
சுராவின் முன்னுரை
கலீல் ஜிப்ரான் (Khalil Gibran) 1926 ஆம் ஆண்டில் எழுதிய ‘Sand and Foam’ என்ற அருமையான நூலை ‘மணலும் நுரையும்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
கலீல் ஜிப்ரானின் பல நூல்களை நான் படித்திருக்கிறேன். கதை, கவிதை, தத்துவம், வரலாறு, ஆன்மிகம் எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். அவருடைய படைப்புகள். ஐந்து வரிகள் எழுதினாலும் அதில் பல விஷயங்களை அவர் பூடகமாக உள்ளடக்கியிருப்பார். அதுதான் ஜிப்ரானின் தத்துவம்.
அவருடைய எழுத்துகளைப் படிக்கும் போது நமக்கு உண்டாகும் புதுமையான அனுபவத்தையும் புத்துணர்ச்சியையும் வார்த்தைகளால் கூறுவது என்பது முடியாத ஒரு விஷயம். மிகப்பெரிய தத்துவங்களை இரண்டு அல்லது மூன்று வரிகளுக்குள் எழுதப்பட்டிருக்கும் ஒரு படைப்புக்குள் அவர் சொல்லாமல் சொல்லியிருப்பார். அதை ஆழ்ந்து படித்தால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும். கலீல் ஜிப்ரானின் படைப்புகள் மேலோட்டமாகப் படித்துச் செல்லக் கூடியவை அல்ல. அவற்றை மிகவும் ஆழ்ந்த நுண்ணறிவுடன் படித்தால் மட்டுமே உள்ளே மறைந்திருக்கும் பல மறைபொருட்களையும், வாழ்க்கையின் தத்துவங்களையும் புதிர்களையும் உணர்ச்சிகளையும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் ஜிப்ரானின் படைப்புகளைப் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் என்பதுதான் உண்மை.
அந்தச் சுகமான அனுபவத்துடன் நான் இந்த ‘மணலும் நுரையும்’ என்ற நூலை மொழிபெயர்த்திருக்கிறேன். அவர் எழுயிருப்பவை கவிதையா, கட்டுரையா, தத்துவமா என்று பிரித்துக் கூறுவது உண்மையிலேயே சிரமமான விஷயம்தான். இலக்கியத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்ததாகவும் அது இருந்து விட்டுப் போகட்டும். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதுதானே நமக்கு முக்கியம். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு அருமையான நூல். மிகப்பெரிய பல விஷயங்களைச் சில வரிகளில் சர்வ சாதாரணமாகப் போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்லும் ஜிப்ரானின் திறமை நம்மை அதிசயிக்க வைக்கும். இது மேம்போக்காகப் படிக்கக்கூடிய நூல் அல்ல. சற்று ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல். அப்படிப் படித்தால், பல புதிய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம் - பல புதிர்கள் நம்முன் அவிழும். நான் பெற்ற அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
இந்த சிறந்த நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடிதளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook