
கவலை
நீங்கள் ஒரு மேகத்தின் மீது இருந்தால்
ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும்
இடையில் இருக்கும் எல்லைக்கோட்டையும்
ஒரு வயலுக்கும் இன்னொரு வயலுக்கும்
இடையில் இருக்கும் எல்லைக் கல்லையும்
நீங்கள் பார்க்க முடியாது.
ஆனால், நீங்கள் ஒரு மேகத்தின் மீது
இருக்க முடியாதென்பது கஷ்டமான ஒரு
விஷயம்தான்.
இவைதான் நம்முடைய கவலையும்.
*****
அதற்கென்ன?
தேய்ந்துபோன தராசுகளும்
கூர்மை இல்லாத கத்திகளும் உள்ள
ஒரு மாமிசம் வெட்டும் மனிதன்தான்
உணர்ச்சிகளே இல்லாத ஒரு விஞ்ஞானி.
அதனால் உங்களுக்கு என்ன?
நாம் எல்லோரும் சைவம் சாப்பிடுபவர்கள்
இல்லையே!
*****
வெட்கம்
தன் மனதை என்னிடம் திறந்து காட்டுபவனை
நான் அன்புடன் பார்க்கிறேன்.
தன்னுடைய கனவுகளைத் திறந்து காட்டுபவனை
நான் மதிப்புடன் பார்க்கிறேன்.
அதே நேரத்தில் என்னைக் கவனிப்பவன் முன்னால்
நான் எதற்கு வெட்கப்படுகிறேன்!
*****
வெறுமனே இல்லை
நாம் வாழ்ந்தது வெறுமனே இல்லை.
நம்முடைய எலும்புகளைச் சேர்த்து வைத்துத்தானே
அவர்கள் கோபுரங்கள் கட்டினார்கள்!
*****
இலட்சியம்
நான் இனி என்னை முழுமையாகத்
திருப்திப்படுத்துவேன்.
அதற்கு முதலில் அபார அறிவு உள்ள உயிரினங்கள்
வாழும் ஒரு கிரகமாக நான் மாறவேண்டும்.
அப்படி இல்லாமல் முடியாதே!
அதுதானே ஒவ்வொருவரின் இலட்சியமும்!
*****
தனித்துவம்
அன்னியன் ஒருவன் உங்களைக் கிண்டல் செய்தால்
நீங்கள் அவன் மீது பரிதாபப்படலாம்.
ஆனால், நீங்கள் அவனைக் கிண்டல் பண்ணினால்
உங்களால் சிறிதும் அதைப் பொறுத்துக்கொள்ள
முடியாது.
அன்னியன் உங்களைக் காயப்படுத்தினால்
உங்களால் அந்தக் காயத்தை மறக்க முடியும்.
ஆனால், நீங்கள் அவனைக் காயப்படுத்தினால்
உங்களால் அதைச் சிறிதும் மறக்க முடியாது.
உண்மையாகச் சொல்லப்போனால்
அன்னியன் என்பவன் உங்களை மிகவும் எளிதாகக்
காயப்படுத்தும் மனிதன்...
வேறொரு உடலை எடுத்து அணிந்திருக்கும்
உங்களின் சொந்த அடையாளம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook