மணப்பெண் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 12176
பல சந்தர்ப்பங்களிலும் நானே சமையலையும் செய்திருக்கிறேன்.'' -இதைக் கூறியவாறு லலிதா மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய தலைமீது தன் கையை வைத்த குருச்சரண் அமைதியாக அவளை ஆசீர்வதித்தார். வீட்டை எப்படி வழி நடத்திச் செல்வது என்ற மிகப் பெரிய சுமை அவருடைய மனதை விட்டு நீங்கியது.
குருச்சரணின் அறை தெருவைப் பார்த்தவாறு திறந்து கிடந்தது. தேநீரைப் பருகிக்கொண்டே அவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் அவர் உரத்த குரலில் கூறினார்: “சேகர், நீயா? ஒரு நிமிடம் நில்லு.''
ஒரு உயரமான, அழகான, நல்ல உடலமைப்பைக் கொண்ட இளைஞன் உள்ளே வந்தான்.
குருச்சரண் சொன்னார்: “உன் சித்தி இன்றைக்குக் காலையில் என்ன செய்திருக்கிறாள் தெரியுமா?''
மெதுவாக சிரித்துக்கொண்டே சேகர் பதில் சொன்னான்: “அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? உங்க மகள் பிறந்திருக்கும் விஷயத்தைச் சொல்றீங்க. அப்படித்தானே?''
ஒரு பெருமூச்சை விட்டவாறு குருச்சரண் சொன்னார்: “நீயும் இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமா நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாய். சேகர், எனக்குத்தான் இதில் இருக்கும் கஷ்டம் தெரியும்.''
“அப்படியெல்லாம் பேசாதீங்க சித்தப்பா. சித்தி ரொம்பவும் கவலைப்படுவாங்க. இன்னும் சொல்லப் போனால் கடவுள் யாரை அனுப்பினாலும், நாம அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்க வேண்டும்.''
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, குருச்சரண் சொன்னார்: “இந்த மாதிரி விஷயத்தைக் கொண்டாட வேண்டும் என்று எனக்கும் தெரியும். ஆனால், இளைஞனே! கடவுளும் ஒழுங்காக நடந்து கொள்வது இல்லை. நான் மிகவும் ஏழை. என் வீட்டில் எதற்கு இவ்வளவு சுமை? இந்த வீடே உன் அப்பாவிடம் அடமானத்தில் இருக்கு. அது ஒரு பிரச்சினை இல்லை. அதற்காக நான் கொஞ்சம்கூட கவலைப்படவும் இல்லை. ஆனால், இதை சிந்தித்துப் பார். இந்த அனாதைப் பெண், இந்த என் லலிதா- இந்த பொன்னான குழந்தை பெரிய இடத்தில் இருக்க வேண்டியவள். நான் அவளை எப்படி யாராவது ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணித் தர முடியும்? எண்ணற்ற நகைகளை... ஏன், கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் வைரத்தையே கொண்டு வந்து கொட்டினாலும், என் குழந்தைக்கு முன்னால் அது எதுவுமே ஈடாகாது. ஆனால், இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? பாடாய்ப்படுத்தும் வறுமை, இந்த அரிய வைரத்தை அவளுக்குக் கொஞ்சம்கூட தகுதியே இல்லாத ஒருவனிடம் தள்ளி விடும்படி என்னைச் செய்யும். என்னைப் பார்த்துச் சொல்லு... அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நினைக்கிறப்போ ஒருத்தனோட இதயமே கிழிந்துபோய் விடாதா? அவளுக்கு பதிமூணு வயது நடக்குது. அவளுக்குப் பொருத்தமான ஒருத்தனைத் தேடிப் பார்ப்பதற்கு என்னிடம் பதிமூணு அணாக்கள் கூட இல்லை.''
குருச்சரணின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.
சேகர் மிகவும் அமைதியாக நின்றிருந்தான். குருச்சரண் மீண்டும் சொன்னார்: “சேகர்நாத், உன் நண்பர்கள் வட்டாரத்தில் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார். இந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். நிறைய பணமோ வரதட்சணையோ வேண்டும் என்று நினைக்காத சில இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் பெண் எப்படிப்பட்டவள் என்பதை மட்டுமே பார்ப்பார்கள். அந்த மாதிரியான இளைஞர்கள் யாரையாவது நீ பார்த்தால்... சேகர், நான் சொல்கிறேன்... என்னுடைய ஆசீர்வாதங்கள் உன்னை அரசர்களுக்கெல்லாம் அரசராக ஆக்கும். நான் வேறு என்ன சொல்ல முடியும்? உன் குடும்பத்தின் கருணையால்தான் நான் அருகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன் அப்பா என்னைத் தன்னுடைய தம்பியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.''
