சிறையிலிருந்து... - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6356
கடந்த வருடத்தைப்போல எளிதில் செலவழிப்பதற்காக பணம் இல்லாமலிருந்ததால், என்னுடைய செலவுகள் சிலவற்றைக் குறைக்க வேண்டியதிருந்தது. சாரதாவின் விஷயங்களில் எந்தவொரு குறைபாடும் உண்டாகவில்லை.
தேர்வு நெருங்கிய நேரத்தில் என் அண்ணனின் ஒரு கடிதம் வந்தது. வியாபாரத்தில் போடப்பட்டிருந்த பணம் தீரும் நிலைக்கு வந்துவிட்டது என்றும், வீட்டில் செலவுக்குக்கூட மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும், சொத்தில் வரும் லாபத்தைக் கொண்டு வட்டி கட்ட முடியாததால், கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. எதிர்காலத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்கக்கூடிய கட்டாயத்திற்கு நான் ஆளாக்கப்பட்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல- சாரதாவிற்கும் சேர்த்து நான் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதற்கான பல வழிகளையும் நான் சிந்தித்துப் பார்த்தேன். விரக்தி அடையாமல் தேர்வை எழுதி முடித்தேன். அந்த வருடமும் நானும் சாரதாவும் தேர்ச்சி பெற்றோம்.
விடுமுறைக்கு நான் வீட்டிற்குச் செல்லவில்லை. கல்லூரியில் இருந்துகொண்டு, ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருப்பதாகவும், பி.ஏ.வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்தபிறகுதான் வீட்டிற்கு வருவேன் என்றும் நான் என்னுடைய அண்ணனுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன்.
ஏதாவது கடையில் கணக்கு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று நான் முதலில் முயற்சி செய்து பார்த்தேன். அது நடக்கவில்லை. தொடர்ந்து என்னுடைய ஒரு நண்பரின் முயற்சியில் ஒரு வக்கீலின் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுப்பதற்கான வேலை கிடைத்தது. நான் ஒரு மாணவன் என்பதையும், படிப்பைத் தொடர்வதற்கு வழியில்லாமல் இருக்கிறேன் என்பதையும் அறிய நேர்ந்த காரணத்தால், அந்த வக்கீல் இரக்கப்பட்டு என்னை ட்யூஷன் மாஸ்டராக அமர்த்தினார். அதற்கு சம்பளமாக ஒவ்வொரு மாதமும் பத்து ரூபாய் வீதம் தருவதாக அவர் கூறினார்.
அடுத்த பள்ளிக் கல்வியாண்டின் ஆரம்பத்தில் என் அண்ணனின் வியாபாரத்தில் எஞ்சியிருந்த கொஞ்சப் பணத்தை அவர் அனுப்பி வைத்ததால், எனக்கும் சாரதாவிற்கும் தேவையான புத்தகங்களையும் பிற பொருட்களையும் வாங்க முடிந்தது. அதற்குப் பிறகு வீட்டிலிருந்து எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வக்கீல் தந்துகொண்டிருந்த பத்து ரூபாயை வைத்து எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உண்டானது. இந்த கஷ்டங்கள் எதையும் நான் சாரதாவின் வீட்டைச் சேர்ந்தவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை. இன்னொரு ட்யூஷன் வேலை வேறு எங்காவது கிடைக்குமா என்று நான் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். வக்கீலிடம் என்னுடைய நிலைமை முழுவதையும் விளக்கிக் கூறினேன். பத்து ரூபாயை வைத்து படிப்புச் செலவையும் தங்கியிருக்கும் செலவையும் பார்த்துக்கொள்ள முடியாது என்றும் பி.ஏ.வில் தேர்ச்சி பெறுவது வரை எனக்கு உதவி செய்யவேண்டும் என்றும் நான் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இரக்க குணம் கொண்ட வக்கீல், ஒரு தொழிற்சாலை உரிமையாளருக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி என் கையில் தந்தார். கடிதத்தைப் படித்த அந்த முதலாளி அவருடைய பிள்ளைகளுக்கு ட்யூஷன் மாஸ்டராக மாதமொன்றுக்கு பன்னிரண்டு ரூபாய் சம்பளத்தில் என்னை அமர்த்தினார். அந்த வகையில் இரண்டு ட்யூஷன்கள் கிடைத்ததும், என்னால் ஒரு விதத்தில் வாழமுடியும் என்ற நிலை உண்டானது.
