அவன் வரவில்லை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6569
தன் கைகளைக் குவித்து தலையில் வைத்துக் கொண்டு, மேலே நின்று கொண்டிருந்த முழு நிலவை நோக்கி முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு தங்கப்பன் பிரார்த்தித்தான்:
“என் கடவுளே! என் அப்பாவுக்கு எந்தவொரு நோயும் வராம பார்த்துக்கோ.”
அந்த சிறுவன் தலைகுனிந்து வணங்கினான்.
“என் அப்பா ஒரு முறை இங்க வந்தா எப்படியிருக்கும்? எனக்கு பார்க்கணும்போல இருக்கு.”
அதை ஏற்றுக் கொண்டு பொன்னப்பனும் சொன்னான்:
“எனக்கும் அப்பாவைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு! அப்பா போயி எவ்வளவு நாளாச்சு!”
அந்தப் பெண் குழந்தையும் கண் விழித்திருந்தால், அதுவும் ஒரு வேளை இவ்வாறு கூறியிருக்கும்.
‘எனக்கும் அப்பாவைப் பார்க்கணும்போல ஆசையா இருக்கு.’
அப்படியென்றால் அந்தக் குடும்பத்தில் அம்மாவுக்கு மட்டும் அப்பாவை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை இல்லையா? எவ்வளவோ தூரத்திலிருக்கும் காப்பி கடையில் அவன் பெரிய குழவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறான் என்றால், அது அவளுக்கும் சேர்த்துதானே!
திடீரென்று கொச்சுகல்யாணி கயிறு திரித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினாள். அவள் பொன்னப்பனை மட்டையை எடுத்துப் போடுவதை நிறுத்தும்படி கூறினாள். அவன் குறைப்பட்டுக் கொண்டான்.
“அம்மா, ரெண்டு முடி கயிறு திரிக்கல… பிறகு எப்படி நாளைக்கு சர்க்கரையும் கப்பையும் வாங்க முடியும்?”
- அம்மா சொன்னாள்:
“நேரம் ரொம்பவும் இருட்டிருச்சு… பக்கத்து வீடுகள்ல இருக்கறவங்க எல்லாரும் தூங்கிட்டாங்க. படுப்போம்.”
கொச்சுகல்யாணி ஒரு பதைபதைப்புடன் இருந்தாள்.
நார், தென்னை மட்டை, கயிறு, கோணி – எல்லாவற்றையும் உள்ளே வைத்துவிட்டு, கொச்சுகல்யாணியும் பிள்ளைகளும் உள்ளே வந்து கதவை அடைத்து, பத்திரமாக தாழ்ப்பாள் போட்டார்கள். மேற்குப் பக்க மண் சுவரிலிருந்த சிறிய சாளரத்தையும் அவள் அடைத்து தாழ்ப்பாள் போட்டாள்.
“அம்மா! காத்து வராது…” என்று பொன்னப்பன் கூறியதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
“எனினும்… கொச்சுகல்யாணி, நான் பிரியம் வச்சிருக்கேன்.”
கொச்சுராமன் தன் கவலையை வெளிப்படுத்தவில்லை. அதற்குப் பிறகும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.
அவள் செயலற்ற நிலையில் சொன்னாள்:
“கொச்சுராமன் அண்ணே, நீங்க ஏன் இப்படிப் பேசுறீங்க? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. அந்தப் பாசம் ஆம்பளை எங்கோ ஆட்டுக்கல் பிடிச்சும் காய்கறி வெட்டியும்தான் நானும் பிள்ளைகளும் வாழ்ந்து கிட்டிருக்கோம்.”
கொச்சுராமன் எதுவும் கூறவில்லை. முழுமையான ஆசையுடன் அவன் கொச்சுகல்யாணியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுடைய வாழ்க்கையில் இருக்கும் ஒரே ஒரு விருப்பம் என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். அவன் எவ்வளவு நாட்களாக அவளுக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கிறான்! மிகவும் சிரமப்படும்போது, அவன் அவளுக்கு உதவி செய்வதுண்டு, அந்த உதவிகளைப் பெறாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைப்பதுண்டு. ஆனால், மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பட்டினியால் அந்தப் பிள்ளைகள் தளர்ந்து போய் கிடக்கும்போது, அவள் ஒரு ரூபாயோ, ஒரு படி அரிசியோ, கால் வீசை கப்பையோ அவனிடமிருந்து வாங்கிக் செல்வாள். தங்கப்பன் முழுமையாக படுத்த படுக்கையில் கிடந்தான். அவனுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தது அவன்தான். அவன் இல்லாமல் போயிருந்தால், இந்த நேரம் அவன் இறந்து போயிருப்பான். அவள் அவனுடைய முகத்தைப் பார்த்து ‘முடியாது’ என்று எப்படிக் கூறுவாள்? அவளால் முடியாது. அவளைக் காப்பாற்றுவதற்கு அவளுடைய பதில் போதாது.
