மணலும் நுரையும் - Page 8
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9320
ஒன்று மட்டும்
அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள் :
நீ இந்த உலகத்தின் சுகங்களுக்கும்
மறு உலகத்தின் துக்க- சமாதானங்களுக்கும்
நடுவில் இருந்துகொண்டு ஏதாவதொன்றைத்
தேர்வு செய்ய வேண்டும்.
நான் அவர்களிடம் கூறுகிறேன் :
நான் இரண்டையும் தேர்வு செய்திருக்கிறேனே!
இந்த உலகத்தில் சுகங்களையும்
மறு உலகத்தில் துக்க- சமாதானங்களையும்.
காரணம்-
எனக்கு என் இதயத்திற்குள் இருப்பது தெரியும்.
பிரபஞ்ச கவிஞர் ஒரு கவிதையை மட்டுமே
எழுதியிருக்கிறார் என்பது.
அந்தக் கவிதையோ
முழுமையான ஒத்திசைவைக் கொண்டிருக்கிறது.
முழுமையான வார்த்தை அலங்காரத்தைக்
கொண்டிருக்கிறது.
*****
கபடம்
மிடுக்கான செந்நாய் அப்பிராணி செம்மறி ஆட்டிடம்
கேட்டது :
என் வீடு உன்னுடைய வருகையால் செழிக்குமா?
செம்மறி ஆடு சொன்னது :
நான் உங்களுடைய வீட்டிற்கு
அடிக்கடி வருவேன்.
ஆனால், அது உன்னுடைய வயிற்றுக்குள்
போய்விட்டதே.
*****
மாற்றம்
இந்த வீடு என்னிடம் கூறுகிறது :
என்னை விட்டுப் போகக்கூடாது.
இங்கு உன்னுடைய கடந்த காலம் இருக்கிறது.
இந்தப் பாதை என்னிடம் கூறுகிறது :
வா... என்னைப் பின்பற்று.
நான் உன்னுடைய எதிர்காலம்.
ஆனால், நான் இந்த வீட்டிடமும்
இந்தப் பாதையிடமும் கூறுகிறேன் :
எனக்குக் கடந்தகாலம் இல்லை.
எனக்கு எதிர்காலமும் இல்லை.
நான் இங்கு இருந்தால்
என் பற்றில் பயணம் இருக்கும்.
நான் சென்றுவிட்டால்
என் பயணத்தில் பற்று இருக்கும்.
அன்பும் மரணமும் மட்டும்
எல்லாவற்றையும் மாற்றுகின்றன.
*****
நேரம்
உங்களுக்கு இளமையும் அதைப்பற்றிய அறிவும்
ஒரே நேரத்தில் உண்டாகாது.
காரணம் இதுதான்:
இளமை வாழ்க்கையின் மிகுந்த பரபரப்பிற்கு நடுவில்
வருகிறது.
அதனால் அதற்குத் தன்னைப் புரிந்துகொள்ள
நேரமில்லை.
அறிவு, தன்னைத்தானே தேடும்
பரபரப்பில் இருக்கிறது எப்போதும்.
அதனால் அதற்கு வாழ நேரமில்லை.
*****
ஆணவம்
தனிமை!
மழையுடன் சேர்ந்து வரும்
அமைதியான
ஒரு புயலைப்போல
நம்முடைய இறந்து காய்ந்த
கிளைகளை ஒடித்து
தூரத்தில் தூரத்தில் எறிகிறது.
எனினும் அது
நம்முடைய உயிர் துடிக்கும்
வேர்களை
உயிருள்ள பூமியின் சக்தி
பிரகாசித்துக் கொண்டிருக்கும்
இதயத்தை நோக்கி மேலும் மேலும்
ஆழத்திற்குள் அடித்துக்கொண்டு போகிறது.