மண்டை ஓடு - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10366
அவள் இல்லத்தரசியிடம் தொடர்ந்து சொன்னாள்:
“அம்மா! எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனைதான் இருக்கு. இனிமேல் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது என்பதே அது. நான் காத்திருந்தேன். இப்படியெல்லாம் நடந்திடுச்சு. இனி எதற்குப் பார்க்க வேண்டும்? இந்தக் குழந்தை உயிருடன் இருக்கும்போது...''
இல்லத்தரசி இடையில் புகுந்து சொன்னாள்:
“அது உன்னுடைய குற்றம் இல்லையே!''
“இருக்கலாம் அம்மா... என்னுடைய புனிதத்தன்மை போயிடுச்சே?''
இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். வீட்டின் தலைவி தேற்றுகிற விதத்தில் சொன்னாள்:
“இருந்தாலும்... ஒரு ஆண் பிள்ளையாச்சேடீ...''
அவள் முழுமையான ஏமாற்றத்துடனும் வெறுப்புடனும் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னாள்:
“அது சாகாது அம்மா. அது சாகாது... அதற்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. அன்றைக்கு அப்படிப் பிறந்த குழந்தைகள் எதுவும் சாகாது. அவர்கள் எல்லாரும் சேர்ந்து சில விஷயங்களைச் செய்ய வேண்டியதிருக்கிறது. நான் சொல்லட்டுமா அம்மா? இதை ஏதாவது கிணற்றுக்குள் விட்டெறிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது அம்மா. பெற்று விட்டதால் மட்டும் இந்தக் குழந்தைமீது அன்பு உண்டாகி விடாது. வேண்டாம் என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பவள் தான் பெற்றெடுத்த குழந்தை மீது பாசம் வைக்க மாட்டாள். தாய்மார்கள் குழந்தைகளைக் கழுத்தை நெறித்துக் கொல்வதில்லையா? இந்தக் குழந்தை வயிற்றில் இருக்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை. இதையும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாம் என்று நான் நினைத்தேன். அப்போது தோணுச்சு அம்மா- இது சாகக்கூடாது என்று. அதனால்தான் நான் வளர்க்கிறேன்.''
தரையில் அடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அவள் பார்த்தாள். அதன் விளையாட்டைப் பார்த்து அவளுடைய இதயம் சந்தோஷப்படவில்லை. திட்டமிடப்பட்ட நோக்கத்துடன் அவள் அதை வளர்க்கிறாள். அதை அவள் ஒரு ஆயுதமாக ஆக்கு கிறாள். தாய் அன்பு செலுத்தி, தாயின் பாசத்தின் ருசியை அறிந்து வளரும் குழந்தைக்கு, வளர்ந்த பிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதைப் பெற்றெடுத்த பிறகு உண்டான வலி, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இருக்கும் வலியாக இல்லாமல் இருக்கலாம். தான் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த ஒரு குழந்தை என்று அதைப் பார்க்க அவளால் முடியாது. அவள் அன்பு செலுத்தி வளர்க்கவில்லை. அந்தக் குழந்தை வளர்வதற்காக வளர்க்கிறாள். அவளுக்கு அதன் அழகான சிரிப்பையும் ஆனந்தமான விளையாட்டையும் பார்க்க வேண்டும் என்றில்லை. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, தனக்கு ஆனந்தத்தைத் தந்த ஒரு ஆணை அவள் நினைக்கவில்லை. தன்னுடைய தாயை இடித்துக் கொன்று விட்டு, அவளை அந்த நேரத்தில் பலாத்காரம் செய்த ஒரு அரக்கனைத்தான் அவள் நினைக்கிறாள். அவன் எப்படி இருப்பான் என்று அவளுக்குத் தெரியாது. அந்தக் குழந்தை ஒரு கெட்ட கனவின் சின்னமாக இருக்கிறான்.
2
மரணமும் அழிவும் தாண்டவம் ஆடிய கண்டமார் கிராமத்தின் ரத்தம் படிந்த களங்களின் நிறம், புதிதாகப் பெய்த மழையில் மறையத் தொடங்கியது. மாமிசச் சதைகள் காய்ந்து ஒட்டிக் கொண்டிருந்த எலும்புத் துண்டுகள் ஆங்காங்கே சிதறியும், சில இடங்களில் குவியலாகவும் காணப்பட்டன. பிணங்களைக் குவியலாகப் போட்டு மண்ணை வெட்டி மூடி உண்டாக்கப்பட்ட மேடுகள் சிறிது சிறிதாகக் குறைந்தன. நன்கு வளர்ந்து கொண்டிருக்கும் தென்னைகளுக்குக் கீழே, மாலை முடிந்த நேரத்தில் இருளில் நட்சத்திரங்கள் தெரிவதைப் போல தூரத்திலும் அருகிலும் சேர்ந்து சேர்ந்து, கிழக்கு திசையில் பரந்து விரிந்து கிடக்கும் ஏரியில் பயணிக்கும் படகோட்டியின் கண்களுக்கு, முறையே இல்லாமல் காணப்படும் எத்தனையோ ஆயிரம் சிறிய தீபங்கள் இனிய அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கின்றன! இன்று அந்தப் பக்கம் பார்த்தால் இருட்டு! இருட்டு!
பகல் வேளையில் கால் ஒடிந்த ஒருவன் கொம்பைக் கையில் பிடித்துக் கொண்டு தாவுவதையோ, ஒரு முடமானவன் முழங்கால்கள் மோதும் வண்ணம் வேக வேகமாக நடந்து செல்வதையோ பார்க்க நேரிடலாம். அந்த ஏராளமான குடிசைகளைப் பார்க்க முடியாது. ஏரியின் வழியாகச் செல்லும் படகோட்டிகள் பகல் நேரத்தில் அந்த திசையையே பார்த்துக் கொண்டு செல்வார்கள். வரலாற்றில் ஒரு நாடகம் ஆடிய இடம் அது. அங்கு இந்த சிறிய மனிதன் துப்பாக்கி குண்டைப் பார்த்து சவால் விட்டான். ஆனால், அங்கு நடந்த எதையும் உலகம் தெரிந்து கொள்ளவில்லை. அந்த மிகவும் பயங்கரமான கொலைச் செயலிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்த அந்த முட வனுக்கும் நொண்டிக்கும் ஒருவேளை ஏதாவது கூறுவதற்கு இருக்கும்!
அந்த ஆளரவமற்ற கிராமத்தின் வழியாக இப்போதும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் இரவிலும் பகலிலும் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இரவின் பயங்கரமான தருணங்களில் அங்கு இப்போதும் சில தீவிர செயல்கள் நடந்து கொண்டிருக்கலாம். அந்த ஆரவாரம் அடங்கவில்லையா என்ன? ஒரு உயர்வு உண்டாக வாய்ப்பிருக்கிறது...!
உயரப் போகிறவர்கள் யார்? அந்த முடவனும் நொண்டியுமா? ரகசியம் யாருக்குத் தெரியும்? கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக நின்றிருந்த வாழ்க்கையின் மனபலம் எப்படிப்பட்ட அற்புதச் செயல்களைச் செய்து காட்டியிருக்கிறது! ஆயிரக்கணக்கான பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு நேராக மார்பைக் காட்டவில்லையா? அந்த வரிசைக்கு இடைவெளி உண்டாகி விட்டதா?
அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று மனதிற்குள் விரும்பிய போராட்டம் வெற்றி பெறும் என்றுதான் நம்பிக் கொண்டிருப்பார்கள்.
எனினும், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்த, ஊரை விட்டுச் சென்ற மனிதர்கள் தவிர, அங்கேயே வாழ்ந்து கொண்டிருந்த யாருக்கும் ரத்தம் இல்லை. சதை இல்லை. எலும்புக் கூடுகள்! அதே கோலத்தில் ஆடியாடி போய்க் கொண்டிருக்கின்றன. அவை எதுவும் இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் அல்ல.
அவர்கள் பெண்களாக இருந்திருக்க வேண்டும். ஆண்களாகவும் இருந்திருக்க வேண்டும். அவை அனைத்தும் பழைய கதைகள். ஒரு இரவு நேரத்தில் அவர்கள் நடந்து திரிகிறார்கள். ஒன்று கூடி ஆலோசனை பண்ணுகிறார்கள். இனியும் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து நிற்பார்கள் என்று...
இரவு வேளையில் கரைக்கு அருகில் ஒரு படகுகூட செல்வதில்லை. மிகவும் பயங்கரமான அலறல் சத்தங்கள் தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் படகுகள் வரை கேட்கின்றன என்று கூறிக் கொள் கிறார்கள். நீளமான தென்னை மடல்களில் காற்று புகுந்து எழுப்பும் ஓசை அல்ல. இனம் புரியாத அலறல் சத்தம்! வேறு எந்தவொரு இடத்திலும் கேட்டிராத ஒரு சீட்டி ஒலி, மேற்குப் பக்கமாக வீசும் காற்றில் கலந்திருக்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால் அங்கும் இங்கும் ஆட்கள் கூட்டம் கூடி இருப்பதைப் போல தோன்றும்.