எது எப்படி இருந்தாலும், கொச்சுராமன் மரியாதைக்காரன். அவன் எல்லையைக் கடந்து ஒரு அடிகூட முன்னால் வைத்ததில்லை. ‘உனக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்’ என்று கூறிவிட்டுச் செல்வான் அவ்வளவுதான். அவன் அப்படி நடந்து செல்வதைப் பார்க்கும்போது, அவளுக்கு மனதில் வருத்தம் உண்டாகியிருக்கிறது. எனினும், அதற்குப் பிறகும் வருவான்.
“கொச்சுகல்யாணி, இது என்னுடைய ஆசை.”
யாருக்கும் எந்தவித சந்தேகமும் தோன்றாத அளவிற்கு அவன் இந்த மாதிரி எவ்வளவு நாட்களாக சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறான்!
மாதவனின் – அவளுடைய கணவனின் கடிதம் வந்தது. ஏழு ரூபாய் அனுப்பி வைத்திருந்தான். வைத்தியரைப் பார்த்து தங்கப்பனுக்கு மருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும். தற்போது வருவதற்கு வாய்ப்பில்லை. வரும்போது பொன்னப்பனுக்கும் தங்கப்பனுக்கும் குழந்தைக்கும் ஆடைகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் நலமாக இருக்கிறேன். அங்குள்ள நீங்கள் எல்லாரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.’ இதுதான் அந்தக் கடிதத்திலிருந்த வாசகங்கள். கடிதத்தை வாசித்து முடித்த போது, கொச்சுகல்யாணிக்கு அழுகையும் கோபமும் உண்டாயின.
தங்கள் அன்னை ஏன் அழுகிறாள் என்பதற்கான காரணம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. தங்கப்பன் சொன்னான்:
“அம்மா ஏன் அழறாங்கன்னு எனக்குத் தெரியும். அப்பா வரலைன்றதுக்காகத்தான்…”
பொன்னப்பன் கேட்டான்:
“அப்படின்னா அம்மா ஏன் கோபப்பட்டு மிகப் பெரிய பாவின்னு கத்துறாங்க.”
“அப்பா வரலைன்றதுக்காகத்தான்…”
கொச்சுகல்யாணி ஒரு நீளமான கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தாள். அதில் அவள் ஏராளமான விஷயங்களைப் பற்றி எழுதியிருந்தாள். குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொடுப்பதாக அதில் அவள் எழுதியிருந்தாள். அவன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறான் என்பதை அறிந்து தனக்கு மிகவும் சந்தோஷமே என்று எழுதியிருந்தாள். அவள் சந்தோஷமாக இருப்பாள் என்ற அவனுடைய நம்பிக்கையைப் பற்றி அவனுக்கு சில விஷயங்களைக் கூற வேண்டியதிருந்தது. அவள் தன்னுடைய கஷ்டங்களையும் துயரங்களையும் விளக்கி அதில் எழுதியிருந்தாள். கொச்சுராமனிடம் கடனாக வாங்கிய ஒரு பெரிய தொகையை அடைக்க வேண்டியதிருப்பதை அவள் தெரியப்படுத்தியிருந்தாள். ‘சீக்கிரம் இங்குவந்து எல்லாவற்றையும் தீர்த்து வைத்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று அந்தக் கடிதத்தில் அவள் எழுதியிருந்தாள்.
தொடர்ந்து அவள் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
அவன் வருவான். வராமல் இருக்க மாட்டான். அந்த அளவிற்கு கோபத்துடன் அவள் எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தை வாசித்தபிறகு, அங்கு வராமலிருக்க அவனால் முடியாது என்று அவள் முழுமையாக நம்பினாள். பிள்ளைகள் வழியையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். விரல்களால் எண்ணிவிட்டு பொன்னப்பன் கூறுவான்.
“அப்பா இன்னைக்கு வருவார்.”
தங்கப்பன் கூறுவான்.
“இல்லை… நாளைக்கு காலையில் வருவார்.”
அதற்குப் பிறகு அவர்களுக்கிடையே வாதங்களும், எதிர்வாதங்களும் உண்டாகும். தங்களின் தந்தை எப்போது வருவார் என்பதை உறுதியாகக் கூற வேண்டும் என்று அவன் கூறுவான்.
தங்கப்பன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்:
“அப்பா வர்றப்போ அப்பம் கொண்டு வருவாரோ என்னவோ!”
அப்போது பொன்னப்பன் சொன்னான்: