அபிமன்யு - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9462
“ம்...'' -மாமாவின் நீளமான முழக்கம் நேராக உண்ணியின் மனதிற்குள் போய் நுழைந்தது.
“சிறுநீர் கழிச்சிட்டு போய் படு.'' -மாமா சொன்னார்.
உண்ணி வாசலுக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு திரும்பவும் படுக்கைக்குச் சென்று படுத்தான். மணிக்கணக்கில் தூங்காமல் காதுகளைத் தீட்டிக் கொண்டு படுத்திருந்தான். ஆனால், அவன் தூங்குவது வரையில் அய்யப்பன், மாமா இருவரின் சத்தமும் கேட்கவே இல்லை.
சாப்பிடும் அறையில் பாத்திரம் அசைவது கேட்டது. சாப்பாட்டு அறையிலும் வாசலிலும் பாதங்களின் சத்தங்கள் கேட்டன. மாமாவின் அறையில் கட்டிலின் அழுகைச் சத்தம் கேட்டது. பிறகு காட்டின் இசை மட்டும் கேட்டது. இறுதியில் இரவின் அசைவுகளும் அவனுடைய காதுகளில் இல்லாமல் போயின.
ஒரு சாதாரண புலர்காலைப் பொழுதை நோக்கி உண்ணி கண் விழித்தான்.
எப்போதும் போல அய்யப்பன்தான் அழைத்து எழச் செய்தான். கண் விழித்துச் சென்று பார்த்தபோது மாமா எப்போதும் போல உடற்பயிற்சிக்குத் தயாராகி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். மனதிற்குள் ஒரு மந்திரத்தை முணுமுணுத்ததைத் தொடர்ந்து உடற் பயிற்சி ஆரம்பமானது. வழக்கம் போல மாமாவும் அய்யப்பனும் உண்ணிக்குக் கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறினார்கள். முந்தைய இரவைப் பற்றி யாரும் எதுவும் கேட்கவில்லை. அய்யப்பன் "சின்ன எஜமான்' என்றுதான் அழைத்தான். உண்மையான வேலைக்காரனைப் போலவே நடந்து கொண்டான். முந்தைய நாள் இரவு மாமாவுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிட்ட அய்யப்பன் எங்கு போனான் என்று உண்ணி ஆச்சரியத்துடன் நினைத்தான்.
உடற்பயிற்சி முடிந்து எப்போதும் போல மூவரும் ஒன்றாக ஆற்றுக்குச் சென்று குளித்தார்கள். குளிக்கும் இடத்திலும் அய்யப்பன் உண்மையான வேலைக்காரனாகவே இருந்தான்.
குளித்து முடித்து திரும்பி வந்து பூஜையை ஆரம்பித்தார்கள். காலை நேர பூஜையில் அய்யப்பன் முழு நேரமும் பங்கெடுப்பதில்லை. முதல் பூஜை முடிந்ததும், அய்யப்பன் சமையலறைக்குள் சென்றான். மாமாவும் உண்ணியும் பூஜையைத் தொடர்ந்தார்கள்.
பூஜை முடிவடைந்தபோது, அய்யப்பன் உணவு சமைத்து முடித்து விட்டிருந்தான். அவித்த கிழங்கும் மாமிச வறுவலும் சுக்கு காப்பியும்தான் அன்றைய காலை உணவாக இருந்தன. அய்யப்பன் எஜமானனிடம் முழுமையான பக்தி கொண்ட ஒரு வேலைக்காரனைப் போல் நடந்து கொண்டான்.
காலை உணவு முடிந்து மாமா படிக்கும் அறையை நோக்கிச் சென்றார். உண்ணியும் பாட நூல்களை நோக்கித் திரும்பினான். அய்யப்பன் வேறு பணிகளில் மூழ்கினான்.
உண்ணிக்குப் புறப்பட வேண்டிய நேரம் ஆனபோது, அய்யப்பன் பக்தியுடன் மதிய உணவுடன் வந்தான். அவன் உண்மையான வேலைக்காரனாக இருந்தான்.
உண்ணி அய்யப்பனின் கண்களையே பார்த்தான். எப்போதும் இருக்கும் பணிவைவிட வேறு எதுவும் அங்கு இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்.
ஆனால், அந்த இரவு முதல் அய்யப்பன் வெறும் வேலைக்காரன் அல்ல என்பதும், மிகவும் முக்கியமான ஒரு ஆள் அவன் என்ற ஒரு எண்ணமும் உண்ணிக்குள் உண்டானது. அவனுடைய மனதின் உள்ளறையில் அய்யப்பன்மீது மதிப்பு உண்டானது. ஒரு மெல்லிய பயம் கூட உண்டானது. ஆனால், அய்யப்பனோ முன்பு இருந்ததைவிட எஜமான்மீது பக்தி கொண்டிருக்கும் ஒரு தனி வேலைக்காரனைப் போல நடந்து கொண்டான்.
ஆசிரம நிலத்தின் வடக்கு எல்லையில் ஆறு இருந்தது. காளி கோவிலைத் தாண்டி அதைவிட உயரத்தில் இருந்த ஏதோ ஊற்றில் இருந்து ஊறி வந்த தெளிந்த நீர்தான் நதியாக ஓடிக் கொண்டிருந்தது. பாறைகளில் மோதித் திரும்பி, பாறைக்கூட்டங்களின் வழியாகச் சுற்றித் திரிந்து, பாறைகளில் இருந்து அருவிகளாக மாறி, மீண்டும் பாய்ந்தோடிய வாய்க்கால்கள் ஒன்றாகச் சேர்ந்தபோது ஆறு பிறந் தது. ஆற்றுநீர் கண்ணீரைப் போல தெளிந்ததாக இருந்தது. ஆற்று நீருக்கு அடியில் உருண்டைக் கற்கள் கிடந்தன.
அந்த ஆற்றில்தான் உண்ணி தினமும் குளிக்கச் செல்வான். ஆற்றின் ஒரு பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து மறைவு உண்டாக்கிய- பாறைகள் நிறைய இருந்த பகுதியில்தான் உண்ணி எப்போதும் குளிப்பான். அந்த இடத்திற்கு அவன் உண்ணிக்கடல் என்று பெயரிட்டான். அதற்குச் சற்று மேலே மாமா குளிக்கும் இடத்திற்கு மாமா படித்துறை என்றும்; அய்யப்பன் குளிக்கும் இடத்திற்கு அய்யப்பன் படித்துறை என்றும் உண்ணிதான் பெயர்கள் வைத்தான்.
ஆற்றில் குளியலும் மலைச் சரிவில் வாழ்க்கையும் மனம் மற்றும் உடலின் நலனுக்கு மிகவும் நல்லது என்று மாமா சொன்னார். நகரத்திலும் கிராமங்களிலும் இருக்கும் காற்று மக்கள் பெருக்கம் காரணமாகக் கெட்டுப் போய்விட்டது என்றும்; இங்கு மட்டுமே சுத்தமான காற்று கிடைக்கிறது என்றும்; சுத்தமான காற்றையும் நல்ல நீரையும்விட மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை வேறு எதுவும் இல்லை என்றும் மாமா சொன்னார்.
ஆனால், நண்பர்கள் என்று யாரும் இல்லாத- விளையாட்டும் சிரிப்பும் இல்லாத வனவாசம் உண்ணியைப் பொறுத்த வரையில் ஒரு தண்டனையாக இருந்தது. அங்கிருந்த வாழ்க்கை இருட்டறையில் வாழ்வதைப் போல அவனுக்குத் தோன்றியது.
3
உண்ணி வந்தபோது பெரிய மாமா பொறுமையை இழந்து வாசலில் நடந்து கொண்டிருந்தார். பின்னால் கைகளைக் கோர்த்து வைத்துக் கொண்டு படுவேகமாக இருந்த அந்த நடை மாமாவின் கோபத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருப்பதை உண்ணி தெரிந்து கொண்டிருந்தான். வாசலின் எல்லையில் நின்று கொண்டிருந்த கொய்யா மரத்தின்மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த அய்யப்பன்தான் முதலில் உண்ணியைப் பார்த்தான்.
உண்ணி மெதுவாக வாசலுக்கு வர ஆரம்பித்ததும், அய்யப்பன் சொன்னான்:
“இதோ, சின்ன எஜமான் வந்துட்டாரே!''
“ம்...'' -பெரிய மாமா நீட்டி முழங்கினார். அந்த முணுமுணுப்பிற்கு, உண்ணி முன்னால் வைத்த காலை பின்னோக்கி இழுக்கச் செய்யும் சக்தி இருந்தது. சிறிய ஒரு குற்ற உணர்வுடன் உண்ணி திரும்பி நின்றான்.
பெரிய மாமா அவனைப் பார்த்தார்.
“உள்ளே போய் புத்தகங்களை வைத்துவிட்டு ஆடைகளை மாற்றிவிட்டு வா, உண்ணி'' -அவருடைய குரலின் தனித்துவம் உண்ணியைப் பாடாய்ப் படுத்தியது.
அவன் தன்னுடைய அறைக்குச் சென்றான். தோளில் இருந்த பையை எடுத்து ஆணியில் தொங்கவிட்டான். ஆடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான். அப்போதும் மாமா அதே வேகத்தில் நடந்து கொண்டிருந்தார்.
“உண்ணி, போய் குளிச்சிட்டு வா.'' -மாமா கட்டளையிட்டார்.