
நடிப்புக் கலையின் நுணுக்கத்தை நன்கு புரிந்து கொண்டு, படம் பார்ப்போரின் இதயத்தைத் துளைத்து உள்ளே நுழையக்கூடிய ஒரு புதிய நடிகை, எ.எம். மேனன் தயாரித்த அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாள். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்த அப்படம் திடீரென்று உலகப் புகழைப் பெற்றது. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் எவ்வளவோ மாதங்களாக தொடர்ந்து அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகியாக நடித்திருந்த வல்லிகாதேவிக்கு பாராட்டுகளும் ஆசீர்வாதங்களும் காதல் மொழிகளும் கொண்ட கடிதங்கள் தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேலாக உலகத்திலுள்ள பல இடங்களிலிருந்தும் வந்துகொண்டிருந்தன.
அந்தப் படத்தின்மூலம் கிடைத்த லாபம் முழுவதையும் மாதவமேனன் இந்தியாவிலிருக்கும் அரிஜன இனத்தைச் சேர்ந்த மக்களின் உயர்வுக்காக பாடுபடும் போராளிகளைப் படைப்பதற்காக செலவிட்டார்.
அந்தப் புகழின் வெப்பம் குறைவதற்கு முன்பே, இன்னொரு செய்தி பரவியது. அது வேறொன்றுமில்லை; அந்தப் படத்தின் இயக்குநரான திரு. எ.எம்.மேனன் (மாதவமேனன்), அதில் கதாநாயகியாக நடித்திருந்த வல்லிகாதேவியைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்தியே அது.
‘அம்பலப்புள்ளி' இல்லத்திலேயே மாதவமேனனின் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விலைமதிப்பு கொண்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் மணமக்களுக்கு வந்து சேர்ந்தன. பல மிகப்பெரிய மனிதர்களும் அந்தத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்திருந்தனர்.
மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் அந்தத் திருமணம் ஒரு வகையில் நடந்து முடிந்தது. அந்தச் சமயத்தில் புதிய மணமகளின் கையைப் பிடித்தவாறு, அங்கு குழுமியிருந்தவர்களுக்கு முன்னால் வந்து நின்றவாறு மாதவமேனன் இவ்வாறு கூறினார்:
‘‘ ’அரிஜன சிறுமி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் பாத்திரத்தை ஏற்று நடித்து உலகப் புகழ்பெற்றிருக்கும் வல்லிகாதேவியைப் பற்றி புதிதாகக் கூறுவதற்கு அதிகம் எதுவும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். எனினும், சில ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களை உங்களிடம் கூறவேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்குவந்து நின்றுகொண்டிருக்கிறேன். இவள் உண்மையிலேயே ஒரு அரிஜன வகுப்பைச் சேர்ந்த பெண்தான்.
ஏழு வருடங்களுக்கு முன்பு, கேரளத்திலிருந்த ஒரு புலையக் குடிசையில் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து வாழ்ந்த ஒரு புழுவாக இவள் இருந்தாள். என்னை அவமானத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த சில பொறாமை பிடித்த மனிதர்கள், மோசமான வழிகளில் நடந்தேன் என்று கூறி தண்டனை அளிக்க நினைத்து, அன்று இந்த ஏழைப் பெண்ணை அதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள். இவள் கர்ப்பமாகி விட்டாள் என்றொரு செய்தியைப் பரப்பி விட்டார்கள். சில பெரிய மனிதர்களின் தூண்டுதல்களால், இவளுடைய தந்தை இவளை என் வீட்டின் வாசற்படியில் வீசியெறிந்துவிட்டுப் போய்விட்டார். ஊர்வசியின் சாபம் உபயோகம் என்று கூறுவதைப்போல, அந்தக் காரணத்தால், நடிப்புலகத்திற்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறாள். ஏழு வருட அனுபவங்களுக்குப் பிறகு, விலைமதிப்புள்ள- இணையற்ற ஒரு மாணிக்கக் கல்லாக இவள் இதோ வெளியே வந்திருக்கிறாள்.
இதை ஒரு விசேஷமான சம்பவமாக நீங்கள் யாரும் நினைக்க வேண்டாம்.
‘தேய்த்து மினுக்கினால் ஒளியும் மதிப்பும் பெற்றிடும் கற்கள்.'
பாரதத் தாயின் மடியில் கூர்தீட்டப்படாமல் இன்னும் எவ்வளவோ பேர் கிடக்கிறார்கள். அவர்களை உயர்வுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, பாரதத்திற்கும் உயர்வு உண்டாகும். கல்வி, பண்பாடு ஆகியவற்றின் மூலம் எவ்வளவோ வல்லிகாதேவிகளை இனியும் படைத்துப் பார்ப்பதற்கு என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்தனை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook