வல்லிகாதேவி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6663
அந்தப் பகுதியிலிருந்த சில போக்கிரிகளைப் பிடித்து அடி, உதை கொடுத்தவுடன், அவர்கள் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்த மனிதனைக் கொல்ல முயன்றது கேளுக்குறுப்பு என்ற ஒரு முரட்டு மனிதன் என்ற தகவல் வெளியே வந்தது. அவன் வெகுசீக்கிரமே போலீஸாரிடம் சரணடைந்தான். சங்கரமேனன் எதையுமே தொடாத மாதிரியும், எதுவுமே தெரியாததைப்போலவும் ஒளிந்து எப்படியோ தப்பித்துக் கொண்டார்.
கேளுக்குறுப்பை ஆயுள் காலம் முழுவதும் நாடு கடந்து செல்லும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து உயர்ந்த தலைமைப் பொறுப்பில் இருந்த சங்கரமேனனை விட பெரிய ஒரு சட்ட சக்தி அங்கு இருக்கிறது என்ற விஷயத்தை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அந்தச் சம்பவம் நடந்து முடிந்தவுடன்தான், சேர மேலே இருந்து கீழே விழுந்த சம்பவம் நடந்தது.
அன்று இரவு மாதவமேனன் சேரயைப் பார்ப்பதற்குப் போன நாளிலிருந்து, பெரும்பாலும் எல்லா நாட்களிலும் அவளுடைய நிலைமையை விசாரிப்பதற்காக அவளுடைய குடிசைக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த விஷயம் எதிர் முகாமில் இருப்பவர்கள் பேசக்கூடிய விஷயமாக ஆனது.
ஒரு நல்ல வைத்தியரை வைத்து சிகிச்சையைச் செய்திருந்தாலும், மேலே இருந்து கீழே விழுந்த பதினான்காம் நாள் உயிரில்லாத ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, சேர மரணத்தைத் தழுவி விட்டாள்.
ராயனை, எதிர் முகாமைச் சேர்ந்த ஆட்கள் பலவற்றையும் கூறி தூண்டி விட்டனர். அவனுக்கு தினமும் கள்ளு வாங்கிக் கொடுத்து, கைக்கூலி தருவதாக வாக்குறுதி அளித்து, அவனை ஒரு காரியத்தைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்.
‘அம்பலப்புள்ளி' குடும்பத்தைச் சேர்ந்த மாதவமேனன் தினமும் சேரயைப் பார்ப்பதற்காக தேவையில்லாமல் அவனுடைய குடிசைக்குச் சென்று கொண்டிருந்தது- அவனுடைய மகளுடன் கள்ள உறவு கொள்வதற்குதான் என்றும், அவன் அந்தச் சம்பவத்தை ஓரிரு முறை நேரில் பார்த்ததாகவும் எல்லாரிடமும் கூறிப் பரப்பவேண்டும் என்பதே அது. தொடர்ந்து அவளுக்கு கர்ப்பம் உண்டாகி விட்டது என்றும், அதன் காரண கர்த்தா மாதவமேனன்தான் என்றும், இனி அவள் தனக்குத் தேவையே இல்லை என்றும் கூறி, ஒருநாள் சாயங்கால வேளையில் எல்லாரும் காணும் வண்ணம் அவளை அடித்து உதைத்து ‘அம்பலப்புள்ளி' குடும்பத்தில் கொண்டு போய்விட வேண்டும் என்றும் அவர்கள் அவனிடம் கூறினார்கள்.
தாங்கள் கூறியபடி செய்யாமலிருந்தால், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மற்றவர்கள் அவனை சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் என்றும், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட சங்கரமேனன் அவனை அடித்துக் கொன்று குழிக்குள் போட்டுப் புதைத்து, அதன்மீது ஒரு வாழையை வைத்து விடுவார் என்றும் அவர்கள் ராயனை பயமுறுத்தினர்.
‘‘டேய் ராயா, உன்னைப் பொறுத்தவரையில் உன்னுடைய மகளை நீ வீட்டிலிருந்து விரட்டி விடுகிறாய். அவ்வளவுதான். அதே நேரத்தில் அப்படி நடந்ததற்குப் பிறகு நாங்க எல்லாரும்... அதிகாரத்தைக் கொண்ட தம்புரானும் உன் பக்கம் இருக்கார்டா...'' என்று கூறி அவர்கள் அவனுக்கு தைரியமூட்டினார்கள்.
தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்த மனிதனும் இதை நல்ல ஒரு வாய்ப்பாக எண்ணினான். தன் மனைவி மரணமடைந்து விட்டதால், மகள் என்ற ஒரு சுமை மட்டுமே அவனுக்கு இருந்தது. அவர்கள் கூறியபடி செய்தால், அந்தச் சுமையும் இல்லாமல் போய்விடும். அதற்குப் பிறகு தனக்கு எது கிடைத்தாலும் அதை வைத்து குடித்துக் கொண்டு, கும்மாளம் போட்டுக்கொண்டு தன் விருப்பப்படியெல்லாம் இருக்கலாமே என்று அவன் நினைத்தான். இது தவிர, சங்கரமேனன் பல நாட்கள் அவனுடைய குடிசைக்கு யாருக்கும் தெரியாமல் சென்று, அவனிடம் என்னென்னவோ கூறினார். அதைத் தொடர்ந்து அவருடைய கட்டளையை சிறிதுகூட பிசகாமல் அப்படியே பின்பற்றுவதாக ராயன் வாக்குறுதி அளித்தான்.
5
மாலை நேரம் கடந்து விட்டிருந்தது. ‘அம்பலப்புள்ளி' வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டு, மாதவமேனன் ‘ஹிந்து' பத்திரிகைகயை விரித்து வாசித்துக் கொண்டிருந்தார்.
மதியத்திலிருந்தே வேலையை ஆரம்பித்தும், அன்று அறுவடை செய்த நெல் முழுவதையும் மிதித்து களத்திற்குக் கொண்டு செல்ல முடியாததால், ஏராளமான தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பணியாட்கள், சாணத்தால் மெழுகி சுத்தமாக வைக்கப்பட்டிருந்த முற்றத்தில் நின்று கொண்டு, தங்களுக்கிடையே ஆரவாரம் செய்தவாறு வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.
‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் முன்பகுதியில் விசாலமான வயல் இருந்தது. திடீரென்று அந்தப் பகுதியிலிருந்து பெரிய ஒரு சத்தம் வருவதைக் கேட்டு எல்லாரும் தங்களுடைய வேலையை நிறுத்தினார்கள். அங்கு என்ன சத்தம் கேட்கிறது என்று அவர்கள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
இடது கையில் ஒரு பந்தத்தை எரிய வைத்துப் பிடித்துக்கொண்டு, வலது கையால் தன் மகளின் கூந்தலைச் சுற்றிப் பிடித்தவாறு, அவளை வயலின் வழியாக இழுத்துக் கொண்டு ராயனும், அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆட்களின் கூட்டமும் ‘அம்பலப்புள்ளி' இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
ராயன் தலைமையில் நடைபெற்ற அந்த ஊர்வலம் ‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் வாசலுக்கு வந்தது. மாதவமேனன் முற்றத்தில் வந்து நின்றார். திடீரென்று வாய்க்கு வந்த வார்த்தைகளிலெல்லாம் அர்ச்சனை செய்து கொண்டிருந்த அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதனை நோக்கி மிகுந்த கோபத்துடன் யாரோ பாய்ந்தபோது, மாதவமேனன் அந்த ஆளை விலகச் சொன்னார்.
யாரும் எதுவும் பேசவில்லை. எங்கும் பேரமைதி! ‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் ‘டைகர்' மட்டும் சத்தமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.
ராயன் தன் மகளை வாசற்படியை நோக்கித் தள்ளியவாறு உரத்த குரலில் சொன்னான்: ‘‘ஓடுடி... உன் நாயரிடம்...''
ஒரே நிமிடத்தில் மாதவமேனனுக்கு எல்லா விஷயங்களும் புரிந்து விட்டன. அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதனுக்குப் பின்னால் இருக்கும் சக்தி எது என்பதும், சிறிதும் எதிர்பாராத அந்தச் செயல் ஏன் நடக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்தாலும், எந்தவித கோபமும் அடையாமல் மாதவமேனன் மெதுவாக அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதனின் அருகில் சென்றார்.
‘‘ராயா, இனி உனக்கு உன் மகள் தேவையில்லை அல்லவா?''
மாதவமேனன் மரத்துப்போன உணர்வுடன் கேட்டார்.
‘‘அந்த தரம் கெட்ட பெண்ணை நான் ஒதுக்கிட்டேன்... ஒதுக்கிட்டேன்... ஒதுக்கிட்டேன்... ஒதுக்கிட்டேன்...''
காதுகளுக்குள் கை விரல்களை நுழைத்து அழுத்தி வைத்துக் கொண்டு, மூன்று முறை அவன் இவ்வாறு உரத்த குரலில் கூறினான்.
மாதவமேனன் அந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணை அழைத்துச் சென்று ‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் ஒரு அறைக்குள் இருக்கும்படி செய்தார். ராயனும் அவனுடன் வந்த ஆட்களும் உரத்த குரலில் வெற்றி முழக்கமிட்டவாறு அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள்.