அவன் வரவில்லை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6541
“நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன்.”
கொச்சுகல்யாணி உள்ளே நுழைந்து சிறிது நேரம் கழித்து கொச்சுராமன் கூறினான். அவனுடைய தொண்டை இடறிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், குரல் வெளியே வரவில்லை. உள்ளே இருந்த கொச்சுகல்யாணி அதை தெளிவாகக் கேட்கவில்லை. அவள் உள்ளேயிருந்தவாறு கேட்டாள்:
“என்ன சொல்றீங்க கொச்சுராமன் அண்ணே?”
இந்த முறை கொச்சுராமனின் குரல் மேலும் சற்று உயர்ந்து ஒலித்தது. குரலில் தடுமாற்றம் அந்த அளவிற்கு இல்லை. எனினும், நாக்கு வறண்டுவிட்டிருந்தது.
“நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன்.”
“என்ன?”
உண்மையிலேயே கொச்சுகல்யாணிக்கு எந்தவொரு சந்தேகமுமில்லை. சாதாரணமாகப் பேசும்போது எப்படி பேசுவோமோ, அந்த மாதிரியே கேட்டாள்.
கொச்சுராமன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. என்ன சொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை.
மீண்டும் கொச்சுகல்யாணி கேட்டாள்:
“என்ன கொச்சுராமன் அண்ணே?”
“புரியலையா?”
கொச்சுராமன் சற்று பற்களை இளித்துக் கொண்டே கண்களைச் சிமிட்டிக் காட்டினான்.
“இல்லை…”
அவன் பிரார்த்தனை செய்து கொண்டே கூறினான்:
“எத்தனையோ நாட்களா எனக்குள் இருக்கும் ஆசை இது…”
அவன் மனதில் என்ன சொல்ல நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை கொச்சுகல்யாணி புரிந்து கொண்டதைப் போல தோன்றியது. அவள் எதுவும் பேசவில்லை.
“நான் தினமும் இரவு நேரத்தில் இந்த வீட்டைச் சுற்றி ஐந்தாறு முறை நடந்து கொண்டிருப்பேன்.”
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஒரு சிறு சலசலப்பு உண்டாவதை கொச்சுகல்யாணி உணர்ந்திருக்கிறாள். அது யாரென்று அவளுக்குப் புரிந்துவிட்டது!
கொச்சுராமன் சற்று அதிகமாக பேசும் நிலைக்கு வந்தான்.
“என் ஆசை அது. என்னைக் கைவிட்டு விடாதே. யாருக்கும் தெரியப் போறதில்லை. என் கையில் ஒரு ரூபாய் இருக்கு. அதைத் தர்றேன். ஒரு ஆபத்தும் வராது.”
இவ்வாறு அவன் கூறிக் கொண்டிருக்கும்போது அவனுடைய கையும் காலும் நடுங்கிக் கொண்டிருந்தன. யாராவது வருகிறார்களா என்று நான்கு திசைகளையும் அவன் பார்த்துக் கொண்டும் இருந்தான். தான் இவ்வாறு அங்கு நின்று கொண்டிருப்பதை பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பார்த்து விட்டால், அது சரியாக இருக்காது என்ற புரிதல் அவனுக்கும் இருந்தது. எனினும், அவன் பேசிக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு…. இந்த ரூபாயை வாங்கிக்கோ. சாயங்காலம்… இரவில் இன்னும் இரண்டு ரூபாய் கொண்டு வர்றேன். நல்லா இருட்டின பிறகு போதும்… இந்தா ரூபாய்!”
கொச்சுகல்யாணி கேட்டாள்.
“இது சரியான காரியமா கொச்சுராமன் அண்ணே?”
கொச்சுராமனால் உடனடியாக பதில் கூற முடியவில்லை. எனினும் அவன் சொன்னான்.
“யாருக்கும் தெரியப் போறதில்லை. ஒரு ஆபத்தும் வராது.”
கொச்சுகல்யாணி சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்:
“கொச்சுராமன் அண்ணே, உங்க மனசுல இருந்த நினைப்பு இதுதானா? நான் இதை நினைக்கவே இல்லை.”
அதைக் கேட்டு கொச்சுராமன் நெளிந்தான். அப்படி நெளிய வேண்டிய அவசியமில்லை என்று அவனுக்குத் தோன்றியது. அனைத்தும் தாழ்வான விஷயங்களாக ஆகிவிட்டன. அவன் மிகவும் மோசமான மனிதன் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். அங்கிருந்து கிளம்பினால் போதுமென்று அவன் நினைத்தான். ஆனால், எப்படிப் போவான்? அவன் மரத்துப் போய் நின்றிருந்தான். இனி அவளுடைய முகத்தை அவன் எப்படிப் பார்ப்பான்? அவள் வேறு யாரிடமாவது விஷயத்தைக் கூறிவிட்டால்…? வெட்கக் கேடு! ஆனால். அவன் ஒரு நல்ல வார்த்தையை நாக்கால் வெளியிட்டான்:
“இந்தப் பிறவியில் நான் வேறொரு பெண் மீது பிரியம் வைக்கமாட்டேன். என்னுடைய ஆசை இது. கொச்சுகல்யாணி, என்னைக் கைவிட்டு விடாதே.”