காலை ஆறரை மணியிலிருந்து எட்டு மணி வரை வக்கீலின் வீட்டிற்கும், சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிவரை முதலாளியின் வீட்டிற்கும் ட்யூஷன் சொல்லிக்கொடுக்க போக வேண்டியதிருந்தது. அது முடிந்தவுடன், அன்றாடச் செயல்களை மிகவும் சிரமப்பட்டு செய்யும் அளவிற்கு நேரம் இருந்தது. இரவு வேளையில் படிப்பதில் ஈடுபடுவேன். அந்தக் காலங்களில் இரவு இரண்டு மணிக்கு முன்னால் நான் தூங்கியதே இல்லை. பகல் முழுவதும் கல்லூரியிலும், ட்யூஷன் வேலையிலும் என்று இருந்துகொண்டும், இரவில் தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பதில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்ததால் என்னுடைய உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க ஆரம்பித்தது. சாரதாவை தினந்தோறும் பார்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய விருப்பம் மனதில் இருந்தது. எனினும், அதற்கு நேரம் கிடைக்கவில்லை. சாரதாவின் தாய், நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பல நேரங்களில் விசாரித்திருக்கிறாள். நான் அதிகாலையிலேயே அங்கிருந்து கிளம்பிப் போய் விடுகிறேன் என்றும், எங்கு செல்கிறேன் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். ஐந்தோ- ஆறோ நாட்களுக்கு ஒருமுறைதான் என்னால் சாரதாவைப் பார்க்க முடிந்தது.
ஒருநாள் மாலைப் பொழுது முடிந்த நேரத்தில் நான் சாரதாவின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவள் விளக்கிற்கு அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். முற்றத்தில் நின்றவாறு நான் அவளைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். அவள் ஒரு இளம் தேவதையைப்போல தோன்றினாள். அவள் எனக்குச் சொந்தமானவள் என்பதைப்போலவும், அவள்மீது எனக்கு உரிமை இருக்கிறது என்பதைப்போலவும் எனக்கு தோன்றியது. பின்வழியாக ஓசை எதுவும் உண்டாக்காமல் சென்று அவளுடைய கண்களை மூடவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. அந்த விருப்பத்தை அடக்கி வைத்துவிட்டு, நான் மெதுவாக இருமிக்கொண்டே அவளின் அருகில் சென்றேன். அவள் தான் படித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றாள். அங்கிருந்து ஓடிச் செல்லாமல், அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். நான் அவளின் கையிலிருந்த புத்தகத்தைப் பற்றினேன். அவள் தன்னுடைய கையை பின்னோக்கி இழுக்காமல், புத்தகத்தை என் கையில் தந்தாள். வாசலில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். அவள் என்னை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என்னுடைய கையை அவளை நோக்கி நீட்டினேன். அவள் நடுங்கிக் கொண்டே அந்தக் கையைப் பற்றினாள். என்னுடைய கை அவளுடைய கையில் இருந்தவாறு நடுங்கிக் கொண்டிருந்தது. நான் மேலும் சற்று நெருங்கிச் சென்றேன். அவளுடைய தாய் வாசலின் அருகில் வந்து நின்றாள். நாங்கள் இருவரும் விலகி நின்றோம்.
நான் வழக்கம்போல அங்கு வராததற்குக் காரணம் என்ன என்பதைக் கூற வேண்டும் என்று சாரதாவின் தாய் வற்புறுத்த ஆரம்பித்தாள். பல பொய்களை நான் கூறிப்பார்த்தும், அவள் அவற்றை நம்புவதற்குத் தயாராக இல்லை. இறுதியில் பொருளாதாரரீதியாக எனக்கு இருக்கும் சிரமங்களைப் பற்றியும், நான் புதிதாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைப் பற்றியும் அவளிடம் கூறினேன். கடைசியில் நான் அவளுக்கு தைரியம் கொடுத்தேன். “எது எப்படி ஆனாலும், சாரதாவின் படிப்பை நிறுத்த வேண்டாம். அவளுக்கு மீண்டும் புத்தகங்களையும் மற்ற பொருட்களையும் நான் வாங்கித் தருகிறேன்'' என்று நான் கூறினேன்.