ரதி நிர்வேதம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7526
எங்களுக்கு இடையே இருந்த மவுனத்திற்கு கனம் கூடிக் கொண்டிருந்தது. அதை முடிவுக்குக் கொண்டு வருவதைப்போல பாலையில் இருந்து ஒரு மலர்க்கொத்து ஒடிந்து கீழே விழுந்தது.
நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் மேலே பார்த்தோம்.
ஒரு கூர்மையான வாலைக் கொண்ட பறவை பறந்து போய்க் கொண்டிருந்தது. அதுதான் பூங்கொத்தைக் கீழே விழச் செய்திருக்க வேண்டும்.
எங்களுக்கு சற்று முன்னால், புழுதியில் வெள்ளை நிறப் பூக்களைக் கொண்ட அந்த தடிமனான கொத்து கீழே விழுந்து சிறிது நேரம் ஆடியது. பிறகு அது அசைவே இல்லாமல் கிடந்தது. காற்றில் பயணம் செய்யும் படகைப் போல, எங்கிருந்தோ அங்கு வந்த ஒரு தேனீ அந்தக் கொத்துக்கு நேராகக் கீழே இறங்கிச் சென்று, மலர்களுக்கு நடுவில் புகுந்து மறைந்து போனது.
“அந்தப் பூவை எடு...’’ - ஒரு புதிய விஷயம் கிடைத்த சந்தோஷத்துடன் ரது அக்கா கட்டளையிட்டாள்.
நான் அதைக் காதில் வாங்காததைப் போல இருந்தேன். நிலத்தின் மேற்கு மூலையில் நின்று கொண்டிருந்த தென்னை மரத்தின் காய்ந்துபோன தடியை, நிறுத்தாமல் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்தியையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.
ரது அக்காவின் செயல் என்னை வேதனை கொள்ளச் செய்தது. நான் ஒரு வெறும் சிறுவன் என்று மட்டுமே நினைத்து என்னுடன் அவள் பழகுகிறாள் என்றால்...?
“பப்பு!’’ - அவள் சற்று குரலை உயர்த்தி அழைத்தாள்.
“என்ன?’’ - நான் ஆச்சரியப்படுவதைப்போல நடித்தேன்: “மரங்கொத்தி...’’
“மரமண்டை’’ - அந்தப் பேரழகி ஒரு புல்லை எடுத்து மென்று கொண்டே சொன்னாள்: “அந்தப் பூவை இங்கே எடுத்துக் கொண்டு வரும்படி நான் சொன்னேன்...’’
நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, மிடுக்குத் தனத்தைச் சிறிதும் விடாமல் அவள் அந்தப் புல் முழுவதையும் மென்று தின்றுவிட்டாள். பிறகு காறித்துப்பினாள். “கசப்பா இருக்கு.’’
கண்களில் காணும் புல், செடி எல்லாவற்றையும் மென்று தின்ன ஆரம்பித்தால், எவ்வளவு நல்ல வாயாக இருந்தாலும் கசக்காமல் இருக்குமா? ஆனால் நான் அதைக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அவளுடைய சிவந்த முகத்தில் உதட்டில் ஒரு மூலையில் ஒட்டி இருந்த மணல் துகளையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.
ஓ! என்ன ஒரு அழகு!
மேலும் சிறிது நேரம் அவள் தன் கண்களில் நெருப்பை நிறைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நான் அவள் சொன்னதைக் கேட்கப் போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட அவள் தானே பூவை எடுப்பதற்காகத் திரும்பி நடந்தாள். அந்த நடையைப் பார்த்துக் கொண்டு நின்றதுதான் தவறான ஒன்றாகிவிட்டது.
ஆள் அரவமே இல்லாத நிலப்பகுதி. மேலே மேகங்கள் அற்ற நீல நிறம். கிளிகள், அழகான பெண்கள் அணில்கள்... பாம்புப் புற்று இருந்த பகுதியிலிருந்து வீசிய காற்றின் இரைச்சல்...
குனிந்து நின்று பூவை எடுத்த அவளைப் பின்னால் இருந்தவாறு நான் வளைத்துப் பிடித்தேன். அந்தக் காரியத்தைச் செய்தபோது என் கண்கள் மூடியிருந்தன.
அடுத்த நிமிடம் ஒரு கூச்சல்... கையை எடுத்தேன். கண்களைத் திறந்தேன். “அய்யோ!’’ என்று கத்தியவாறு அவள் பரபரத்துக் கொண்டிருந்தாள். தரையில் கால்களை ஊன்றாமல் நின்று குதித்துக் கொண்டிருந்தாள். பதைபதைத்துப்போய் ஓடலாம் என்று காலை எடுத்தபோது, ரது அக்காவின் அலறல் சத்தம் கேட்டது. “கொட்டிடுச்சு...’’
விரலைக் காட்டினாள். சுண்டு விரலில் தேனீயின் கொடுக்கு ஒட்டியிருந்தது. அவள் தன்னுடைய இடது கையால் அந்த விரலை இறுகப் பிடித்திருந்தாள். விரலின் நுனிப் பகுதி. சிவப்பு மையில் மூழ்கச் செய்து காய வைத்ததைப்போல சிவப்பாகக் காட்சியளித்தது.
நான் கொடுக்கைப் பிடுங்கி எறிந்தேன். ஓடிச் சென்று குளத்தின் கரையில் இருந்து இரண்டு வாழைத் தண்டுகளைப் பறித்துக் கொண்டு வந்து தேனீ, கொட்டிய இடத்தில் அதை வைத்துத் தேய்த்தேன்.
“எரியுது... எரியுது...’’ - அவள் கூறினாள். அத்துடன் வேதனையைக் காட்டும் சத்தங்களையும் வெளிப்படுத்தினாள்.
அப்போது நான் வேறொரு விஷயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் ஒரு இறுக்கமான அணைப்பு நடந்த விஷயம் அவளுக்கு தெரியாமலே போயிருக்குமோ? அதுதான் உண்மை என்றால், நான் மீண்டும் அதே பழைய இருட்டில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். நாசம் பிடித்த தேனீ கொத்துவதற்கு அந்த நேரமா கிடைத்தது?
வேதனை சற்று குறைந்தவுடன் அவள் எனக்கு நேராகத் திரும்பினாள். அவளுடைய முகம் கோபத்தால் மேலும் சிறிது பெரிதானதைப் போல இருந்தது.
“அது இருக்கட்டும்... இதற்கிடையில் நீ என்ன செஞ்சே?’’
“நான் எதுவும் செய்யலையே!’’ - பயந்து நடுங்கிக் கொண்டு நான் பதில் சொன்னேன்.
“நீ என்னை கட்டிப் பிடிச்சே...’’
“........’’
“என்ன... முழிக்கிறியா? ம்... நீ என்னைக் கட்டிப் பிடிச்சு என்னோட பின் பாகத்தைக் கிள்ளினே... உன் அம்மாக்கிட்ட நான் சொல்றேன்... சின்னப் பையன் அந்த அளவுக்கு விளைஞ்சிட்டியா?’’
பயம் காரணமாக என்னால் எதுவுமே பேசவே முடியவில்லை. என்னுடைய பேசும் சக்தியையே முழுமையாக இழந்து விட்டதைப் போல் நான் உணர்ந்தேன். உற்சாகத்துடன் குதித்துக் கொண்டிருந்த உடல், எந்தவித அசைவும் இல்லாமல் முதுகெலும்பு ஒடிந்து தொங்கிக் கொண்டிருப்பதைப்போல ஆகிவிட்டது.
என் தாயிடம் அவள் இந்த விஷயத்தைக் கூறினால் என்ன நடக்கும்?
ரது அக்கா, அவ்வப்போது தன் வலது கையின் சுண்டு விரலை ஊதிக் கொண்டிருந்தாள். அப்போது மட்டும் முகத்தில் கோபம் நீங்க கவலை வந்து ஆக்கிரமிக்கும். எனக்கு நேராகப் பார்க்கும்போது, மீண்டும் கண்கள் வெறிக்கவும், மூக்கு துடிக்கவும் செய்யும்.
“நான் சொல்லத்தான் போறேன். கண்ட கண்ட தெருப்பொறுக்கி பையன்கள்கூட சேர்ந்தும், படிக்கக் கூடாத புத்தகங்களையெல்லாம் படிச்சுத்தான் நீ இப்படி ஆயிட்டே. உன்னோட ஒரு நண்பர்கள் கூட்டம்...! ஒரு புத்தக வாசிப்பு... எல்லாவற்றையும் நான் இன்னைக்கே நிறுத்துறேன். அதிகப்பிரசங்கி!’’
நான் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்து அவள் மேலும் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தாள்:
“யாருடா என்னைக் கட்டிப்பிடிக்கச் சொல்லி உன்கிட்ட சொன்னது? சொல்லு...’’
“நான் கட்டிப்பிடிக்கெல்லாம் இல்ல...’’
“ஆனால் கட்டிப்பிடிக்க வந்தே...’’ - அவள் உறுதியான குரலில் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தாள். பேசும்போது இரண்டாகப் பின்னப்பட்டிருந்த அவளுடைய தலைமுடி அசைந்து கொண்டும் மார்புப் பகுதி கோபத்தால் மேலே எழுந்து தாழ்ந்து கொண்டும் இருந்தன.