அவன் வரவில்லை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6543
“அப்பம் கொண்டு வந்தாலும், உனக்குத் தரமாட்டார். நீ மருந்து குடிக்கணும்.”
அது உண்மைதான். எனினும், தன் தந்தை தனக்கு அப்பம் தருவார் என்று உறுதியாக தங்கப்பன் நம்பினான்.
எது எப்படி இருந்தாலும் கொஞ்ச நாட்களாகவே கொச்சுகல்யாணி இரவு வேளைகளில் ஒரு ஆள் சாப்பிடக் கூடிய அளவிற்கு சாதத்தையும், குழம்பையும் தயார் பண்ணி வைத்துக் கொண்டிருந்தாள். பொன்னப்பனுக்கும் தங்கப்பனுக்கும் பெண் குழந்தைக்கும் இரவு உணவைப் பரிமாறும்போது, அவர்கள் கூறுவார்கள்.
“அம்மா, அப்பா வந்தாருன்னா அவருக்கு சோறு இருக்கணும்.”
கொச்சுராமன் தன்னுடைய வாழ்க்கையிலிருக்கும் அந்த ஒரே ஒரு ஆசையுடன் ஒவ்வொரு நாளும் ஒரு முறை ஆசையுடன் ஒவ்வொரு நாளும் ஒருமுறை அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் கேட்பான்:
“நான் இன்னைக்கு இரவில் வரட்டுமா?”
“அய்யோ! என்னை கொலை செய்யப்பட வச்சிடாதீங்க! பிள்ளைங்களோட அப்பா எப்போ வருவாருன்னு சொல்ல முடியாது.”
இவ்வாறு அவனை எதிர்பார்த்துக் காத்திருந்து நாட்கள் கடந்து கொண்டிருந்தன. அவன் வரவில்லை. வர இயலவில்லை என்று கடிதம் வந்தது. கொச்சுராமனிடம் வாங்கியிருக்கும் கடனை தான் வரும்போது திரும்பிக் கொடுத்து விடுவதாக அவன் எழுதியிருந்தான். குழந்தைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தான். கையில் கிடைக்கும்போது பணம் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்திருந்தான்.
பக்கத்து வீடுகளிலிருந்த பெண்களிடம் கொச்சுகல்யாணி கண்ணீருடன் தன் கஷ்டங்களைக் கூறினாள்.
“மூணு சின்னப் பிள்ளைகளை வச்சுக்கிட்டு நான் தனியா வாழ்ந்துட்டு இருக்கேன். நான் என்ன செய்வேன்?”
வயதான பாட்டி அவளைத் தேற்றினாள்:
“உங்களுக்கு நாழி அரிசி வேணுங்கறதுக்குத்தானே அவன் போயிருக்கிறதே! ஆசைப்பட்டா வந்துட முடியுமா என்ன?”
அவள் ஏன் அழுகிறாள்?
கொச்சுகல்யாணி தொடர்ந்து சொன்னாள்:
“பட்டினி கிடந்தாலும், கூட இருந்தால் எதையும் சகிச்சிக்க முடியும்.”
வாழ்க்கை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருந்த கிழவி சொன்னாள்.
“அது இப்போ நடக்குமா?”
மீண்டும் கொச்சுகல்யாணிக்கு கூறுவதற்கு விஷயம் இருந்தது.
“நானும் குழந்தைகளும் இரவு வேளைகளில் தனியாகவே இருக்க வேண்டியதிருக்கு.”
பொன்னப்பனும் தங்கப்பனும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தார்கள்.
அன்றும் கொச்சுராமன் கொச்சுகல்யாணியின் வீட்டிற்கு வந்தான். அவனும் அவளைத் தேற்றினான். எப்போதும் இருக்கக் கூடிய அந்த வேண்டுகோளை அவன் அன்று அவளிடம் வைக்கவில்லை. அன்று தங்கப்பனுக்கு கஷாயத்திற்கான மருந்து வாங்கியாக வேண்டும். அவள் கூறாமலே, கொச்சுராமன் அதை வாங்கி வந்து கொடுத்தான்.
அன்று அவன் கேட்டான்.
“மாதவன் அண்ணன் வரமாட்டார் இல்லையா? இன்னிக்கு ராத்திரி நான் வரட்டுமா?”
அவள் எதுவும் பேசவில்லை. குனிந்து உட்கார்ந்து தேங்காய் மட்டைகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.
கொச்சுராமன் தொடர்ந்து சொன்னான்:
“நல்ல இருட்டு இருக்கும்!”
அதற்குப் பிறகும் அவள் வாயைத் திறக்கவில்லை.
கொச்சுராமன் கெஞ்சினான்.
“கொச்சுகல்யாணி, உன்னிடம் நான் எவ்வளவு நாட்களா கெஞ்சிக் கேட்டுக்கிட்டு இருக்கேன்!”
அதற்குப் பிறகும் கொச்சுகல்யாணி எதுவும் பேசவில்லை.
“என்ன… எதுவுமே சொல்லாமல் இருக்கே?”
கொச்சுராமன் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தான். கொச்சு கல்யாணி பதிலாகக் கூறுவதற்கு எதுவுமே இல்லையா? அப்படியே இருந்தாலும், அவள் என்ன பதில் கூறுவாள்?
“நான் வரட்டுமா?”
வரவேண்டாம் என்று அவள் கூறவில்லை.
“என்ன? நான் வரட்டுமா கொச்சுகல்யாணி?”
தொடர்ந்து அவன் ஏமாற்றம் கலந்த குரலில் கூறினான்.
“முடியும்… இல்லன்னா முடியாதுன்னு முடிவா சொல்லிடு… நாயைப் போல நான் எவ்வளவு நாளா நடந்துக்கிட்டிருக்கேன்.”
பொறுமையை இழந்து அவன் கூறிய வார்த்தைகள் அவை. அதற்குப் பிறகும் அவள் எதுவும் கூறவில்லை. என்ன பதில் கூறலாம் என்பதைப் பற்றி அவள் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கலாம். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வது… இல்லாவிட்டால் முடியாது என்று மறுத்துவிடுவது! அது ஒரு சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!
கொச்சுராமனும் நாயைப்போல வாசனை பிடித்து அவளுக்குப் பின்னால் நடந்து திரிந்து பொறுமையை இழந்துவிட்டான்.
“நான் ராத்திரி வரட்டுமா கொச்சுகல்யாணி?”
“இன்னைக்கு எனக்கு தலைவலியா இருக்கு!”
அவனுடைய உள் மனதில் ஒரு பிரகாசம் உண்டானது.
“அப்படின்னா… நாளைக்கு ராத்திரி… அப்படித்தானே?”
அதற்கு பதில் இல்லை. கொச்சுராமன் கேட்டான்.
“இல்லைன்னா நாளை மறுநாளா?”
சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்து கேட்டான்.
“அப்படின்னா… நாளை மறுநாள் போதும்… என்ன?”
அவள் எதுவும் கூறவில்லை.
“நாளை மறுநாளும் நல்ல இருட்டு இருக்கும். பிள்ளைகள் எல்லாரும் தூங்கின பிறகு வர்றேன். என்ன?”
அவள் மெதுவாக முனகினாள்:
“ம்…”
கொச்சுராமனின் காதில் அந்த முனகல் சத்தம் கேட்டது. ‘உம்’ கொட்டுவதை அவன் கேட்டான். அவனுக்கு நம்பிக்கை உண்டானது.
“நாளைக்கு மூணு ரூபாய் தர்றேன்.”
கொச்சுகல்யாணி மாதவனுக்கு தினமும் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தாள். ஓராயிரம் பொய்களை அவள் கடிதத்தில் எழுதினாள். தங்கப்பன் இறக்கும் நிலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான் என்பது வரை அவள் எழுதிவிட்டாள். அவனை வரவைப்பதற்காக அவள் பல வகைகளிலும் முயற்சி செய்தாள்.
ஆனால். மாதவன் வரவில்லை. தற்போதைக்கு அவனால் வரமுடியவில்லை. ஒரு வேளை தினமும் கடிதங்கள் வருவதைப் பார்த்து, அதுவும் காரணங்கள் மாறி மாறி கூறப்பட்டிருப்பதைப் பார்த்து… அவனுக்கு அவை அனைத்தும் பொய் என்று தோன்றியிருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், அவன் வரவில்லை.
நான்கைந்து நாட்களாக கொச்சுராமனை பார்க்க முடியவில்லை. கொச்சுகல்யாணி பதைபதைப்பு அடைந்து கொச்சுராமனை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள். அவனைக் காணவே காணோம்… அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் கிழக்கு திசையிலிருந்த பாதையின் வழியாக கொச்சுராமன் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் அழைத்தாள்.
“கொச்சுராமன் அண்ணே!”
அவன் கேட்டான்:
“என்ன? இப்போ வர்றேன்…”
அந்த பதில் அவளை மேலும் சற்று பைத்தியம் பிடிக்கச் செய்தது. அவள் தன் மனதிற்குள் என்னென்னவோ நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள்.
சாயங்காலம் கடந்த பிறகு கொச்சுராமன் வந்தான்.
அவன் ஊரிலேயே இல்லை. அதனால்தான் வராமல் இருந்திருக்கிறான்.
“அப்படி என்ன முக்கியமான விஷயம்?”
அவன் கேட்டான்.
“என்ன முக்கியமான விஷயம்னா கேக்குறீங்க? சரிதான்… நான் என் உயிரையே விட்டுடுவேன். இந்த வீட்டைச் சுத்திச்சுத்தி திரிஞ்சிட்டு, இப்போ என்ன முக்கியமான விஷயம்னு கேக்குறீங்க! எப்படி பார்த்தாலும்… இந்த ஆம்பளைகளே இப்படித்தான்…”
“இந்த அளவுக்கு கோபப்படுறதுக்குக் காரணம் என்ன?”
அவள் சொன்னாள்: