கூறினேன்: ‘உங்கள் மத்தியில் இப்போது இரண்டு கண்களையும், இரண்டு கைகளையும் கொண்ட ஒரு மனிதன் கூட இல்லை. அப்படித்தானே?’
‘யாரும் இல்லை’ எல்லாரும் ஒரே குரலில் கூறினார்க்ள. ‘இந்த வாசகங்களைப் படித்து கொள்ளக் கூடிய வயதை இன்னும் அடைந்திராத குழந்தைகளைத் தவிர, வயதான யாரும் இல்லை.’
நான் அந்த தேவாலயத்திலிருந்து வெளியே வந்தேன். நான் ஒரு குழந்தை அல்ல. அந்த வாசகங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க எனக்குத் தெரியும்.
பிசாசும் தேவதையும்
மலையின் உச்சியில் பிசாசும் தேவதையும் சந்தித்துக் கொண்டார்கள். தேவதை சொன்னது: ‘இந்தக் காலை வேளையில் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்.’
அதற்கு பிசாசு பதில் எதுவும் கூறவில்லை.
தேவதை மீண்டும் சொன்னது: ‘என்ன, உங்களுக்கு உடல் நலம் இல்லையா என்ன?’
அதற்கு பிசாசு சொன்னது; ‘என்னை மனிதர்கள் தவறாக எடை போட்டு எவ்வளவோ காலமாகிவிட்டது. என்னை உங்களின் பெயரைச் சொல்லித்தான் இப்போது அழைக்கிறார்கள். உங்களை வணங்குவதைப் போல என்னையும் வணங்குகிறார்கள். அதை நினைத்து எனக்கு வெறுப்பாக இருக்கிறது.’
அதைக் கேட்டு தேவதை சொன்னது: ‘என்னையும் மனிதர்கள் தவறாக எடை போட்டு விட்டார்கள். உங்களின் பெயரைச் சொல்லி என்னை அழைக்கிறார்கள்.’
மனிதர்களின் அறிவற்ற செயலை நினைத்து கவலைப்பட்டவாறு பிசாசு அங்கிருந்து கிளம்பியது.