
வாழ்க்கை
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்
பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் சொன்னான்:
நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்.
காரணம்- அது வேதனையைத் தவிர
வேறொன்றுமில்லை.
நேற்று-
நான் சுடுகாட்டு வழியாக நடந்து செல்லும்போது
அவனுடைய கல்லறைக்கு மேலே
வாழ்க்கையின் நடனத்தைப் பார்த்தேன்.
அந்தக் கல்லறைக்கு மேலே புற்களும் செடிகளும்
வளர்ந்து ஆடிக்கொண்டிருந்தன.
*****
இரண்டு பக்கங்கள்
உங்களுக்குக் கொடுக்க வேண்டியதை விட
அதிகமாகக்
கொடுப்பது இரக்க குணம்.
நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதைவிட
அதிகமாக
எடுப்பது மரியாதைக் குறைவான செயல்.
*****
எல்லை
ஒரு வித்துவானுக்கும் ஒரு கவிஞருக்குமிடையில்
ஒரு பச்சைப்புல் வயலின் எல்லை இருக்கிறது.
வித்துவான் அதைக் கடந்துவிட்டால்
அவர் விஞ்ஞானி ஆகிவிடுவார்.
கவிஞர் அதைக் கடந்துவிட்டால்
அவர் போதகர் ஆகிவிடுவார்.
*****
இரண்டு வகை
ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் வீதம்
இருக்கிறார்கள் அல்லவா?
ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்.
இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக் கிடக்கிறார்.
*****
கவிதை
ஒருநாள் நான் என்னுடைய கைகள் நிறைய
மூடுபனியை அள்ளி எடுத்தேன்.
பிறகு-
கைகளைத் திறந்து பார்த்தபோது ஒரே ஆச்சரியம்...
அந்த மூடுபனி ஒரு புழுவாய் மாறியிருந்தது.
மீண்டும் நான் என் கைகளை மூடித்திறந்தேன்.
அப்போது ஒரு பறவை!
அதற்குப் பிறகும் நான் என் கைகளை மூடித்திறந்தேன்.
அப்போது வானத்தை நோக்கி கண்களை
உயர்த்தினேன்.
கவலையில் ஆழ்ந்திருந்த மனிதன்
என் கைக்குமுன்னால் நின்றிருக்கிறான்.
மீண்டும் நான் என் கைகளை மூடித்திறந்தேன்.
இப்போது வெறும் மூடுபனியைத் தவிர வேறொன்றும்
அங்கு இல்லை.
ஆனால்-
நான் மிகவும் இனிமையான ஒரு பாடலைக்
கேட்டேன்.
*****
புனிதப் பயணி
புனிதநகரத்திற்குச் செல்லும் வழி நடுவில்
நான் இன்னொரு புனிதப் பயணியைச் சந்தித்தேன்.
நான் அவனிடம் கேட்டேன்:
புனித நகரத்திற்குச் செல்லும் வழி இதுதானே?
அவன் சொன்னான்:
என்னைப் பின்தொடர்ந்து வா.
அப்படி வந்தால்
ஒரு பகலிலும்
ஒரு இரவிலும்
பயணம் செய்து
புனித நகரத்தை அடையலாம்.
நான் அவனைப் பின்தொடர்ந்தேன்.
பல பகல்கள், இரவுகள் நாங்கள் நடந்தோம்.
எனினும்-
புனித நகரத்தை அடையவில்லை.
ஆனால்-
என்னை ஆச்சரியப்பட வைத்தது அது அல்ல.
தவறான வழியைக் காட்டியதற்கு
என்மீது அவன் கோபப்பட்டான்.
அவன் என்னை அடித்தான்.
புனிதப் பயணியான நான் என்ன செய்வேன்?
*****
வேறுபாடுகள்
நாங்கள் எண்ணற்ற சூரியன்மார்களின் அசைவுகளில்
நேரத்தைக் கணக்கிடுகிறோம்.
அவர்களோ, சிறிய பைகளில் இருக்கும்
சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தி
நேரத்தைக் கணக்கிடுகிறார்கள்.
கூறு:
நாங்கள் எப்படி ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்
சந்திக்க முடியும்?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook