வல்லிகாதேவி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6663
ஒருநாள் இரவு தேங்காய் குலையைப் பறிப்பதற்காக அவன் சங்கரமேனனின் தோப்புக்குள் நுழைந்தான். ஒரு தென்னை மரத்திலிருந்து ஓரிரு குலைகளை வெட்டி முடித்தவுடன், அவன் எப்படியோ தலைகுப்புற கீழே விழுந்துவிட்டான். ஒரு கால் ஒடிந்துவிட்டது. நகர முடியாமல் தென்னை மரத்திற்குக் கீழேயே அவன் படுத்துக்கிடந்தான். மறுநாள் காலையில் சங்கரமேனன் அவனுடைய இன்னொரு காலையும் அடித்து உடைத்தார். அதற்குப் பிறகு இங்கிருக்கும் சந்திரசேகரமேனன் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவனுடைய இரண்டு கால்களையும் நீக்க வேண்டிய நிலை வந்தது. காயம் ஆறியபிறகு, அவன் கடைவீதியில் சிறிது காலம் பிச்சை எடுத்துக்கொண்டும், பொறுக்கித் தின்றுகொண்டும் திரிந்தான். இப்போது அவனைக் காணவில்லை. எங்காவது கிடந்து இறந்திருக்க வேண்டும்.'' குமாரமேனன் கூறினார்.
‘‘தேவகியம்மாவைப் பற்றிய தகவல் ஏதாவது?'' ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் மாதவமேனன் கேட்டார்.
அதற்கு குமாரமேனன் கூறினார்: ‘‘நீங்கள் திருமண உறவை விட்டுப் பிரிந்த சிறிது நாட்களிலேயே அவர்களை சங்கரமேனனின் ஒரு மருமகன் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.''
அந்தக் காலத்தைப் பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மாதவமேனனுக்கு திடீரென்று அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சிறுமியைப் பற்றிய ஞாபகம் வந்தது. ‘வெள்ளாயி'யை கான்வென்ட்டில் ‘வல்லிகா' என்ற பெயரில்தான் அவர் சேர்த்துவிட்டிருந்தார். அவளுக்கு ஒவ்வொரு மாதமும் செலவிற்குத் தேவைப்படும் பணத்தை அனுப்பி வைப்பதற்கு தன்னுடைய வங்கி மூலம் மாதவமேனன் அப்போதே ஏற்பாடு செய்துவிட்டிருந்தார். அதற்குப் பிறகு வல்லிகாவைப் பற்றி நினைப்பதற்கு மாதவமேனனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவளுடைய அறிவுத் திறமையைப் பற்றியும், நல்ல குணத்தைப் பற்றியும், படிப்பதில் இருந்த ஈடுபாட்டைப் பற்றியும் புகழ்ந்து, கான்வென்ட்டில் இருந்த ‘அம்மா' மாதவமேனனுக்கு மூன்று, நான்கு கடிதங்கள் எழுதியிருந்தார். அதைத் தவிர, அவளைப் பார்க்கவேண்டும் என்று கான்வென்ட்டிற்கு ஒருநாள்கூட அவர் சென்றதில்லை.
இன்று அவளை சற்று போய் பார்க்கவேண்டும் என்று மாதவமேனன் முடிவெடுத்தார். சாயங்காலம் காரில் கான்வென்ட்டிற்குச் சென்றபோது, ‘அம்மா' அங்கு இல்லாத காரணத்தால், அன்று பார்க்க முடியாமல் போய்விட்டது. மறுநாள் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா. அதற்கான ஒரு அழைப்பிதழும், அன்று மாணவிகள் நடிக்கப்போகும் நாடகத்தில் சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, விருது பெற தகுதிபெற்ற மாணவியைத் தேர்வு செய்யும் நீதிபதிகளில் ஒருவராக அவர் இருக்கவேண்டும் என்ற விருப்பக் கடிதமும் அவருக்குக் கிடைத்தது.
மறுநாள் மாதவமேனன் கான்வென்ட்டில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்திற்குச் சென்றார். மிகவும் சிறப்பான கொண்டாட்டங்களுக்குப் பிறகு அங்கிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மிகப்பெரிய கவிஞரான ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஒதெல்லோ' என்ற நாடகத்தில் நடித்தார்கள். அதில் ஒரு மாணவி, கதாநாயகியான டெஸ் டெமோனாவின் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து, நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தாள். பேரழகு படைத்த அந்த மாணவியின் வசனம் பேசும் முறையும், நடிப்புத் திறமையும் அவள் ஒரு நடிகையாவதற்கென்றே பிறந்தவள் என்று பறைசாற்றின. அவளுடைய உடலுறுப்புகளின் ஒவ்வொரு அசைவும், பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கண்களின் சலனங்களும், நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களின் இதய நரம்புகளில் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து கொண்டிருந்தன. நாடகக் கலையைப் பற்றிய பாரம்பரிய அறிவோ, அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல்- கஷ்டங்களில் சந்தோஷத்தைக் கண்டவளைப்போல அந்த கன்யாஸ்திரீகளின் மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் கலைத் திறமை வீணாகிவிடப் போகிறது என்பதை நினைத்து மாதவமேனன் மனதிற்குள் மிகவும் கவலைப்பட்டார்.
நாடகம் முடிந்த பிறகு நீதிபதிகள் ஒரே குரலில், கதாநாயகியாக நடித்த பெண்ணுக்கு முதல் பரிசைத் தரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்கள். அத்துடன் அவளுக்கு மாதவமேனனின் சார்பில் தங்கத்தாலான ஒரு கைக்கடிகாரம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது.
அவர் அவளைப் பற்றி விசாரித்தாலும், அங்கு அதிகமாக எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
மறுநாள் அவர் கான்வென்ட்டிற்குச் சென்றார். அவருக்கு முன்னால் வல்லிகா அழைத்துக்கொண்டு வரப்பட்டாள்.
ஆச்சரியத்துடன் மாதவமேனன் அவளையே சிறிது நேரம் பார்த்தார். நல்ல உயரமும் வடிவமும் நிறைந்த அழகான உடலமைப்பு... புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்த அழகான உதடுகள்... மலர்ந்து, பிரகாசமாக காட்சியளித்த கண்கள்... நீண்டு, முனை வளைந்திருக்கும் நாசி... கறுத்து, சுருண்டு அடர்த்தியாக வளர்ந்திருந்த கூந்தல்... நன்றி உணர்வை ஒரு அரைச் சிரிப்பிலேயே வெளிப்படுத்தக்கூடிய பிரகாசமான பற்களின் வரிசைகள்... மொத்தத்தில்- கடைந்தெடுத்த ஒரு சிலையைப்போல முழுமையான அழகுடன் இருந்த அவளை எதுவும் பேசாமல் நீண்ட நேரம் அவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். ஏழு வருடங்களுக்கு முன்னால் ஒரு சாயங்கால வேளையில் ராயனின் குடிசையில் பந்தத்தைக் கையில் வைத்துக்கொண்டு வழியைக் காட்டிய அந்த வெள்ளாயி என்ற ஏழைச் சிறுமி இதோ ஒரு தங்கப் பட்டாம்பூச்சியாக மாறிவிட்டிருக்கிறாள்!
அளவற்ற நன்றியுணர்வுடனும், மதிப்புடனும் வல்லிகா தலையை குனிந்து குனிந்து, தன்னுடைய காப்பாளருக்கு முன்னால் எந்தவிதமான அசைவுமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். முந்தைய நாள் நாடகத்தில் நடித்ததற்காக கிடைத்த சிறப்புப் பரிசு அவளுடய இடது கையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
‘‘வல்லிகா, நேத்து டெஸ் டெமோனாவாக நடித்தது நீதானா?''
‘‘ஆமாம்...''
சந்தோஷத்தால் மாதவமேனனின் உள்மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.
‘‘வல்லிகா, இப்போ நீ எந்த வகுப்பில் படிச்சிக்கிட்டு இருக்குறே?''
‘‘இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்விற்குப் போறேன். இன்னும் தேர்வுக்கு இரண்டு மாதங்கள் இருக்கு.''
மாதவமேனன் அவளுடன் பல விஷயங்களைப் பற்றியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவளுக்கு ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், இந்தி ஆகிய மொழிகள் நன்கு எழுதுவதற்கும் பேசுவதற்கும் தெரிந்திருந்தது. ஆங்கில மொழியில் இருக்கும் இலக்கியம் சம்பந்தப்பட்ட முக்கியமான நூல்கள் அனைத்தையும் அவள் வாசித்து முடித்திருந்தாள்.
அப்போது ‘அம்மா' அவளுக்கு அருகில் வந்தார்.
வல்லிகாவைப் பற்றி நீண்ட நேரம் ஆழமாகவும், ஈடுபாட்டுடனும் அவர்களுக்கிடையே உரையாடல் நடத்திய பிறகு, மாதவமேனன் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
தேர்வு முடியும்வரை வல்லிகாவை கான்வென்ட்டிலேயே இருக்கச் செய்வது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
8
அதற்குப் பிறகு ஒரு வருடம் கடந்தது.
‘அரிஜன சிறுமி' என்ற திரைப்படம் வெளிவந்தபிறகு, இந்தியாவிலிருந்த திரை அரங்குகளில் ஒரு பூகம்பமே உண்டானது. இதயத்தைத் தொடக்கூடிய ஒரு புதுமையான கதை.