வல்லிகாதேவி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6663
சிறிதும் எதிர்பார்த்திராத அந்தக் கேள்வியைக் கேட்டு, பாலகிருஷ்ணன் பதைபதைத்துப் போனான். மாதவமேனனின் முகத்தையும், தேவகியம்மாவின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தான். அந்த நேரத்தில் தேவகியம்மா அவனிடம் கண்களால் ஏதோ சைகை செய்வதை மாதவமேனன் கவனித்தார்.
‘‘நீ அறையை விட்டு வெளியே போ...'' மாதவமேனன் தன் மனைவிக்கு கட்டளை பிறப்பித்தார்.
தேவகியம்மா முகத்தை இருள வைத்து கனமாக்கிக் கொண்டு, என்னவோ முணுமுணுத்தவாறு அறையை விட்டு வெளியேறினாள்.
பாலகிருஷ்ணன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எதையும் மறைக்காமல் கூறினான். அவன் கூறியது இதுதான்.
‘பட்டினி கிடந்து தாங்க முடியாத நிலை வந்ததும், தம்பிராட்டியிடம் இரண்டு நாழி நெல் வாங்கலாம் என்று நினைத்து, கையில் ஒரு பாத்திரத்துடன் சேர இங்கு வந்துகொண்டிருந்தாள். அப்போது அவர்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்து, மேலே இருக்கும் வராந்தாவில் விளையாட்டாகப் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.. அந்த தாழ்ந்த ஜாதிப்பெண் தூரத்திலிருந்து வருவதைப் பார்த்ததும் தேவகியம்மா, ‘உங்கள் எல்லாருக்கும் இப்போ சிரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர்றேன்' என்று சொன்னாள். அவள் தன் தங்கை மீனாட்சியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னாள். மீனாட்சி கீழே இறங்கிப் போனாள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏறி வருவதற்கென்றே சுவரோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மர ஏணியைச் சற்று நகர்த்தி வைத்துவிட்டு, திரும்பவும் மேலே வந்துட்டாள். அந்த தாழ்ந்த ஜாதிப்பெண் தனக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆபத்தைப் பற்றி சிறிதும் நினைக்காமல் ஏணியில் ஏற ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட மேலே வந்திருப்பாள்... ஏணி இருந்த இடத்தை விட்டு விலகிச் சாய்ந்தது. உயரமாக இருந்த அந்தச் சுவரிலிருந்து கீழே இருந்த குறுகலான பாதையில் அவள் மல்லாக்க போய் விழுந்தாள். அவள் ‘அய்யோ' என்று ஒரே ஒருமுறை மட்டும் உரத்த குரலில் சத்தம் போட்டாள். மேலேயிருந்த எல்லாரும் கைகளைத் தட்டிக்கொண்டு சிரித்தார்கள்.'
அந்தச் சம்பவத்தைக் கேட்டவுடன், மாதவமேனனின் நரம்புகளில் வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு ஒரு கொதிப்பு உண்டாக ஆரம்பித்தது. என்னவென்று புரிந்துகொள்ள முடியாத ஒரு கோபம், இயல்பாகவே சாந்தமாக இருக்கும் அந்த இதயத்திற்குள் பரவ ஆரம்பித்தது.. கண்களின் நிறம் மாறியது. முகத்தின் இயல்புத் தன்மை முற்றிலும் மாற
ஆரம்பித்தது. தாங்கமுடியாத வெறுப்பை- பற்களின் வரிசை, கீழுதடு ஆகியவற்றுக்கு நடுவில் அழுத்தி மறைக்க ஆரம்பித்தார். இரக்கத்தால், உணர்ச்சிகள் நிறைந்த ஓரிரு நீண்ட பெருமூச்சுகள் வெளிவந்தன.
என்ன? புரட்சிகரமான எண்ணங்கள் எழுவதற்குக் காரணமாக இருக்கும் அந்தச் சம்பவம், தான் நாயகனாக இருக்கும் வீட்டில் நடந்திருக்கிறதா?
பிரம்பைக் கீழே எறிந்துவிட்டு, ஒரு நீண்ட கரகரப்பான இருமலுடன் மாதவமேனன், தன் முகத்தில் பரவியிருந்த உணர்ச்சிகளை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல், அறையில் நாலா பக்கங்களிலும் கண்களைச் செலுத்தினார்.
மாமாவின் இந்த வழக்கமில்லாத போக்கைப் பார்த்து திகைத்துப் போய்விட்ட சிறுவன், சிறிது சிறிதாக பின்னோக்கி நகர்ந்து, வெளியேறித் தப்பித்தான்.
மாதவமேனன் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த சட்டையை வேகமாக எடுத்து அணிந்துகொண்டு, கடமையுணர்வுடன் அறையைவிட்டு வெளியேறி நடந்தார்.
2
வயல்களையும் நிலங்களையும் ஏழைகளின் வசிப்பிடங்களையும் கடந்து, சுருக்காகச் செல்லும் வழி எதுவென்று பார்த்து, குறுகலான ஒற்றையடிப் பாதைகளின் வழியாக பல மேடுகளையும் குதித்துத் தாவி, பத்து நிமிடங்களில் மாதவமேனன் குப்பைமேட்டிற்கு அருகிலிருந்த சேரயின் வீட்டிற்கு- கூப்பிடு தூரத்திற்கு போய்ச் சேர்ந்தார்
மாலை நேரம் கடந்து முழு கிராமமும் மிகவும் அமைதியில் மூழ்கியிருந்தது. இருட்டு எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அந்த வயலின் ஒரு மூலையில், சற்று உயரத்திலிருந்த ஒரு சிறு துண்டு நிலத்தில் சேரயின் குடிசை தனியாக இருந்தது. வயலின் வரப்பிலிருந்து, அந்த புல் வேய்ந்த குடிசையின் முற்றத்திற்குச் செல்வதற்காக சுவரின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த மர ஏணியின்மீது மாதவமேனன் ஏறினார். அங்கு சத்தமோ அசைவோ பிரகாசமோ வெளிச்சமோ எதுவும் இல்லாமலிருந்தது. புற்கள் முளைத்து, ‘கரடிப் புற்றுகள்' இருந்த அசுத்தமான அந்த முற்றத்தில் மாதவமேனன் சிறிது நேரம் விழித்தபடி நின்றிருந்தார்.
அப்போது ‘அய்யோ' என்றொரு தாங்கமுடியாத வேதனை கலந்த முனகலும், அதைத் தொடர்ந்து ‘என்னம்மா?' என்ற ஒரு அமைதியான குரலும் அந்தக் குடிசைக்குள்ளிருந்து வந்ததை மாதவமேனன் கேட்டார். அவர் அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி மேலும் சற்று முன்னோக்கிச் சென்றார். குடிசைக்கு அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டுத் தேடியபோது, வறுமையின் பிடியிலிருந்த அந்தக் குடிசையின் வாசல் பகுதி தெரிந்தது.
அவர் உள்ளே நுழைந்து மெல்ல கனைத்து, ஓசை உண்டாக்கினார். ‘‘யார் அது?'' என்றொரு கேள்வி மெல்லிய தொனியில் இருந்தாலும், ஒரு விசேஷமான இனிமையுடன் உள்ளேயிருந்து வந்தது.
மாதவமேனன் மேலும் சற்று முன்னேறிச் சென்றார். ‘‘நான்தான்... அம்பலப்புள்ளி குடும்பத்தின் பெரிய தம்புரான்.'' தொடர்ந்து அவர் கேட்டார். ‘‘சேர, கீழே விழுந்ததைத் தொடர்ந்து உனக்கு என்ன நடந்தது? அதிகமா எதுவும் நடக்கலையே?'' அடுத்த நிமிடம் ஒரு பேரமைதி அங்கு நிலவியது. வேதனை கலந்த அழுகைச் சத்தமும் இல்லை. பதிலும் இல்லை. அங்குள்ள நாக்குகள் அனைத்தும் கீழே விழுந்ததைப்போல ஆகிவிட்டன. அம்பலப்புள்ளி குடும்பத்தின் பெரிய தம்புரான் அவளுடைய குடிசையில்! அய்யய்யோ! பதைபதைப்பால் சேர இறக்கவில்லை; அவ்வளவுதான். உயிர் போகும் அளவிற்கு உண்டான வேதனையால் இப்படியும் அப்படியுமாக நெளிந்து கொண்டிருந்த அவள், அம்பலப்புள்ளி குடும்பத்தின் பெரிய தம்புரான் தன்னைப் பார்ப்பதற்காக குடிசையைத் தேடி வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டதும், முன்பு இருந்ததைவிட அதிக வேதனையுடன் ‘‘அய்யோ! என் தங்க தம்புரான்!'' என்று மட்டும் கூறினாள், அதற்குமேல் எதுவும் கூறமுடியாமல், வேகமாக எழுந்து முழங்காலிட்டு வணங்குவதற்கு முயற்சி செய்தாள்.
இருட்டில் நடைபெற்ற அந்தக் காட்சியைப் பார்த்து மாதவமேனனின் இதயம் துடித்தது.
‘‘பெண்ணே, நீ எதுவும் செய்யவேண்டாம். அப்படியே படுத்திரு...'' என்று கூறியவாறு, மிகுந்த பாசத்துடன் அவர் அவளைப் பிடித்து அங்கேயே படுக்க வைத்தார். அவளுக்கு அருகில் ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். மாதவமேனன் அந்தச் சிறுமியின் பக்கம் திரும்பியவாறு கூறினார்: ‘‘இங்கு கொஞ்சம்கூட வெளிச்சமே இல்லையே! நீ வேகமா போயி எங்கேயிருந்தாவது கொஞ்சம் வெளிச்சம் கொண்டு வர்றியா?'
பத்து நிமிடங்கள் தாண்டியதும், சற்று காய்ந்த ஓலைகளை எரிய வைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்தாள்.