அவன் வரவில்லை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6543
தங்கப்பன் பதைபதைப்புடன் கேட்டான்.
“பிறகு… அண்ணே, நீ பொய் சொல்றே.”
பொண்ணப்பன் கூறுவதற்கு பதில் இருந்தது.
“அதனால்தான் நான் சொன்னேன்- அப்பா வரமாட்டார்னு.”
சில நாட்கள் கழித்து மீண்டும் பொன்னப்பன் தங்கப்பனிடம் ஒரு விஷயத்தைச் சொன்னான்.
“அப்பா ஏன் வரலைன்னு தெரியுமா! அப்பாவுக்கு அங்கே பிள்ளைகள் இருக்காங்க…”
“அப்படின்னா… அப்பாவுக்கு நம்மளை வேண்டாம்.”
“வேண்டாம இருக்கும்… அம்மாதான் சொன்னாங்க…”
அங்கு தங்களின் தந்தைக்கு பிள்ளைகள் இருக்கும் பட்சம். அவர்கள் மீதும் அன்பு செலுத்த தங்கப்பன் தயாராகவே இருந்தான். அப்பா ஏன் வராமல் இருக்க வேண்டும்?
அந்த ஊரிலிருந்து யாருக்கோ மாதவனின் ஒரு கடிதம் வந்தது. அவன் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டான். அவன் வரப்போகிறான். அந்தக் கடிதம் பற்றிய தகவலை கொச்சுகல்யாணியும் அறிந்தாள்.
அவள் கொச்சுராமனிடம் விஷயத்தைக் கூறினாள்.
“என்ன செய்றது ஆம்பளை? அந்த காளைமாடன் வந்தால், நம்ம ரெண்டு பேரையும் கொன்னுடுவான்.”
கொச்சுராமன் பதைபதைப்புடன் சொன்னான்:
“என் பேரைச் சொல்லாதே. காரணம் நான் இல்லைன்னு சொல்லிடு.”
அவளுக்கு வெறிபிடித்தது.
“பிறகு… யாரோட பேரைச் சொல்லணும்? நீங்க என்ன சொல்றீங்க?”
“பிரசவத்திற்குப் பணம் தர்றேன். பிறகு…. கையில் கிடைப்பதை தர்றேன்.”
“பிறகு… ‘குழந்தைக்கு நான் அப்பா இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க, அதற்குப் பிறகு இருக்குது விஷயம்…”
அவன் அங்கிருந்து அடுத்த கணமே கிளம்பினான்.
கோபம். கவலை ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு, அசையவே முடியாமல் அவள் அவனையே கண்களை விரித்துப் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.