சிறையிலிருந்து... - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6356
எனக்கு வேலை கிடைத்த பிறகு, என் தங்கையை ஒரு வேலையில் இருக்கும் மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று என் தாய் ஆசைப்பட்டாள். அந்த வகையில் எல்லா ஆசைகளையும் என்மீது போட்டிருந்தார்கள் என்ற விஷயம் எனக்கு பெருமைக்குரிய ஒன்றாகத் தோன்றியது.
பள்ளி இறுதி வகுப்பில் வெற்றி பெற்ற பிறகு, என்னை கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் விஷயத்தைப் பற்றி என் தாயும் அண்ணனும் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார்கள். கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற அளவற்ற விருப்பம் எனக்கு இருந்தாலும், நான் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. பள்ளி இறுதித் தேர்விற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக வீட்டிலிருந்த பொருட்களில் பலவற்றையும் எடுத்து விற்றதையும், கடன் கொடுத்தவர்கள் பலரும் வீட்டிற்கு வந்து என் தாயையும் அண்ணனையும் கறாராகக் கேட்டுக் கொண்டிருந்ததையும் நான் நன்கு தெரிந்து கொண்டிருந்தேன். குடும்பத்தின் பொருளாதார நிலை இந்த வகையில் இருக்க, என்னை கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுவதற்கான தைரியம் எனக்கு இல்லாமலிருந்தது. இறுதியில் என் தாயும் அண்ணனும் சேர்ந்து தீவிரமாக ஆலோசனை செய்துவிட்டு, என்னை மேற்படிப்பு படிப்பதற்கு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். குடும்பத்திற்குச் சொந்தமான சொத்தை பணயம் வைத்து 1,500 ரூபாய் வாங்குவது என்றும், அதிலிருந்து ஒரு தொகையை எடுத்து சில்லறைக் கடன்களை அடைப்பது என்றும், 400 ரூபாயை வைத்து அண்ணன் ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது என்றும், மீதமிருக்கும் தொகையை என்னுடைய படிப்பிற்காக வங்கியில் செலுத்துவது என்றும் முடிவு செய்தார்கள்.
நான் சந்தோஷமாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். புதிய ஆடைகளைத் தைக்கச் செய்தேன். படுக்கை, போர்வை ஆகியவற்றை தயார் பண்ணினேன். நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டேன். பயணத்திற்கு தயாரானபோது, ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்து என் கையில் தந்துவிட்டு என் அம்மா, "மகனே! சிக்கனமாக செலவழிக்கணும். அதற்காக தேவையான பொருட்களை வாங்குவதற்கு சிக்கனத்தைக் காட்ட வேண்டாம். அடிக்கடி கடிதம் எழுதணும். விடுமுறை விடுறப்போ இங்கு வரவேண்டும்' என்று கூறினாள்.
நான் என் அன்னையையும் அண்ணனையும் வணங்கினேன். என் தங்கையின் கன்னத்தை மெதுவாகத் தடவிவிட்டு, கிளம்பினேன். நான் நடந்து மறையும் வரை என் தாயும் அண்ணனும் தங்கையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
கல்லூரியில் சேர்ந்த வருடத்திலேயே வங்கியில் போடப்பட்டிருந்த பணத்தின் பெரும்பகுதியை நான் செலவழித்து விட்டேன். அதை அப்படியொன்றும் தாறுமாறாக நான் செலவழிக்கவில்லை. சுமாரான நிலையில் இருந்த ஒரு வீட்டில்தான் நான் தங்க ஆரம்பித்தேன். ஒருநாள் அதிகாலை நேரத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் யாரோ தேம்பித் தேம்பி அழுவது காதில் விழுந்தது. அது- அந்த வீட்டிலிருந்த ஒரு சிறுமி. அவளுடைய தாய் அவளிடம் "குழந்தை... கஞ்சிக்கே வழியில்லாதவர்கள் பணம் கட்டி படிக்கிறார்களா? படிப்பு என்பது பண வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்குத்தானே? யாராவது வந்து அழைத்துக் கொண்டு செல்வதுவரை, இங்கே இருந்துகொண்டு எதையாவது பார்த்து படித்துக் கொண்டிருந்தால் போதும்' என்று கூறிக்கொண்டிருந்தான்.
நான் எழுந்து அந்த வீட்டிற்குச் சென்றேன். மண்ணைக் கொண்டு சுவர் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய வீடு அது. என்னைப் பார்த்தவுடன், வாசல் திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த அந்தச் சிறுமி எழுந்து உள்ளே ஓடி விட்டாள். அவளுடைய அன்னை நடுத்தர வயதைக் கொண்ட ஒரு ஏழைப் பெண். அழுக்கு படிந்த ஒரு ஒலைப் பாயை விரித்துவிட்டு, என்னை மரியாதையுடன் பார்த்தாள். சாரதாவிற்கு (அது தான் அந்த சிறுமியின் பெயர்.) படிப்பு விஷயத்தில் அதிகமான ஆர்வம் என்றும், அவளுக்கு கல்விக் கட்டணத்திற்கும் புத்தகத்திற்கும் பணமில்லாத காரணத்தால் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்றும் அந்தப் பெண் என்னிடம் கூறினாள். சாரதாவின் தந்தை ஒரு நிறுவனத்தில் காவலாளி யாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவருக்குக் கிடைக்கும் பத்து ரூபாயை வைத்துதான் அந்தக் குடும்பத்தில் எல்லா செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் பெண் என்னிடம் கூறினாள்:
“குழந்தை, நான் மூணு பிள்ளைகளைப் பெற்றேன். இப்போ இது ஒண்ணுதான் இருக்கு. இவளுக்கு இப்போ பதிமூணு வயசு முடிஞ்சிருச்சு. இவள் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் படிக்க வைக்கணும் என்ற பெரிய ஆசை இவளு டைய அப்பாவுக்கு இருக்கு. இரண்டு வேளை கஞ்சியாவது குடிக்கலாம் என்றால், அதைக் குடிச்சு படுத்துக் கிடக்குறதுக்குக்கூட வழியில்லை. பிறகு எப்படி ஃபீஸ் கட்டி படிக்க முடியும்? புத்தகங்கள் வாங்குறதுக்கும் பணம் வேண்டாமா?''
நான் எல்லாவற்றையும் மிகவும் கவனமாகக் கேட்டேன். சாரதாவிற்கு கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தையும், புத்தகம் வாங்குவதற்கான செலவையும் நான் கொடுப்பதாகவும், அவளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் கூறிவிட்டு நான் திரும்பி வந்துவிட்டேன். அன்று சாயங்காலமே அவளுடைய கல்விக்கட்டணத்திற்கும், புத்தகங்களுக்கும் தேவைப்பட்ட பணத்தை அவளுடைய தாயின் கையில் கொண்டுபோய் கொடுத்தேன். அது மட்டுமல்ல- அவளுக்குத் தேவைப்பட்ட ஆடைகளையும் நானே வாங்கித் தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
சாரதா ஒரு கூச்ச குணம் கொண்ட பெண்ணாக இருந்தாள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் உரையாடுவதற்குக்கூட அவள் வெட்கப்பட்டாள். அவள்மீது ஈடுபாடும் அன்பும் யாருக்கும் உண்டாகும். ஒன்றோ இரண்டோ வார்த்தைகளைக் கூறிவிட்டு, முகத்தை மூடிக்கொண்டு ஓடி விடுவது என்பது அவளுடைய ஒரு வழக்கமான செயலாக இருந்தது. நான் ஒவ்வொரு நாளும் சாயங்காலம் அவளுடைய வீட்டிற்குச் செல்வேன். அவளிடம் ஏதாவது கேட்டால், அவள் அங்கிருந்து ஓடி விடுவாள். படிப்பு விஷயத்தில் அவள் மிகவும் திறமை வாய்ந்தவளாக இருந்தாள். சில நேரங்களில் நான் அவளுடைய நோட்டுப் புத்தகத்தில் கேள்விகளை எழுதி வைத்து விட்டுச்செல்வேன். மறுநாள் வரும்போது, அவள் அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் சரியான பதில்களை எழுதி என்னை நோக்கி வீசிவிட்டு ஓடி விடுவாள். நான் என்னுடைய படிக்கும் அறையில் உட்கார்ந்திருக்கும்போது, அவளுடைய மிகவும் இனிமையான பாடல்களைக் கேட்பதுண்டு. நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றால், அவளுடைய தந்தையும் தாயும் எவ்வளவு வற்புறுத்தினாலும், அவள் பாடவே மாட்டாள்.
சாரதாவின் தந்தைக்கும் அன்னைக்கும் என்மீது அளவற்ற அன்பு இருந்தது. தங்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருக்கும் கடவுளின் தூதன் நான் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் கூறுவார்கள். நான் அவர்களுடன் தங்கியிருக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது.