சிறையிலிருந்து...
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6356
சிறை
ஜூன் 23
நண்பரே,
இருள் படர்ந்த சிறை அறைக்குள், இரும்புக் கம்பிகள் வழியாக கிடைக்கக்கூடிய மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
மிகவும் தூரத்தில் உயர்ந்து நின்றிருக்கும் ஒரு அரசமரத்தின் மேற்பகுதியையும், ஆனந்த நடனமாடிக் கொண்டிருக்கும் அந்த அரசமரத்தின் இலைகளுக்கு மத்தியில் தெரியும் வானவெளியையும், மனிதத் தன்மையை கூட்டுக்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டு காவல் காத்துக்கொண்டிருக்கும் சிறை அதிகாரிகளின் அரக்கத்தனமான பார்வைகளையும், விடுதலைக்காக ஏங்கியபடி மனதிற்குள் வேண்டிக்கொண்டு, நிமிடங்களை எண்ணி எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும்- சம அளவில் கவலையில் மூழ்கியிருக்கும் சிறைக் கைதிகளின் வெளிறிப் போன முகங்களையும் மட்டுமே, இந்த இரும்புக் கம்பிகளின் வழியாக நான் காண்கிறேன்.
என்னை நீங்கள் இப்போது ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா என்பதைப் பற்றி என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. அன்றொரு நாள்- நான்கு வருடங்களுக்கு முன்பு- ஒரு பி.ஏ. மாணவன் என்ற முறையில் நான் முதல்முறையாக உங்களைப் பார்த்தேன். அன்று புகை வண்டியில் உங்களுடைய சக பயணியாக பயணம் செய்த நான் உங்களின் கையில் இருந்த ஆங்கிலப் பத்திரிகையைக் கேட்டதையும், அதைத் தொடர்ந்து நமக்கிடையே அறிமுகம் உண்டானதையும் அனேகமாக நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். அதற்குப் பிறகு நீதிபதி திரு. கெ.......யின் வீட்டு வாசலை விட்டு அங்கிருந்த பணியாள் என்னை விரட்டிவிடும் காட்சியை நீங்கள் பார்த்தீர்கள். அப்போது அந்த வழியாக வேகமாகப் போய்க்கொண்டிருந்த நீங்கள் என்னையும், நான் உங்களையும் பார்த்தாலும், இருவரும் முகத்தை குனிந்துகொண்டு இதற்கு முன்பு தெரிந்தவர்கள் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமலே போய்விட்டோம். அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய நினைவு மண்டலத்திலிருந்து மறையாமல் இருந்தாலும், உங்களைப் பார்ப்பதற்கு என்னால் முடியவில்லை. அன்று வண்டியில் இருந்தபோது வாசித்து முடித்த பத்திரிகையை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் சாளரத்தின் வழியாக எங்கோ தூரத்தில் இருந்த மலைச்சரிவைப் பார்த்தவாறு சிந்தனையில் மூழ்கி உட்கார்ந்திருந்ததையும், நமக்கிடையே அறிமுகம் உண்டான பிறகு ஆர்வத்துடன் என்னுடன் புரிந்த அந்த அனல் தெறிக்கும் சொற்பொழிவையும் இப்போதுகூட நான் காணவும் கேட்கவும் செய்கிறேன். சமுதாயத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் உள்ள உங்களுடைய முதிர்ச்சி நிறைந்த கண்டுபிடிப்பு களை அன்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போதோ... இந்த இருள் நிறைந்த சிறைக்கூடத்திற்குள் இருக்கும்போது, பல சம்பவங்களும் துயரங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கைக்குப் பிறகு, உங்களுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காரணத்தால்தான் நான் கடிதம் எழுதுகிறேன்.
நான் இங்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதே சிறையில் அரசியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். நான் அந்த வகையைச் சேர்ந்த ஒரு கைதி இல்லை. அரசியலைப் பற்றிய கருத்துகள் எனக்கு இருக்கின்றன என்றாலும், நான் இது வரை எந்தவொரு அரசியல் கட்சியிலும் பங்கு பெற்றதில்லை. திருடு, கொலை, ஏமாற்றுதல், வன்முறை ஆகிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பலரும் இங்கு இருக்கிறார்கள். நான் அப்படிப்பட்ட கைதிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவனும் இல்லை. வாழ்க்கையின் கலையை கற்றிராத எனக்கு அப்படிப்பட்ட அக்கிரமச் செயல்களைச் செய்வதற்கான தைரியமும் இல்லை. பிறருக்குத் தெரியாத வகையில் அக்கிரமங்கள் செய்வதுதான் வாழ்க்கைக் கலை என்பதையும், வாழ்க்கை கலையைக் கற்றவர்கள் மட்டுமே இன்றைய உலகில் வாழ முடியும் என்பதையும் படிக்காத காரணத்தால் தான் நான் இந்த இருண்ட அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறேன். இன்றைய சமூக அமைப்பில், நீங்கள் கூறுவதைப்போல வாழவேண்டுமென்றால், வஞ்சனை நிறைந்த வாழ்க்கைக் கலையைக் கற்றே தீரவேண்டும். இந்தச் சமூக அமைப்பு நிலை பெற்றிருக்கும் காலம் வரை, இப்படிப்பட்ட வாழ்க்கைக் கலையும் நீடித்து இருக்கத்தான் செய்யும். அந்த இரண்டையும் மாற்றவேண்டும் என்ற உங்களுடைய முயற்சிக்கு நான் வாழ்த்து கூறுகிறேன்.
இனி நான் இந்தச் சிறைக்குள் வர நேர்ந்த காரணம் என்ன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நமக்கிடையே முதலில் அறிமுகம் உண்டான சமயத்தில், நான் பி.ஏ. படிக்கும் மாணவனாக இருந்தேன் என்பதை உங்களிடம் கூறியிருந்தேன் அல்லவா? அந்த வருடமே எனக்கு பி.ஏ. பட்டம் கிடைக்கவும் செய்தது. ஆனால், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதரவற்றதாக ஆக்கினேன் என்பதுதான் அதன்மூலம் நான் சம்பாதித்தது. நானும் என்னுடைய அண்ணனும் இளைய சகோதரியும் அம்மாவும் அடங்கியதுதான் என்னுடைய குடும்பம். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு தென்னந்தோப்பு, அதில் ஒரு வீடு - இவை மட்டுமே எங்களுடைய தந்தை எங்களுக்குத் தந்த சொத்துகளாக இருந்தன. எங்களுடைய கல்விக்கும் நல்ல முறையில் வாழ்வதற்கும் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக கடின முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில், திடீரென உண்டான ஒரு நோயின் பாதிப்பில் அவர் அகால மரணத்தைத் தழுவிவிட்டார்.
அன்று அண்ணணும் நானும் பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம். எங்கள் இருவரின் கல்விச் செலவையும் குடும்பத்திற்கான செலவுகளையும் அந்த தென்னந்தோப்பிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த சுமாரான வருமானத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தால், ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அண்ணன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப விஷயங்களைப் பார்த்துக்கொள்வது என்றும், என்னை மட்டும் தொடர்ந்து படிக்கச் செய்வது என்றும் தீர்மானித்தனர்.
நான் எந்தவொரு வகுப்பிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது மட்டுமல்ல- எனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய படிப்புத் திறமையைப் பற்றி பாராட்டிப் பேசவும் செய்தார்கள்.
என்னுடைய தேவைகளை ஏதோவொரு வகையில் முழுமையாக நிறைவேற்றித் தருவதில் என் தாயும் அண்ணனும் எப்போதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். "குடும்பத்தின் இல்லாமையையும் பிரச்சினைகளையும்' எனக்குத் தெரியும்படி அவர்கள் காட்டிக் கொண்டதில்லை. குடும்பத்தின் ஆசை முழுவதையும் என்மீது வைத்திருந்தார்கள். நான் ஒரு வேலையில் அமர்ந்து, குடும்பத்தின் நிலையை உயர்த்தக்கூடிய அந்த சந்தோஷமான காலத்தை என் தாயும் அண்ணனும் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் நகைகள் அணிவதைப் பார்த்து என்னுடைய தங்கை நகை வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும்போது என் தாய் அவளிடம், "சின்ன அண்ணனுக்கு வேலை கிடைக்கட்டும். அதற்குப் பிறகு உனக்கு நகைகள் வாங்கலாம்' என்று கூறுவாள். தென்னை மரம் விழுந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து போக, அதைச் சீர் செய்வதையும், என் அன்னையின் வாத நோய்க்கு சிகிச்சை செய்வதையும், எனக்கு வேலை கிடைக்கும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்ததுதான் பொதுவாக நடந்தது.