அவன் வரவில்லை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6543
“எனக்கு ஆபத்து வந்திடுச்சுன்னு தோணுது. கடிதங்கள் எழுதியாச்சு…. பிள்ளைகளோட அப்பன் வரவே இல்லை.”
கொச்சுராமன் அதிர்ச்சியடைந்து, அசையே இல்லாமல் நின்று விட்டான். கொச்சுகல்யாணி கேட்டாள்:
“என்ன முடிவு செய்திருக்கீங்க ஆம்பளை?”
கொச்சுராமன் எதுவும் கூறவில்லை.
அவள் தொடர்ந்து கேட்டாள்:
“பிள்ளைகளோட அப்பன் வந்தால், என்ன சொல்லுவேன்?”
அழுதுகொண்டே கொச்சுகல்யாணி குற்றம் சுமத்தினாள்.
“காலில் தோலே இல்லாமல் நடந்து திரிஞ்சு, பொன்னே… பொடியேன்னு அழைச்சு, என்னை மோசம் பண்ணிட்டீங்க… என்னோட போதாத காலம்… நான் என்ன சொல்றது?”
அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள். அவன் எந்த பதிலும் கூறவில்லை.
“பிள்ளைகளோட அப்பன் வந்தால், என்னைக் கொன்னுடுவான். அதற்கு முன்னாடியே நான் சாகப் போறேன்.”
பாவம்… கொச்சுராமன் அதற்கு என்ன பதில் கூற வேண்டும்? அவள் கூறியவை அனைத்துமே சரிதான். ஆபத்து வராது என்று அவன் உறுதியான குரலில் கூறியிருந்தான். அப்படியே வந்தாலும், தான் துணைக்கு இருப்பதாக அவன் வாக்களித்திருந்தான். தான் அவளைக் காதலிப்பதாக அவன் சத்தியம் செய்து கூறினான். எல்லாமே சரிதான்… ‘என்னை ஏமாற்றி விடாதீர்கள்’ என்று அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது, ‘இல்லை’ என்று அவன் வாக்குறுதி கொடுத்தான். அவளுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு அளித்து காப்பாற்றுவதற்காக வேற்றூருக்குப் போயிருக்கும் அந்த அப்பாவி மனிதனுக்கு தான் துரோகம் பண்ணுவதாக அவள் கூறியதற்கு, ‘பரவாயில்லை’ என்று கூறி அவன் அந்தப் பெரிய உண்மையை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டான். எனினும், அவன் என்ன கூற வேண்டும்?
தான் அவளைக் காப்பாற்றுவதாக அவன் கூற வேண்டுமா? அவ்வளவு சீக்கிரம் அதைக் கூறுவதற்கு யாரால் முடியும்? இன்னும் சொல்லப் போனால் அந்த விஷயத்திலிருந்து தப்பித்து ஓடுவதற்கான வழியெதுவும் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதல் சிந்தனையாக இருக்கும்.
சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, கொச்சுராமன் அங்கிருந்து புறப்பட்டான்.
“எதுவுமே சொல்லாமல் போறீங்க?”
“இல்லை… நான் வர்றேன்.”
அவள் தனியாக அந்தக் கவலையை அனுபவிக்க வேண்டும்.
அன்றிரவு தங்கப்பன் பொன்னப்பனிடம் கூறினான்.
“என்னண்ணே…. அப்பா ஏன் வரலை?”
பொன்னப்பன் சொன்னான்.
“அப்பாவுக்கு அங்கே வேலை இருக்குறதுதான் காரணம்…”
“நான் சாகப் போறேன்னு எழுதியும், அப்பா வரலையே!”
சிறிது நேரத்திற்குப் பேரமைதி.
தங்கப்பன் தொடர்ந்து சொன்னான்:
“அப்பாவுக்கு என்மேல விருப்பம் இல்லாமப் போயிருக்கும். நான் செத்தால் அப்பாவுக்கு என்ன?”
மேலும் சிறிது நேரம் கடந்த பிறகு, அந்தச் சிறுவன் தொடர்ந்து சொன்னான்:
“எது எப்படி இருந்தாலும், என் அப்பாவைப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு!
அந்தப் பிள்ளைகளுக்கு இரவு வேளையில் தூக்கம் வருமா? வருவதற்கு வழியில்லை. அவர்கள் தங்களின் தந்தையை மனதில் நினைத்துக் கொண்டே படுத்திருந்தார்கள்.
வெளியே அவர்களின் அன்னை யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். கொச்சுகல்யாணிக்கு கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன. அதைக் கேட்பதற்கு கடமைப்பட்ட ஆளும் உண்டு. கொச்சுராமன் கேட்டான்.
“அதுக்கு நான் மட்டுமா குற்றவாளி! நீயும்தானே! ஆபத்து வராம நீயும் கவனமாக இருந்திருக்கணும்.”
இடி விழுந்ததைப்போல கொச்சுகல்யாணி அதிர்ச்சியடைந்து விட்டாள்.
