சிறையிலிருந்து... - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6356
இந்த சிரமங்கள் எதையும் நான் சாரதாவிடம் கூறவில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் வெகுசீக்கிரமே வேலை கிடைத்துவிடும் என்று மட்டும் கூறிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் உணவிற்கும், தங்குவதற்கும் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஒருநாள் அவள் அந்த விஷயத்தை என்னிடம் வெளிப்படையாக கேட்கவும் செய்தாள். நான் என்னுடைய நண்பனுடன் சேர்ந்து தங்கிக் கொண்டிருக்கிறேன் என்றும், அங்கு நான் நல்ல முறையில் இருக்கிறேன் என்றும் அவளிடம் கூறினேன். அதற்குப் பிறகு அவள் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
என்னுடைய வேலை சம்பந்தமாக அனுப்பிய விண்ணப்பங்களுக்கு பதில் கடிதம் எதுவும் வராததால், அவை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை நேரில் போய் பார்த்துவிடுவது என்று நான் முடிவெடுத்தேன். முதலில் கல்வித் துறையின் அதிகாரியைப் பார்ப்பதற்காக நான் சென்றேன். தன்னை நேரில் பார்ப்பதற்கு அவர் அன்புகூர்ந்து அனுமதி அளித்திருந்தார். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் ஏராளமான விண்ணப்பங்களின் கூட்டத்தில் என்னுடைய விண்ணப்பமும் இருக்கலாம் என்றும், வேலை எதுவும் தற்போது காலியாக இல்லை என்று மனு அனுப்பியவர்களுக்கு பதில் எழுதும்படி க்ளார்க்கிடம் தான் கூறியிருப்பதாகவும், அப்போது எனக்கும் தகவல் வந்துசேரும் என்றும் அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பிறகு நான் தலைமைப் பொறியாளரைச் சென்று பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இரண்டு மூன்று நாட்கள் அலுவலகத்தின் வாசலுக்குச் சென்று காத்துக் கொண்டு நின்ற பிறகுதான் அவரைச் சந்திக்கவே முடிந்தது. துறை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படும் வேலைகளில் என்னை அமர்த்துவதற்கான வாய்ப்பில்லை என்றும், க்ளார்க் வேலை எதுவும் காலியாக இல்லை என்றும், காலியாக இருக்கும் மூன்று மேஸ்திரி இடங்களுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்து சேர்ந்திருக்கின்றன என்றும், அந்த வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது முன்வேலை அனுபவம் உள்ளவர்களின் உரிமையை பரிசீலித்தேயாக வேண்டும் என்றும் அவர் மிடுக்கான குரலில் கூறினார். அதற்குப் பிறகு தலைமை நீதிபதியைப் போய் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். நான் மிகவும் முயற்சி செய்தும், அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. ஏதாவது கூற விரும்பினால் எழுதி அனுப்பவேண்டும் என்றும், வேலை கேட்டு வருபவர்களை உள்ளே விடக்கூடாது என்பது உத்தரவு என்றும் வாசலில் இருந்த காவலாளி, நீதிபதிக்கு பதிலாக இருக்கும் ஆள் என்ற முறையில் என்னிடம் கூறினான். அதற்குப் பிறகும் நான் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான், நீங்கள் அன்று பார்த்ததைப்போல, என்னை விரட்டிவிடும் சம்பவம் நடந்தது.
நான் நம்பிக்கையின் எல்லையிலிருந்து விரக்தியின் ஆழத்திற்குள் இறங்க ஆரம்பித்தேன். என்னை விரட்டி விடுவதை வேற்று மனிதர்கள் பலரும்- குறிப்பாக நீங்கள் பார்த்திருக்கிறார்கள் என்ற விஷயம் என்னுடைய சுயமரியாதையை மிகவும் காயப்படுத்தியது, அன்று முழுவதும் நான் உணவே சாப்பிடவில்லை. கடுமையான களைப்புடனும், அவமானத்துடனும், ஏமாற்றத்துடனும் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தேன். என் அண்ணன் அனுப்பியிருந்த ஒரு கடிதம் என்னை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தது. அதன் ஒரு பகுதி இப்படி இருந்தது. "நம்முடைய சொத்தை கடன் கொடுத்தவர்கள் ஏலத்தில் விற்று விட்டார்கள். வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு பத்து நாள் தவணை தந்திருக்கிறார்கள். எங்கு போவது என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை. வயதான அம்மாவும், சிறிய தங்கையும்- நான் என்ன செய்வது? எங்களுக்கு அபயம் என்று இருப்பது நீ மட்டுமே.'
எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் நெய்யை ஊற்றியதைப்போல இருந்தது. என்னுடைய படிப்பிற்காக எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பம் அனாதையாகி விட்டது! வேலைக்கான தகுதிகளை வைத்துக் கொண்டு, வேலை கேட்டு கெஞ்சி நிற்கும்போது விரட்டியடிக்கிறார்கள்... காறித்துப்புகிறார்கள்! என்னுடைய... என்னுடைய குடும்பத்தின்... கடுமையான முயற்சிகளின், தியாகங்களின் விளைவாக கிடைத்த பி.ஏ. பட்டம், என்னுடைய சுயமரியாதையை காயப்படுத்தவும், என்னை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதற்காகவும் மட்டுமே பயன்படும் என்ற சூழ்நிலை வந்துவிடுமோ? என் காரணமாக கீழே விழுந்து கிடக்கும் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு என்னால் இயலாமல் போய் விடுமோ? என் வாழ்க்கையை மட்டுமே ஓட்டுவதற்காக தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கக்கூட என்னால் முடியாமல் போய் விடுமோ? இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் நான் திரும்பத் திரும்ப என்னையே பார்த்துக் கேட்டுக் கொண்டேன். என் மனதிற்குள் இருள் வந்து நிறைய ஆரம்பித்தது. என்னுடைய எதிர்காலம் பதைபதைப்புகள் நிறைந்ததாய் ஆனது. நான் மன அமைதியே இல்லாமல் அங்கிருந்து வெளியேறினேன்.
என்னுடைய சாரதா- அவள் மட்டுமே அப்போது எனக்கென்று இருந்த லட்சியமாகவும் நிம்மதியாகவும் இருந்தாள். நான் ஆர்வத்துடன் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். கோட்டும், டையும், ஷூவும் அணிந்திருந்த- கர்வம் நிறைந்த தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதன் வாசலில் உட்கார்ந்து சாரதாவின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான். வெளுத்து, தடித்து, நல்ல உயரத்துடன் இருந்த அந்த மனிதன் சிகரெட்டை இழுத்து புகையை விட்டுக்கொண்டும், கதவின் மறைவில் சற்று மறைந்தவாறு நின்று கொண்டிருந்த சாரதாவை அவ்வப்போது பார்த்துக் கொண்டும், ஏதோ வெளிநாட்டின் காட்சிகளை வர்ணித்து கூறிக்கொண்டும் இருந்தான். சுவரில் சாய்ந்து நின்றிருந்த சாரதாவின் தாய், ஆச்சரியமும் மரியாதையும் கலந்த உணர்வுகளுடன், வந்திருந்த மனிதனின் பேச்சை கூர்ந்து கவனித்து கேட்டுக் கொண்டிருந்தாள். சாரதாவோ வந்திருந்த மனிதனின் தோற்றத்தையும் குணத்தையும் ஆராய்ச்சி கலந்த பார்வைகளுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.
அருகில் சென்றபோது, மிடுக்காக என்னை ஒரு முறை பார்த்துவிட்டு, உரையாடலை அவன் தொடர்வதற்கு முயற்சி செய்தான். ஆனால், சாரதாவின் அன்னை என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்: “சுப்ரமணியன்... பக்கத்து வீட்டில் இருக்கிறார்... இந்த வருடம் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.''
நான் நட்புணர்வுடன் அவனுக்கு வணக்கம் கூறினேன். அவன் தன் தலையைச் சற்று சாய்வாக வைத்துக்கொண்டு, பதிலுக்கு எனக்கு வணக்கம் சொன்னான்.
“உட்காருங்க...'' அவன் அலட்சியமான குரலில் கூறினான்.
சாரதாவின் தாய் ஒரு ஓலையாலான பாயைக் கொண்டு வந்து போட்டுவிட்டு, எனக்கு அறிமுகப்படுத்தினாள். “இவரைத் தெரியுமா? நாங்கள் பழைய உறவினர்கள். படித்துக் கொண்டிருந்தபோது இவர் இந்த ஊரை விட்டுப் போய்விட்டார். அதற்குப் பிறகு இப்போதுதான் இங்கே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்ற கருணையே தோன்றியிருக்கிறது. சிங்கப்பூரில் வேலை... சம்பளம் அறுநூறு ரூபாய்...''
சிங்கப்பூரின் ஆச்சரியப்பட வைக்கும் காட்சிகளைப் பற்றியும், தன்னுடைய நண்பர்களான பெரிய வெள்ளைக்காரர்களைப் பற்றியும், கணக்கு பார்க்காமல் இருக்கும் தன்னுடைய செலவுகளைப் பற்றியும் அவன் நீண்ட நேரம் விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான்.