சேகர் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் தலையை ஆட்டினான்.
குருச்சரண் தொடர்ந்து சொன்னார்: “மறந்து விடாதே என் பையனே... மனதில் இதை வைத்துக்கொள். தனக்கு எட்டு வயது ஆனதிலிருந்தே, லலிதா உன் வழிகாட்டுதலின்படிதான் படித்திருக்கிறாள், வளர்ந்திருக்கிறாள். அவள் அந்த அளவிற்கு அறிவாளி, கூர்மையான புத்தி கொண்டவள், ஒழுக்கமானவள் என்பதை நீயே பார்த்துக்கொண்டு வந்திருக்கிறாய். ஒரு குழந்தை என்பதையும் மறந்து இன்றிலிருந்து வீட்டில் எல்லா சமையல் வேலைகளையும் அவளே செய்கிறாள், பரிமாறுகிறாள். எல்லாமே அவளுடைய கையில்தான் இருக்கின்றன.''
இந்த நேரத்தில் லலிதா ஒருமுறை தலையை உயர்த்திவிட்டு, அடுத்த நிமிடமே கண்களைக் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடைய உதடுகள் சற்று துடித்தன. குருச்சரண் கவலை நிறைந்த குரலில் தொடர்ந்து சொன்னார்: “இவளோட அப்பா கொஞ்சமாகவா சம்பாதித்தார்? ஆனால், அவர் தன்னுடைய சொத்துகள் முழுவதையும் கொடுத்து விட்டு, கடைசியில் எதுவுமே மீதமில்லை என்னும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார். சொல்லப் போனால், இந்த ஒரே ஒரு குழந்தைக்குக்கூட எதுவுமே இல்லைன்னு ஆயிடுச்சு.''
சேகர் எதுவுமே கூறவில்லை. மீண்டும் குருச்சரணே உரத்த குரலில் சொன்னார்: “இவளுக்காக அவர் எதையும் விட்டுவிட்டுப் போகவில்லை என்று நான் எப்படிக் கூற முடியும்? இவளுக்குள் இருக்கும் கவலைகளை- கஷ்டப்படும் மக்களுக்கு இவளோட அப்பா உதவிகள் செய்தாரே, அவர்களின் ஆசீர்வாதங்களே ஒண்ணுமில்லாமல் செய்துவிடும். பிறகு எப்படி இந்த அளவிற்கு சிறிய குழந்தையாக இருப்பவள் அன்பு நிறைந்த ஒரு அன்னையாக வடிவம் எடுக்க முடியும்? இது உண்மையா இல்லையா சேகர்?''
சிரித்த சேகர் பதிலெதுவும் கூறவில்லை.
அவன் புறப்படுவதற்குத் தயாராக இருப்பதைப் பார்த்த குருச்சரண் கேட்டார்: “இவ்வளவு சீக்கிரமா நீ எங்கே கிளம்பிட்டே?''
சேகர் சொன்னான்: “வக்கீலைப் பார்ப்பதற்காகப் போகிறேன். ஒரு வழக்கு இருக்கு!''
அவன் எழுந்தபோது, குருச்சரண் மீண்டும் அவனுக்கு ஞாபகப்படுத்தினார்: “நான் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இவள் கொஞ்சம் கறுப்பு நிறம்தான். ஆனால், இப்படிப்பட்ட ஒரு அழகான முகத்தையும் அளவற்ற அன்பையும் அக்கறையையும் இந்த உலகத்தில் இருக்கும் யாரிடமும் பார்க்க முடியாது.''
அதற்குத் தலையை ஆட்டிய சேகர் புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். தன்னுடைய முதுகலைப் பட்டத்தை முடித்துவிட்டு, அவன் ஆசிரியராகப் பணியாற்றினான். சென்ற வருடம்தான் அவன் வக்கீலாகத் தகுதி பெற்றான். அவனுடைய தந்தை, நபின்ராய் கருப்பட்டி வியாபாரத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்தார். பிறகு சுறுசுறுப்பான வியாபாரத்தை விட்டுவிட்டு, இப்போது வீட்டில் இருந்துகொண்டே வட்டிக்குப் பணம் தந்து கொண்டிருக்கிறார். அவருடைய மூத்த மகன் அபிநாஷ் வக்கீலாக இருக்கிறான். சேகர்நாத் இளையவன். அவர்களுடைய பிரம்மாண்டமான மூன்று மாடிகளைக் கொண்ட வீடு தெருவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது.