நீலக்கடல் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6346
விமானத்திலிருந்து இறங்கிவரும் ஆண்கள், பெண்களுக்கு மத்தியில் சிவா தன்னுடைய பெரியம்மாவைத் தேடினாள். ஆனால், அவள் இல்லை. அவள் வரும் தேதி ஒருவேளை மாறியிருக்குமோ என்று அவள் நினைத்தாள். ஒருவித குழப்ப நிலையுடன் இங்குமங்குமாய் அவள் நடந்து கொண்டிருந்தபோது மைக் வழியாக ஒரு செய்தி வந்தது. “பேராசிரியை ரேணுகாதேவியின் உறவினர்கள் யாராவது விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்களா?” என்பதே அந்தச் செய்தி. அடுத்த நிமிடம் சிவா செய்தி புறப்பட்ட இடத்திற்கு விரைந்தாள். பெரியம்மா விலை மதிப்புள்ள பொருட்களை ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து, அதை சுங்க இலாக்கா அதிகாரிகள் ஏதாவது பிரச்சினைக்குள்ளாக்குகிறார்களோ என்று அவள் நினைத்தாள். சிறிது கோபம் மேலோங்க அவள் கவுன்டரில் பார்த்த அதிகாரிகளிடம் கேட்டாள்.
“என்ன பிரச்சினை?”
“நீங்க யாரு?”- ஒரு ஆள் கேட்டார்.
“நான் பேராசிரியை ரேணுகாதேவியோட சொந்தம். என் பேரு சிவா.”
“ப்ரொஃபஸர் ரேணுகாதேவி முந்தா நாள் ராத்திரி சிங்கப்பூர்ல மாரடைப்பு ஏற்பட்டு இறந்துட்டாங்கனு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. அவரோட உடலை சென்னையில இருந்துவந்த விமானத்துல இருந்து இப்போ இறக்கிக்கிட்டு இருக்காங்க. நீங்க அதை வாங்கிக்கலாம்.”- ஒரு அதிகாரி சொன்னார்.
அதைக் கேட்டு சிவா அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்று விட்டாள். அடுத்த நிமிடம் அவள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தொலைபேசியில் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தாள். தொலைபேசியில் பேசியதற்கான பணத்தை எடுப்பதற்காகத் தன்னுடைய பர்ஸை சிவா திறந்தபோது ஒரு அதிகாரி அதை வாங்க மறுத்துவிட்டார்.
“வேண்டாம்... இந்த கட்டணத்தை நாங்க ஏத்துக்குறோம்”- அவர் சொன்னார்.
“உங்களுக்கு நன்றி”- சிவா மெவான குரலில் சொன்னாள். அடுத்த சில நிமிடங்களில் ரேணுகாவின் உயிரற்ற உடல் வீட்டிற்கு வந்தது. அங்கிருந்து தைக்காடு சுடுகாட்டிற்குச் சென்ற சவ ஊர்வலத்தில் சமூக சேவகர்களும், முன்னாள் துணைவேந்தர்களும் மாணவர் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சவ ஊர்வலத்தில் பங்குபெற்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் எல்லார் காதிலும் விழும்படி சொன்னார்.
“ப்ரொஃபஸர் ரேணுகாதேவி நடத்துற கடைசி ஊர்வலம் இதுதானே!”
இறுதியில் பெரியம்மாவின் வீட்டில் தானும் ஒரு வேலைக்காரியும் மட்டும் தனியாக இருக்கும்போது சிங்கப்பூரிலிருந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுப்பியிருந்த பெட்டிகளைச் சாவியின் உதவியால் திறந்தாள் சிவா. பெரியம்மா ஷாப்பிங்கிற்குப் போகவேயில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஊரிலிருந்து கொண்டு போயிருந்த ஆடைகளும் சீப்பும் சோப்பு டப்பாவும் மருந்து புட்டிகளும் மட்டுமே பெட்டியில் இருந்தன. பட்டுப் புடவைகளின் ஓரங்கள் தூசு படிந்து கறுப்பு நிறத்தில் இருந்தன. ரேணுகா சாலையில் இறங்கி நடந்திருக்க வேண்டும். புடவைகளைச் சலவை நிலையத்திற்குக் கொடுத்து அனுப்புவதற்காக சிவா அவற்றை எடுத்து ஒரு கூடையில் போட்டு மூடினாள். பெட்டியிலிருந்த சாமான்கள் ஒவ்வொன்றையும் வெளியே எடுத்தபோது, ஒரு ஆணின் உள்ளாடைகள் அவற்றுக்கு மத்தியில் இருப்பதை சிவா பார்த்தாள். அந்த உள்ளாடைகளில் வியர்வை நாற்றமிருந்தது. இவை எப்படி பெரியம்மாவின் பெட்டிக்குள் வந்தன என்று ஆச்சரியத்துடன் அவள் நினைத்தாள். தாங்கள் அறையிலும் குளியலறையிலும் பார்த்த ஆடைகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து பெட்டிக்குள் வைத்து அனுப்புவதாக ஹோட்டலின் டெபுட்டி மேனேஜர் சாமான்களுடன் இணைத்திருந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
சிவா ஏதோ ஒரு சிந்தனையுடன் சிறிது நேரம் அந்த உள்ளாடைகளையே பார்த்தவாறு தரையில் அமர்ந்திருந்தாள். இந்த உள்ளாடைகள் பெரியம்மாவின் அறைக்குள் எப்படி வந்தன என்பதொன்றே அவளின் சிந்தனையாக இருந்தது. கடைசியில் அந்த உள்ளாடைகளை ஒரு தாளில் சுற்றி, சிவா இருட்டினூடே நடந்து சென்று சாலையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டாள். வீட்டிற்குத் திரும்பும்போது அவள் தனக்குத்தானே முணுமுணுத்தாள். “பாவம் பெரியம்மா.”