அவன் வரவில்லை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6543
“நான் கிளம்புறேன்… தெரியுதா?”
அவன் எதுவும் பேசவில்லை.
அவன் சிறிது தூரம் நடந்துவிட்டு திரும்பி வந்தான்.
“தூங்கிடாதே… பிள்ளைகளை முன்கூட்டியே தூங்க வச்சிடு.”
மீண்டும் அவன் திரும்பி வந்தான்.
“ஒரு முறைதான் கதவைத் தட்டுவேன். தெரியுதா?”
அவள் மெதுவாக ‘உம்’ கொட்டாவிட்டால்தான் என்ன? அவள் மறுக்கவில்லை. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?
சாயங்காலம் அப்போதுதான் கடந்திருந்தது. ஒரு தகரத்தால் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில், அந்தச் சிறிய குடிசையின் திண்ணையில் கொச்சுகல்யாணியும் அவளுடைய பிள்ளைகளும் அமர்ந்து கயிறு திரித்துக் கொண்டிருந்தார்கள். பொன்னப்பன் மட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். இரவு நேரத்தில் அவனுக்கு கண் பார்வை தெரியாது. பித்தசூலம்! வயிறு உள்ளே போய், காலும் கையும் மெலிந்து, கன்னம் வீங்கி, கண்கள் இலக்கற்று விழிக்க ஒரு சிலையைப் போல அவன் அமர்ந்திருந்தான். இளைய பெண் குழந்தை மடியில் படுத்து தாய்ப்பாலைக் குடித்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தது. கயிறு நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தபோது, கொச்சுகல்யாணி அப்படி எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாள்?
பொன்னப்பன் சொன்னான்.
“நாம இன்னைக்கு ஐந்து முடி கயிறு திரிக்கணும் சரியா அம்மா?”
கொச்சுகல்யாணி மெதுவாக ‘உம்’ கொட்டினாள். மீண்டும் அந்தக் கயிறு நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தது.
மண்ணெண்ணெய் விளக்கில் திரி கரிந்து எரிந்து கொண்டிருந்தது.
பொன்னப்பன் கேட்டான்: “எப்படிம்மா கயிறு திரிக்க முடியும்? விளக்குல மண்ணெண்ணெய் இல்லையே!”
திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“நல்ல நிலவு வெளிச்சம்… நாம் முற்றத்துல உட்கார்ந்து கயிறு திரிக்கலாம்.”
கொச்சுகல்யாணி உள்ளே பாயை விரித்து குழந்தையைப் படுக்க வைத்தாள். அப்போது முற்றத்தில் கோணியை விரித்து, பொன்னப்பன் மட்டைகளைப் போட ஆரம்பித்தான். கயிறு நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தது.
பொன்னப்பன் தன் தாயிடம் கேட்டான்:
“இந்தக் கயிறை வித்து காலைக்குத் தேவையான கப்பையையும் சர்க்கரையையும் வாங்கிடலாம். மதியம் எப்படிம்மா?”
கண்களால் வெறித்தபடி சம்மணம் போட்டு அமர்ந்திருந்த தங்கப்பன் சொன்னான்:
“அண்ணே, நாளைக்கு மதிய சாப்பாட்டுக்கு அம்மா பையில் ஒரு ரூபாய் இருக்கு!”
பொன்னப்பனின் முகம் பிரகாசித்தது: “எங்கேயிருந்து அம்மா கிடைச்சது?”
கொச்சுகல்யாணி சற்று அதிர்ச்சியடைந்து விட்டாள். அவள் ஒரு பதிலைக் கூறியாக வேண்டும். என்ன பதில் கூறுவாள்? ஒரு சிறுவனின், கதை இல்லாத கேள்வியாக அது கொச்சுகல்யாணியின் காதுகளுக்கும் ஒலிக்கவில்லை. அவள் கட்டாயம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற வகையில் கேட்கப்பட்ட மிடுக்கான கேள்வி! ‘அந்த ரூபாய் எங்கிருந்து கிடைத்தது?’ என்று கேட்டுவிட்டு, அந்த கேள்வி கேட்டவன் அவளுடைய முகத்தையே கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். உரிமை உள்ளவன் கேட்கிறான்.
மீண்டும் பொன்னப்பன் கேட்டான்.
“எங்கிருந்து அம்மா ரூபாய் கிடைச்சது?”
ஒரு கரிய நிழலை தனக்கு முன்னாலிருந்து பலமாக அடித்து அகற்றுவதைப்போல கொச்சுகல்யாணி சொன்னாள்:
“உன் வேலையைப் பாருடா.”
பொன்னப்பன் அதிர்ந்து போய்விட்டான். ஏதோ ஒரு பெரிய தவறை தான் செய்து விட்டதைப்போல அவன் உணர்ந்தான். தான் அதைக் கேட்டிருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான்.
கொச்சுகல்யாணி இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துச் சேர்த்து கயிறு திரிக்க, கயிறின் நீளம் கூடிக்கொண்டே இருந்தது.
இப்போது அவள் என்ன சிந்தித்துக் கொண்டிருப்பாள்? பொன்னப்பன் தன்னுடைய தவறு என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பான் அல்லவா? கண்களை சிமிட்டியபடி சிறையைப் போல அமர்ந்திருக்கும் தங்கப்பன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்?
அங்கு தாயும் மகனும் சேர்ந்திருக்கும் ஒரு கயிறு திரிக்கும் இயந்திரம் பலமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. யாரும் யாருடனும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அந்த ஒரு ரூபாய்க்கான வரவு கணக்கை அவன் கேட்டான். அவள் அந்தக் கணக்கை கூறுவதற்குக் கடமைப்பட்டவள். ஒரு திட்டுதலின் மூலம் அவள் அவனுடைய வாயை அடைத்தாள். எனினும், அந்தக் கேள்வி எஞ்சி நிற்கத்தான் செய்தது. இந்த இடத்திலிருந்து இந்த வகையில் அந்தப் பணம் கிடைத்தது என்று கூறவேண்டிய அவளுடைய கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, அவளுடைய முகத்தில் கை முஷ்டியை பலமாக வைத்துக் கொண்டு, ‘இந்த ரூபாய் எங்கிருந்து வந்தது?’ என்று, அவளால் விலகி ஓட முடியாத அளவிற்கு - அவளுடைய மனச்சாட்சியை நோக்கி கேள்வி கேட்பதற்கு உரிமை படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவள் அந்தக் கேள்வியைப் பார்த்து பயப்படலாம். அப்போது அவள் என்ன பதில் கூறுவாள்?
அவள் மனைவியாக இருப்பவள். அது ஒரு குடும்பம். அந்த ஒரு ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான கணக்கை அவள் கூறியாக வேண்டும்.
பார்வையின்றி விழித்துக் கொண்டிருந்த தங்கப்பன் தனக்குள் கூறிக் கொண்டான்:
‘இப்போ அப்பா அரிசியையும் உளுந்தையும் ஆட்டிக் கொண்டிருப்பார்.’
ஒரு நொடி கழிந்து, அவன் கேட்டான்:
“இல்லையாம்மா?”
அன்னை எதுவும் கூறவில்லை. மீண்டும் அவன் சொன்னான்.
“இப்போ என் அப்பா நல்ல தடியா இருப்பாரோ என்னவோ?”
அதற்குப் பிறகும் அவனே தொடர்ந்து சொன்னான்.
“அப்பா தோசையும் இட்லியும் சாப்பிட்டு நல்லா… தடியா இருப்பார்.”
பொன்னப்பன் சொன்னான்:
“ஓ… அப்பா அப்படியொண்ணும் தடியாக இருக்கமாட்டார்.”
யாரும் எதுவும் பேசவில்லை. தங்கப்பனின் முகம் மிகவும் பிரகாசமாக இருப்பது அந்த நிலவு வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. அவன் தன்னுடைய தந்தையை நினைத்து நினைத்து ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தான். பொன்னப்பனும் தன் தந்தையை நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். தங்கப்பன் மீண்டும் கூறினாள்:
“அப்பாவைக் கொஞ்சம் பார்க்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்! அம்மா, அப்பாவோட ஒரு கடிதத்தை எடுத்துட்டு வந்து படி.. என்னைப் பத்தி என்ன சொல்லியிருக்கார்? கொஞ்சம் படிம்மா.”
பொன்னப்பன் கேட்டான்.
“நிலவு வெளிச்சத்துல எப்படி கடிதத்தை வாசிக்க முடியும்?”
அது சரிதான்… தங்கப்பனுக்குப் புரிந்தது. மீண்டும் மலர்ந்த முகத்துடன் அவன் ஞாபகங்களில் மூழ்கினான். தொடர்ந்து அவனுடைய இதயத்திற்குள்ளிருந்து அவனையும் மீறி சிந்தனைகள் வெளியேறிக் கொண்டிருந்தன.
“பாவம் அப்பா… எங்கெங்கியோ போய் அரிசி ஆட்டிக் கொண்டிருக்கிறார்னா, அது மருந்து வாங்கறதுக்கும் எல்லாரும் சோறு சாப்பிடறதுக்கும்தான்… இல்லையாண்ணே?”
பொன்னப்பன் அதற்கு உடனடியாக பதில் சொன்னான்.
“பிறகு… நமக்கு எப்படி வாழ முடியும்?”