மணலும் நுரையும் - Page 4
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9320
தேவை
தன்னுடைய கைவிரல் அழுக்கை
உங்களுடைய வேட்டியில் துடைப்பவனுக்கு
உங்களின் வேட்டியை அவிழ்த்துக் கொடுங்கள்.
அது அவனுக்குத் திரும்பவும் தேவைப்படலாம்.
உங்களுக்கு நிச்சயமாக அதன் தேவை இருக்கப் போவதில்லை.
*****
உண்மையானது
பின்னிரவு நேரத்தில் வந்து
நீங்கள் இரவை விட மிகவும் கருப்பாக இருக்கும்போது
தைரியத்துடன் இருட்டானவனாகவே
தொடர்ந்து கொண்டு நீங்கள் படுத்திருங்கள்.
அதற்குப் பிறகு பொழுது புலர்ந்து
அப்போதும் நீங்கள் இருட்டாகவே இருக்கும்போது
நிமிர்ந்து நின்று பகலிடம் கூறுங்கள்.
நான் இப்போதும் கருத்து இருண்டு போயிருப்பவனே.
இரவுடனும் பகலுடனும் நாடகம் ஆடுவது
முட்டாள்தனமான விஷயம்.
அவர்கள் இருவரும் உங்களைப் பார்த்து
குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்கள்.
*****
பக்தி
ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து
பாதை வழியாகக் கடந்து செல்பவர்களை
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது
நீங்கள் பார்ப்பீர்கள் -
உங்களின் வலது பக்கத்தில் ஒரு கன்னியாஸ்திரீ
நடந்து போவதையும்
உங்களின் இடது பக்கத்தில் ஒரு விலைமாது
நடந்து செல்வதையும்.
அபபாதும் உங்களின் கள்ளங்கபடமற்ற மனதில்
நீங்கள் முணுமுணுப்பீர்கள்.
ஒருத்தி எவ்வளவோ நல்லவள்.
இன்னொருத்தி எவ்வளவோ கெட்டவள்.
தொடர்ந்து நீங்கள் கண்களை மூடி கவனித்தால்
காற்றில் கலந்து ஒரு மெல்லிய குரல் ஒலிக்கும்.
நல்லவள் பிரார்த்தனை மூலமாகவும்
கெட்டவள் வேதனைகள் மூலமாகவும்
கடவுளைத் தேடுகிறார்கள்.
இரண்டுபேர்களின் மனதிலும்
தெய்வத்திற்கு ஒரு இடம் இருக்கவே செய்கிறது.