நீலக்கடல் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6346
விமானத்தில் முக்கியமான பிரமுகர்கள் அமரக்கூடிய முன்னிருக்கைகளில் ஒன்றில்தான் பேராசிரியை ரேணுகாதேவி உட்கார்ந்திருந்தாள். ஏதாவது அமைச்சர்களுடன் அறிமுகமாகலாமே என்ற எண்ணத்துடன் அவள் சுற்றிலும் கண்களை ஓட்டினாள். அப்போது தனக்கு வலது பக்கத்தில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் மட்டுமே அவள் கண்களில் பட்டான். ஒருவகை ஏமாற்றத்துடன் அவள் கண்களை வேறு பக்கம் திருப்பினாள்.
அந்த நிமிடம் ரேணுகாவிற்குத் தன்னுடைய தோழியான த்ரேஸ்யாவைப் பற்றிய ஞாபகம் வந்தது. தான் சிங்கப்பூருக்குச் செல்வதாகக் கூறியவுடன், த்ரேஸ்யா சொன்ன வார்த்தைகளும்தான்.
“ரேணு, ஒரு சிங்கப்பூர்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே தங்கிடாதே.”
சிங்கப்பூரில் அழகுப் பிரியர்களான சீனாக்காரர்களும், மலேஷியாவைச் சேர்ந்தவர்களும் நிறைய இருப்பதாக த்ரேஸ்யா சொன்னாள். அவர்கள் ஷாப்பிங்கிற்காக மட்டுமே சிங்கப்பூருக்கு வருகிறார்கள். ஆடைகள் தேர்ந்தெடுப்பதற்கு மத்தியில் ஒரு ஆள் தன்னுடைய பின்பாகத்தைக் கிள்ளி வலி உண்டாக்கியதாக த்ரேஸ்யா சொன்னாள். திரும்பிப் பார்த்தபோது அந்த ஆள் முதுகைக் காட்டிக் கொண்டு ஓடுவதை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.
ரேணுகா சென்னையை அடைந்தாள். அன்று தன்னுடைய சினேகிதி ஒருத்தியுடன் இரவில் தங்கிவிட்டு மறுநாள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதாகத் திட்டம். சாயங்காலம் ஷாப்பிங் செல்லலாம் என்று புறப்பட்டபோது அவளுடைய சினேகிதி சொன்னாள்.
“ரேணு, இந்த குளியலறைச் செருப்புகளைப் போட்டுக்கிட்டு நீ சிங்கப்பூர் மண்ல காலை வச்சா எங்களைப் போன்ற இந்தியாக்காரர்களுக்கு அது அவமானமா இருக்கும். நல்ல தரமான தோல்ல செஞ்ச காலணிகள் அணிஞ்சால்தான் நல்லா இருக்கும்.”
ஹவாய் செருப்புகளைத் தாளில் சுற்றி சினேகிதிக்குத் தெரியாமல் ரேணுகா ஒளித்து வைத்தாள். தோழி தேர்ந்தெடுத்த செருப்புகளுக்குள் தன்னுடைய பாதங்களை நுழைந்தாள் ரேணுகா. விரல்கள் நசுங்கி விடுமோ என்று அவள் பயந்தாள். செருப்பின் அடிப் பகுதியின் உயரம் காரணமாக அவளின் நடையில் ஒருவித தடுமாற்றம் உண்டானது.
“நான் கீழே விழுந்திடுவேனோ?” - அவள் சந்தேகத்துடன் தன் தோழியைப் பார்த்து கேட்டாள். அந்தக் காலணிகளை அணிந்து நடப்பதற்கு அவளின் தோழி ஒன்றரை மணி நேரம் ரேணுகாவிற்குப் பயிற்சியளித்தாள். இருந்தாலும், காலில் உண்டான வலி அதிகரிக்கவே செய்தது. பாதம் பயங்கரமான வலித்தது. காலில் வேதனை உண்டாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து மனதிலும் இனம்புரியாத ஒரு குழப்ப நிலை உண்டாகத் தொடங்கியது. தான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதய நோயும், இரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலியும், சர்க்கரை நோயும், இவை தவிர தினந்தோறும் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக வந்து சேர்ந்த அதிக சோர்வு நிலையும் முழுமையாகத் தன்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, தான் இதற்கு முன்பு பழக்கமே இல்லாத ஒரு நாட்டிற்குப் பறந்து செல்வது சரியான செயல்தானா? அந்த மாநாட்டில் பங்கெடுக்க வந்திருக்கும் அறிவாளிகள் தான் வாசிக்கப் போகும் பேப்பரின் சாதாரணத் தன்மையைப் பற்றி அவர்களுக்குள் சொல்லி கிண்டல் பண்ண மாட்டார்களா? தனக்கென்று ஒரு ஃபார்முலா வையோ ஒரு கண்டு பிடிப்பையோ அந்த அரசாங்கத்தில் தான் முன் வைக்கப் போவதில்லை. வினோதமான ஒரு இந்திய பட்டுப்புடவையை அணிந்திருக்கும் ஒரு பெண் தென்னிந்திய உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் என்னவோ புலம்பிக் கொண்டிருக்கிறாள் என்று மட்டுமே அங்குள்ளவர்கள் நினைப்பார்கள். தான் உண்மையிலேயே யாருக்கு போதனை செய்வதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம்? நம் வீட்டு வாசலில் இருக்கும் மலருக்கு மணமில்லை என்பதைத் தனக்குப் புரியவைத்த தன்னுடன் பல வருடங்களாகப் பழகிக் கொண்டிருக்கும் நபர்களுக்குத் தன்மீது பொறாமை உண்டாக வேண்டும் என்பதற்காக மட்டுமேதான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோமா? அதற்காகத்தான் இந்தக் கட்டுரை வாசிப்பா? அதற்காகத்தான் இந்த இறுக்கமான காலணிகளை அணிந்துகொண்டு நடக்கும் நடையா? - இப்படி பல விஷயங்களையும் மனதில் நினைத்துப் பார்த்த ரேணுகாதேவி தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்: ‘நீ ஒரு சரியான முட்டாள்...’ அவளின் முணு முணுப்பைக் கேட்ட அருகில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த மனிதன் இறகால் வருடுவதைப் போல மென்மையான குரலில் கேட்டான்: “மேடம், நீங்க என்னைப் பார்த்து ஏதாவது சொன்னீங்களா?”
அதைக் கேட்டு ரேணுகாவிற்கு வெட்கமாகப் போய்விட்டது. முதுமையின் ஒரு அடையாளம்தானே தனக்குத்தானே ஒரு நபர் பேசிக் கொள்வது!
“இல்ல... நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன். சில நேரங்கள்ல இப்பத்தான் யாருக்கிட்ட என்றில்லாமல் எனக்கு நானே பேசிக்குவேன்...”- ரேணுகா சொன்னாள்.
அதற்குப் பிறகு அவள் கடைக்கண்களால் அந்த இளைஞனை அவ்வப்போது பார்த்தவண்ணன் இருந்தாள். அவன் ரேணுகாவைச் சிறிதுகூட திரும்பிப் பார்க்கவில்லை. அவனுடைய கவனம் முழுவதும் பத்திரிகை படிப்பதிலேயே இருந்தது. அவன் பயன்படுத்தியிருந்த ஆஃப்டர் ஷேவ் லோஷனின் எலுமிச்சம் பழ வாசனையை மிகவும் விரும்பிய ரேணுகா அவன் முகத்தையும் தலைமுடியையும், அணிந்திருந்த ஆடையையும் ஆர்வத்துடன் பார்த்தாள். அந்த மனிதனுக்கு சுமார் முப்பத்தைந்து வயது இருக்குமென்று கணக்குப் போட்டாள். வியர்வையில் சற்று நனைந்து போயிருந்த ஒரு அடர்த்தியான நீல வண்ணச் சட்டையை அவன் அணிந்திருந்தான். வெள்ளை நிறத்தில் காற்சட்டை அணிந்திருந்தான். சதைப்பிடிப்பான அவனுடைய உடம்போடு ஒட்டிப்போய் காணப்பட்டது சட்டை. இரத்த ஓட்டமுள்ள கன்னங்களைக் கொண்டிருந்தான். தாடைப் பகுதி நேர்த்தியாக அமைந்திருந்தது. கண்கள் பழைய சீன நாட்டு அறிஞர்களின் கண்களைப் போல இருந்தன. அவனுடைய மீசை கீழ் நோக்கி வளைந்திருந்தது. அவன் ஒரு முறையாவது சிரித்து, அதைத் தான் பார்க்க மாட்டோமா என்று விருப்பப்பட்டாள் ரேணுகா. மற்ற உறுப்புகளைப் போல அவனுடைய பல்வரிசையும் அழகாக அமைந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு. தன்னைவிட இருபது வயது குறைவாக இருக்கும் ஒரு இளைஞனின் புன்சிரிப்பைப் பார்த்து என்ன பிரயோஜனம்? த்ரேஸ்யாவைப் போல இளம் வயதிலேயே தான் திருமணம் செய்திருந்தால் தன்னுடைய வலது பக்கம் அந்த இளைஞனைப் போல ஒரு அழகான மகன் தனக்கு இருந்திருப்பான்! இதை நினைத்தபோது ரேணுகாவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
“பத்திரிகையைப் படிச்சு முடிச்சிட்டு கொஞ்சம் எனக்குத் தர முடியும்?”- ரேணுகா அந்த இளைஞனைப் பார்த்து கேட்டாள்.
அடுத்த நிமிடம் அவன் பத்திரிகையை மடித்து ரேணுகாவின் கையில் கொடுத்தான். அவன் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு காணப்பட்டது. அவனுடைய வலது பக்க பல்லொன்று தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அது அவனுடைய உருவ அழகை முழுமையற்றதாக ஆக்கியிருப்பதாக ரேணுகா உணர்ந்தாள். அந்தக் குறைபாட்டை நினைத்து அவளுக்கு வருத்தம் உண்டானது.