“ஓ… காரியம் நிறைவேறணும்ங்கறதுக்காக எல்லாரும் சர்க்கரை… சர்க்கரைன்னு சொல்லத்தான் செய்வாங்க.”
மீண்டும் கொச்சுராமன் நிறைய பேசுவதற்குத் தயாரானான் : “அம்மாமீது ஆணையாக… கொடுங்கல்லூர் பகவதிமீது ஆணையாக… நான் உண்மையைச் சொல்றேன்… வேறொரு பெண்ணுடன்…”
அந்த வார்த்தை முழுமையடைவதற்கு முன்பே கொச்சுகல்யாணி கூறினாள் : “நீங்க என்ன பேசுறீங்க? தூர இடத்துக்குப் போயிருக்குற ஒருத்தன் எனக்குன்னு இல்லையா? அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு சொல்றேன். அந்த ஆளுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவான்.”
“யாருக்கும் தெரியாது கொச்சுகல்யாணி.”
“இருந்தாலும் அது சரியான விஷயமா கொச்சுராமன் அண்ணே?”
“என் கொச்சு கல்யாணி, என்னைக் கைவிட்டுடாதே!”
“அந்த ஆளு போய் ஆறு மாசமாயிருச்சு. ஏதாவது தப்பு நடந்துட்டா…”
“நடக்காது… அதுக்கு வழி இருக்கு!”
சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.
“கொச்சுகல்யாணி!”
அவள் எதுவும் பேசவில்லை. மீண்டும் கொச்சுராமன் அழைத்தான்: “கொச்சுகல்யாணி!”
அவள் சொன்னாள்: “கொச்சுராமன் அண்ணே, இப்போ போங்க. நான் செய்யக் கூடாததை செய்ததில்லை.”
அந்தச் சிறிது நேர பேரமைதி உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் மிகவும் கனமான ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். அந்த மனைவி தர்மசங்கடமான அந்த சூழ்நிலையைக் கடக்க வேண்டுமென்று நினைத்தாள். அவள் சொன்னாள் : “பட்டினியில் கிடந்தாலும் நான் நேர்மையாத்தானே வாழ்ந்துகிட்டிருக்கேன். கொச்சுராமன் அண்ணே? இந்தக் குழந்தைகளெல்லாம் அவனுக்குப் பொறந்ததுதான்… பிறகு… அந்த ஆளோட கையில எதுவுமே இல்லாமப் போச்சுன்னா… எல்லாத்துக்கும் காரணம் என் தலைவிதி!”
கொச்சுராமனின் ஆசை குறைந்தது. அவனால் பதிலெதுவும் கூற முடியவில்லை. அவனும் நாக்கை அடக்கிக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான்.
“என் மனதில் இருக்கும் ஆசை கொச்சுகல்யாணி. இந்தப் பிறவியில் இருக்கும் ஆசை…”
மீண்டும் பேரமைதி.
“நான் கிளம்பட்டுமா, கொச்சுகல்யாணி?”
பதில் இல்லை.
“நான் காதலிக்கிறேன்.”
மீண்டும் பேரமைதி.
“நான் புறப்படட்டுமா… கொச்சுகல்யாணி?”
“நான் என்ன சொல்லணும், கொச்சுராமன் அண்ணே?”
கொச்சுராமனின் சாம்பல் படர்ந்த ஆசை மீண்டும் ஒளிர்ந்து பிரகாசித்தது. போகும்படி அவள் கூறவில்லை.
“நான் பாதி ராத்திரியானதும் வர்றேன். தூங்கிடாதே. கதவை மெதுவாத்தான் தட்டுவேன்.”
“அய்யோ! பகல் மாதிரி நல்ல நிலவு வெளிச்சம் இருக்கும். யாராவது பார்த்துடப் போறாங்க.”
ஆசை அதிகரித்தது.
“இல்லைன்னு சொல்றேன்ல! நான் ரொம்ப கவனமா இருக்கேன். இந்தா… இதை எடுத்துக்கோ!”
அவன் ஒரு வெள்ளி நாணயத்தை உள்ளே எறிந்தான். ‘த்தினம்’ என்று அது விழுவது காதில் விழுந்தது. அந்த நாணயம் வெளியே எறியப்படவில்லை.
“ராத்திரி வர்றப்போ மேலும் ரெண்டு ரூபாய் கொண்டு வர்றேன். தூங்கிடாதே… ஒரு வாசனை சோப்பும் கொண்டு வர்றேன். ஒரு முறைதான் கதவைத் தட்டுவேன்.”
அவள் எதுவும் பேசவில்லை. நீண்ட நேரமாக வெளியே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களில் யாராவது பார்த்துவிட்டால்…!