நீலக்கடல் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6346
சிவா ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி. பெரியம்மாவைத் திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வது, பெரியம்மாவுடன் சேர்ந்து அதிகாலை நேரத்தில் செங்கல்லூர் சிவன் கோவிலுக்குச் செல்வது போன்ற கடமைகளை அவள் மிகவும் ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தாள்.
ரேணுகா தன்னுடைய பழைய ரோம சால்வையை ஸர்ஃப் கலக்கிய நீரில் மூழ்க வைத்து சலவை செய்து கொண்டிருந்தாள். அவள் தலையை உயர்த்தி சிவாவைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டாள். “போகாம இருக்க முடியாது. உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகள் அந்த மாநாட்டுல பங்கெடுக்கிறாங்க. அவங்க வரச்சொல்லி அழைச்சு நான் அதற்குப் போகலைன்னா, அதனால வர்ற அவமானம் இந்தியாவுக்குத்தான்.”
“சரி... போயிட்டு வாங்க. அதே நேரத்துல நம்ம உடம்போட நிலை என்னன்றதை மறந்துடக்கூடாது. வெயில்ல நடந்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும்ன்றதையும் இனிப்பு பலகாரங்களை ஆர்வத்துடன் சாப்பிட்டா மறுநாள் தாங்க முடியாத அளவுக்கு உடல்ல களைப்பு உண்டாகும்ன்றதையும் எப்பவும் ஞாபகத்துல வச்சிருக்கணும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் மருத்துவ மனையைவிட்டு வெளியே வந்திருக்கிறோம்ன்றதை மறந்திடக் கூடாது”- சிவா சொன்னாள்.
“நீ பயப்படாதே. நான் நல்ல உடல் நிலையோட ஒரு வாரத்துல திரும்பி விடுவேன்...” - ரேணுகா சொன்னாள்.
“எதுக்கு இந்தப் பழைய சால்வையைச் சலவை செய்துக்கிட்டு இருக்கீங்க பெரியம்மா? உங்களுக்கு அடர்த்தியான நிறங்கள்ல இருக்குற துணிகள்தான் பொருத்தமா இருக்கும். இன்னைக்கே ஒரு சிவப்பு நிற சால்வை வாங்குங்க. ஒரு காஷ்மீர் சால்வை கோவளத்துல ஒரு ஹோட்டலுக்குள் காஷ்மீர்காரங்களோட ஒரு அருமையான கடை இருக்கு. ஆயிரம் ரூபாய்க்கு மேல விலை வராது...”- சிவா சொன்னாள்.
“ஆயிரம் ரூபாயா? அவ்வளவு விலை கொடுத்து நான் ஒரு சால்வையை வாங்கறதா இல்ல. அங்கே போயி செலவழிக்கிறதுக்கு ஐந்நூறு டாலர் நான் ரிசர்வ் வங்கியோட அனுமதியோட எடுக்குறேன். விமான பயணச் சீட்டுகளுக்கும் ஹோட்டல்ல தங்குற அறை வாடகைக்கும் ஆகுற செலவை மாநாடு நடத்துறவங்க பார்த்துக்குறதா கடிதத்துல எழுதியிருக்காங்க. அப்படின்னா, உணவு விஷயம்? அதற்கான செலவை நான்தான் பார்த்துக்கக வேண்டி வருமோ? வேண்டிய சாமான்கள் வாங்கவும், உணவுக்கும் ஐநூறு டாலர் போதுமா? எனக்கு கொஞ்சம் பதைபதைப்பாத்தான் இருக்கு...” - ரேணுகா சொன்னாள்.
“செலவுக்கு தாராளமா அதுபோதும். எனக்காக நீங்க எதுவும் செலவழிக்க வேண்டாம். எனக்கு வெளிநாட்டு பொருட்கள் மேல எப்பவும் ஈடுபாடு கிடையாது”- சிவா வெறுப்புடன் சொன்னாள்.
“உனக்கு ரெண்டு மேடன் ஃபோம் ப்ரா வாங்கிட்டு வரணும்னு நான் நினைச்சிருக்கேன். லேஸ் வச்ச ப்ரா இந்தியாவுல கிடைக்கிறது இல்லியே! பிறகு ஒரு லிப்ஸ்டிக்... நிறத்தை வெண்மையாக்குகிற க்ரீம்...” - ரேணுகா சொன்னாள்.
“பெரியம்மா, அது எதுவுமே எனக்கு வேண்டாம். நான் ப்ரா போடுறதேயில்ல. லிப்ஸ்டிக் எந்தக் காலத்திலும் பயன்படுத்துறது இல்ல. நான் வெள்ளையா இருக்கணும்ன்ற ஆசையும் இருந்தது இல்ல. எனக்காக நீங்க செலவழிக்கணும்னு நினைச்சிருக்கிற பணத்தை வச்சு நல்ல உணவுப் பொருட்கள் வாங்கிச் சாப்பிடுங்க. நல்ல உடல் நலத்தோட திரும்பவும் என்கிட்ட திரும்பி வாங்க”- சிவா சிரித்துக் கொண்டே சொன்னாள்.
பெரியம்மாவின் பெட்டிமேல் அவள் அமர்ந்து இரண்டு முறை வெறுமனே எழுந்து எழுந்து உட்கார்ந்தாள். அப்போதும் பெட்டி சரியாக அடைக்கவில்லை. கடைசியில் பெட்டியை அடைந்தபோது, அதை எடுத்து தூக்கிப் பார்த்த ரேணுகா கை மிகவும் வலிப்பது போல் உணர்ந்தாள்.
“இதைக் கையில எடுத்துக்கிட்டு விமான நிலையத்துக்குள்ள நான் எப்படி நடப்பேன்? அங்கே கூலி வேலைக்காரங்க கிடைக்குறது இல்லன்னு கேள்விப்பட்டிருக்கேன்...” - ரேணுகா சொன்னாள்.
ஒரு பெட்டிக்கு பதிலாக இரண்டு சிறு பெட்டிகளை எடுத்துச் செல்லும்படி சிவா சொன்னாள். ஒவ்வொரு கையிலும் ஒரு பெட்டி.
“ரெண்டு பாலியெஸ்டர் புடவைகளும் ஒரு பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு போனாலே போதும்” - சிவா சொன்னாள்.
“நான் ரொம்பவும் ஏழை போல இருக்குன்னு மற்ற ஆளுங்க நினைச்சிடப் போறாங்க” - ரேணுகா முணுமுணுத்தாள்.
“ஏழை நாட்டின் சார்பா போற நீங்க ஒரு பணக்காரியைப் போல இருக்கணும்னு அவசியமில்லையே” - சிவா சொன்னாள்.
சில வேளைகளில் தனக்கு சிவா மீது தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு உண்டாவதை ரேணுகா நினைத்துப் பார்த்தாள். அவளின் எளிமையான வாழ்க்கை முறையை ரேணுகாவால் பின்பற்ற முடியவே முடியாது. இளம்பெண்களின் இயற்கையான மென்மைத் தன்மையை காந்தியிசம் போர்க் குணமாக்கி அவளைப் பாழ்செய்யும் என்று ஒரு முறை ரேணுகா சிவாவிடம் சொன்னாள். “பெரியம்மா, நீங்க காந்தியின் கொள்கைகளை விளக்கி போனமாதம் வி.ஜெ.டி ஹாலில் புகழ்ந்து பேசினதை பார்வையாளர்களுக்குப் பின் வரிசையில் உட்கார்ந்து நானும் கேட்டேன்.” சிவா சிரித்தவாறு சொன்னாள்.
ரேணுகாவை வழியனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு மாணவர் தலைவர்களும் பொதுநல சேவகர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் உள்ளேவிட விமான நிலைய காவல் துறையினர் மறுத்தார்கள். நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மனதில் வைத்து ஒரு பயணி தன்னால் முடியாத நிலையில் இருக்கும்போது மட்டும் பொருட்களை ‘புக்’ செய்வது போன்ற விஷயங்களுக்கு ஒரு உதவியாளரை தன்னுடன் வைத்திருக்கலாம். அப்படியில்லாமல் சுமார் நூறு பெண்களையும், ஆண்களையும் உள்ளே விடமுடியுமா? நிச்சயமாக முடியாது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் ரேணுகா வாசலுக்குச் சென்று மீண்டும் மீண்டும் அவர்கள் அன்பிற்கு நன்றி கூறியவண்ணன் இருந்தாள்.
“நீங்க திரும்பிப் போங்க. ஒரு வாரம் ஆனவுடன் நான் திரும்பி வருவேன். அதற்கான டிக்கெட் என் கையிலயே இருக்கு”- ரேணுகா சொன்னாள். அவளுடைய தலைமுடி கட்டுப்பாட்டை மீறி காற்றில் பறந்து கொண்டிருந்தது. அவளின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளை உயர்த்தி புன்னகை செய்தவாறு அவளிடமிருந்து பிரிந்து சென்றார்கள்.
“நீங்க திரும்பி வர்றப்போ நாங்க விமான நிலையத்துக்கு வருவோம்”- அவர்கள் அவளைப் பார்த்துச் சொன்னார்கள்.
“வேண்டாம். நான் ஒரு வாடகைக் கார் பிடிச்சு வீட்டுக்கு வந்திடுவேன். நீங்க அங்கே வந்து என்னைப் பாருங்க. யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்.” ரேணுகா அவர்களிடம் சொன்னாள்.
“நான் வர்றேன்...”- சிவா சொன்னாள். ரேணுகா பாசத்தடன் அவளைப் பார்த்தாள். தன்னுடைய சொத்துக்களுக்கு வாரிசு, தன்மீது பாசம் வைத்திருக்கும் ஒரேயொரு உயிர், அவள் மறுத்தாலும் ஒரு தரமான ஹேண்ட் பேகையோ வாசனைப் பொருளையோ தான் கட்டாயம் அவளுக்குப் பரிசாகக் கொண்டுவந்து தரவேண்டும் என்று ரேணுகா தீர்மானித்தாள்.