“அய்யோ… மகாபாவி! என்ன இப்படி பேசுறீங்க! நான்… நான்… உங்க முன்னால பிள்ளைகளைக் கொன்னுட்டு உங்க முன்னால செத்துப் போவேன்.”
தங்கப்பன் கேட்டான்.
“யாரும்மா அது?”
அவள் எதுவும் கூறவில்லை. பொன்னப்பன் மெதுவாக எழுந்து வாசலின் வழியாக வெளியே பார்த்தான். தன் தாயும் கொச்சுராமன் அண்ணனும் பேசிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
தங்களின் தாயிடம் அந்த பிள்ளைகள் சில விஷயங்களைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தார்கள். தங்கப்பன் தன் அனையிடம் கேட்டான்.
“கொச்சுராமன் அண்ணன் எதுக்கும்மா அரிசியையும் கப்பையையும் இங்கே வாங்கிட்டு வந்து தரணும்?”
அந்தத் தாயின் நாக்கைச் செயல்பட விடாமல் செய்த ஒரு கேள்வி அது. அவன் தொடர்ந்து கேட்டான்.
“அப்பா அனுப்பி வைக்கிற சக்கரத்தை (திருவிதாங்கூர் நாணயம்) கொச்சுராமன் அண்ணனுக்குக் கொடுத்திடுவோம். இல்லையாம்மா?”
அந்தக் கேள்வி கொச்சுகல்யாணிக்கு ஆறுதலாக இருந்தது. அவள் சொன்னாள்:
“ஆமா, மகனே!”
இதற்கிடையில் ஒரு மணியார்டர் வந்தது. கொச்சுகல்யாணி அந்த மணியார்டரை வாங்கவில்லை. அதைத் திருப்பி அனுப்பினாள்.
தங்கப்பன் கேட்டான்.
“அப்பா அனுப்பி வைத்த பணத்தை எதுக்கும்மா வாங்காம இருந்தே?”
அதற்கு அந்தத் தாய் பதில் கூறாமல் இருக்க, அவன் மீண்டும் கேட்டான்.
“என் அப்பாவுடன் எதுக்கும்மா கோபமா இருக்கே?”
“பேசாம இருடா…”
அது ஒரு திட்டுதலாக இருந்தது. அதற்குப் பிறகு அவன் வாயைத் திறக்கவேயில்லை.
அண்ணனும் தம்பியும் சகோதரியும் சேர்ந்து தனியாக உட்கார்ந்து தங்களின் தந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். தங்களின் தந்தை இனிமேல் வரமாட்டார் என்று பொன்னப்பன் கூறுவான். அதைக் கேட்டதும், தங்கப்பன் அழ ஆரம்பிப்பான்.
“அப்பா ஏன்ணே இன்னும் வராம இருக்காரு?”
எல்லாம் தெரிந்தவனைப் போல பொன்னப்பன் கூறுவான்:
“அது அப்படித்தான்…”
“என் அப்பா… என் தங்க அப்பா… கொஞ்சம் இங்கே வரணும்… நான் பார்க்கணும்…”
அதற்குப் பிறகு அவர்கள் தங்களின் தாயிடம் தங்களின் தந்தையைப் பற்றி எதுவும் கேட்பதே இல்லை.
தங்களின் அன்னையின் வீங்கிக் கொண்டு வரும் வயிற்றின்மீது, அன்பு கொண்ட தங்கப்பன் முத்தமிட்டான். அங்கு தன்னுடைய ஒரு குட்டித் தம்பி படுத்துக் கிடக்கிறான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். தொடர்ந்து அவன் தன் தாயிடம் கேட்டான்.
“நமக்கு ஒரு குட்டித் தம்பி வரப் போறான்ற விஷயம் அப்பாவுக்குத் தெரியாது… அப்படித்தானேம்மா?”
தாயால் பதில் கூற முடிகிற ஒரு கேள்வியாக அது இருக்கவில்லை.
“குழந்தை பிறக்குறப்போ அப்பா வருவாரில்லம்மா? தம்பிக்கு சட்டை… எனக்கு பலகாரம்… எல்லாத்தையும் அப்பா வாங்கிட்டு வருவாரு.”
பாவம்… கதை என்னவென்று தெரியாத குழந்தை!
அன்று மாமரத்திற்குக் கீழே இருக்கும்போது, அவனைவிட விஷயங்கள் தெரியக்கூடிய பொன்னப்பன் தங்கப்பனிடம் கேட்டான்.
“நீ எதுக்கு அம்மாவோட வயித்துல முத்தம் கொடுத்தே?”
“ம்… என்ன? நான் என்ன குட்டித்தம்பிக்கு முத்தம் கொடுத்தேன். தங்கச்சி வயித்துல இருக்குறப்போ, அப்பா அந்த மாதிரி அம்மாவோட வயித்துல முத்தம் கொடுத்தாரு.”
பொன்னப்பன் ஒரு உண்மையை தங்கப்பனிடம் கூறினான்:
“அது நம்ம அப்பாவோட மகன் இல்லை.”