வல்லிகாதேவி - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6663
அரை மணி நேரம் கடந்தது. ‘அம்பலப்புள்ளி' இல்லத்திலிருந்து எரிந்து கொண்டிருந்த கயிறையும், பந்தத்தையும், பெட்டியையும், மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு சிலர் வெளியேறினார்கள். மாதவமேனனின் மனைவியும், மனைவியின் சகோதரிகளும், அவர்களுடைய பணியாட்களும் தான் அவர்கள்.
6
அன்று இரவு மாதவமேனன் தன்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்து விளக்கை அணைத்தார். கதவை அடைத்ததும், அவருடைய மனதிலிருந்த அமைதியெல்லாம் இல்லாமல் போனது. ஓராயிரம் சிந்தனைகள் அந்த இருட்டுக் குள்ளிருந்து வருவதைப்போல அவருடைய மனதிற்குள் நுழைந்து அங்கு சில அதிர்வுகளை உண்டாக்கி விட்டன. சமுதாயத் தலைவர்களின் மோசமான தூண்டுதல்கள் காரணமாக தன்மீது சுமத்தப்பட்ட- நினைத்துப் பார்க்க முடியாத தண்டனையையும், குற்றச்சாட்டையும் நினைத்து,அவர் படுக்கையில் கவிழ்ந்து படுத்தவாறு ஒரு குழந்தையைப்போல குலுங்கிக் குலுங்கி அழுதார். அதன் உண்மைத்தன்மை எல்லாருக்கும் நன்கு தெரியுமென்றாலும், அந்தக் குற்றச்சாட்டை நம்புவதற்கும் சிலர் இல்லாமலில்லை என்ற விஷயம் மாதவமேனனுக்கும் தெரியும். சமுதாயம் அப்படித்தானே இருக்கும்?
மறுநாள் காலையில் மாதவமேனன் அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சிறுமியின் அறைக்குச் சென்று, அவளிடம் மிகுந்த கூச்சமும் மனவேதனையும் கலந்த ஒரு அமைதியான குரலில் கேட்டார். ‘‘உன் அப்பன் கூறுவதைப்போல நீ கர்ப்பமாக இருக்கியா?''
அந்த ஏழைச் சிறுமி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே கூறினாள். ‘‘இல்லை, தம்புரானே! இல்லை... அதிகாரத் தம்புரான் கொஞ்ச நாட்களாக சாயங்கால நேரத்துல வந்து என்னை என்னென்னவோ செய்தார்!''
அந்த நிமிடமே மாதவமேனன் அவளை அழைத்துக் கொண்டு நகரத்திற்குச் சென்றார். அங்கிருந்த ஒரு கான்வென்ட்டில் அவளுக்கு ஒரு நல்ல கல்வி கிடைப்பது வரை அவள் தங்கியிருப்பதற்குத் தேவையான அனைத்து வசதியையும் செய்து முடித்த பிறகுதான், அவர் வீட்டிற்கு திரும்பியே வந்தார்.
7
அதற்குப் பிறகும் மாதவமேனன் இரண்டு வருட காலம் தன் குடும்பத்தை ஆட்சி செய்தார். அவருடைய வயதான தாய், இதற்கிடையில் மரணத்தைத் தழுவினார். அதைத் தொடர்ந்து மாதவமேனன் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு, ஒரு ஐரோப்பிய பயணத்திற்காகப் புறப்பட்டார்.
அவர் கிளம்பும்போது மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
மூன்று வருட காலம் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, தொழில் சம்பந்தப்பட்ட பல அறிவுகளையும் பெற்றுக்கொண்டு, அவர் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார்.
சிறிது காலம் தன்னுடைய கிராமத்தில் இருந்துவிட்டு, அவர் பம்பாய்க்குச் சென்று, அங்கு ஒரு பெரிய திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
திரு.எ.எம். மேனவனின் (அம்பலப்புள்ளி மாதவமேனனின்) சொந்த நிறுவனமான, ‘சந்திரிகா ஃபிலிம் கம்பெனி' பொதுவாகபணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல. படிப்பு வாசனை இல்லாத மக்களை கல்வி கற்க வைக்கக்கூடிய ஒரு ஊடகமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் மட்டுமே மாதவமேனன்அந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்தார்.
‘அரிஜனங்களின் எழுச்சி',. ‘தொழிலாளர்கள் சங்கம்', ‘கிராம வளர்ச்சி', ‘வறுமைக்கான காரணம்', ‘சுதந்திரச் செல்வம்'- இப்படிப்பட்ட பல விஷயங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இதயத்தைத் தொடக்கூடிய எவ்வளவோ கதைகள் அங்கிருந்து திரைப்படங்களாகத் தயாராகி வெளிவந்தன. ஒற்றுமையாக மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை பலமாக பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பும் அதன்மூலம் நிறைவேறியது. வாழ்க்கையை அதன் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்தாத ஒரு படம்கூட அங்கு தயாராகி வெளிவரவில்லை. சாம்ராஜ்ஜியங்களுக்குக் கீழே, முதலாளித்துவத்திற்குக் கீழே வளர்ந்து கொண்டிருக்கும் பல லட்சம் மக்களின் துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை அப்படியே
திரைப்படங்களில் காட்டினார்கள். அந்தத் திரைப்படங்கள் திரைக்கு வந்து மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, சிந்திக்கச் செய்தன. முதலாளிகளை பயமுறுத்தி, தொழிலாளிகளுக்கு உணர்வையும், உற்சாகத்தையும் அவை அளித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரிய மக்கள் கூட்டத்தையே அவை கற்கச் செய்தன.
அந்த வகையில் சந்திரிகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய புகழும், விளம்பரமும் கிடைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், மாதவமேனன் ‘அரிஜன சிறுமி' என்ற கதையை எழுதினார். அது ‘அச்யுதகன்ய' போன்ற புகழ்பெற்ற இந்தித் திரைப்படங்களைவிட இதயம் தொடக்கூடிய கதைக்கருவும் காட்சிகளும் நிறைந்ததாக இருந்தது.
ஆனால், அதன் கதாநாயகி பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு, மனம் விரும்புவது மாதிரி ஒரு நடிகை மாதவமேனனுக்குக் கிடைக்கவில்லை.
அந்தச் சூழ்நிலையில் சற்று ஓய்வெடுப்பதற்காக அவர் மலபாருக்கு வந்தார்.
‘அம்பலப்புள்ளி' குடும்பத்தின் ஆட்சி முன்பு நடந்ததைப் போல்தான் நடந்துகொண்டிருந்தது. சந்திரசேகரமேனன் தன் அண்ணனைவிட திறமை வாய்ந்த- ஒரு பரந்த மனம் கொண்ட மனிதராக இருந்ததால், விவசாயிகளுக்கு நிறைய சுதந்திரமும் வளர்ச்சியும் கிடைத்துக்கொண்டிருந்தன.
‘அம்பலப்புள்ளி' குடும்பத்தின் உறவினர்களுக்கு மத்தியில் மாதவமேனன் மிகவும் சந்தோஷமாக ஓரிரண்டு நாட்கள் செலவழித்தார். ஊரின் விசேஷங்களைப் பற்றி அவருடைய பழைய நண்பரான குமாரமேனன் அவரிடம் கூறினார்.
அதிகாரத்தில் இருந்த சங்கரமேனன் என்ற மனிதரை கேளு நம்பியார் என்ற ஒரு போக்கிரி, வெட்டித் துண்டு துண்டுகளாக ஆக்கிய செய்தியை சிறிது நாட்களுக்கு முன்புதான் மாதவமேனன் ‘மாத்ருபூமி' நாளிதழில் வாசித்திருந்தார். அதைப்பற்றி விளக்கிக் கூறும்படி மாதவமேனன், குமாரமேனனிடம் கேட்டுக்கொண்டார். குமாரமேனன் அந்தச் சம்பவத்தை விளக்கிக் கூறினார்.
‘‘கேளு நம்பியார், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருந்த சங்கரமேனனின் நெருங்கிய நண்பராகவும், கெட்ட செயல்களில் அவரின் நம்பிக்கைக்குரிய... உடனிருந்து செயல்படக்கூடிய மனிதராகவும் இருந்தார். ஆனால், ஒருநாள் நம்பியார் இல்லாமலிருந்த நேரத்தில் சங்கரமேனன் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து, அவருடைய மனைவியைக் கற்பழிக்க முயன்றிருக்கிறார். அந்த நேரத்தில் கேளு நம்பியார் சிறிதும் எதிர்பாராமல் அங்கு வந்திருக்கிறார்.
ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற நம்பியார், சங்கரமேனனை துண்டுத் துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டு, நேராகச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்திருக்கிறார். வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நம்பியார், சங்கரமேனன் கூறியதாலும் அவரின் உதவியாலும் தான் செய்த கொலைச் செயல்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கூறியிருக்கிறார். நீதிமன்றம் நம்பியாருக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது.''
‘‘அந்த ராயன் இல்லையா? அவன் எங்கே இருக்கிறான்?'' மாதவமேனன் கேட்டார்.
‘‘அன்று ‘அம்பலப்புள்ளி' குடும்பத்தில் நடைபெற்ற சம்பவத்திற்குப் பிறகு, ராயன் சிறிது காலம் சங்கரமேனனை ஒட்டிக்கொண்டு திரிந்தான். காலப்போக்கில் சங்கரமேனன் அவனை விட்டெறிந்தார். அவனுக்கு அவர் எதுவுமே கொடுக்காத சூழ்நிலை உண்டானது. ராயன், சங்கரமேனனின் தோட்டத்திலிருந்த தேங்காய்களும், தன்னுடைய வயிறும், சங்கரமேனனின் கையும், தன்னுடைய முதுகும் என்று சிறிது காலம் வாழ்க்கையை ஓட்டினான்.