மணலும் நுரையும் - Page 3
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9320
படைப்பு
எகிப்தின் மணல்வெளியில் அமைதியாக
கால நிலைகளைப் பற்றி கவலைப்படாமல்
நான் படுத்திருந்தேன், நீண்ட காலமாக.
பிறகு, சிறிதும் எதிர்பாராத ஒரு தருணத்தில்
சூரியன் எனக்குப் பிறவி தந்தது.
நான் கிடந்த இடத்தை விட்டு எழுந்தேன்.
நைல் நதியின் கரைகளில் அலைந்து
பகல்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடினேன்.
இரவுகளுடன் சேர்ந்து கனவு கண்டேன்.
இப்போது
எகிப்தின் மணல் வெளியில் மீண்டும் நான் அமர
சூரியன் ஆயிரம் கால்களால் என்னை மிதிக்கிறது.
ஆனால்...
இதோ ஒரு அதிசயம்
இதோ ஒரு விடுகதை
என்னைக் கிடப்பிலிருந்து எழுப்பிய இந்தச்
சூரியனுக்கு
என்னை வீழ்த்த முடியவில்லை.
நான் இப்போதுகூட நிமிர்ந்து
நின்றுகொண்டிருக்கிறேன்.
உரத்த குரலில் பாடுகிறேன்.
கனவுகள் காண்கிறேன்.
நைல் நதியின் கரைகளில் அலைந்து திரிகிறேன்.
உறுதியான கால்களால்
பலமான எட்டுகளுடன்...
*****
நெருக்கம்
உங்களுடைய குற்றங்களில் பாதி தவறுகளைச் செய்தவன்
தான்தான் என்ற குற்ற உணர்வு தோன்றுபவன்தான்
உண்மையிலேயே ஒரு நீதிபதி.
ஒரு தெருச் சுற்றியோ அல்லது
ஒரு அதிகப் புகழ்பெற்றவனோ மட்டும்தான்
மனிதர்கள் உண்டாக்கிய சட்டங்களை மீறுவான்.
அவர்களைத்தான் கடவுளுக்கு மிகவும் பிடிக்கும்.