திருப்பம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7488
"சங்கரப்பிள்ளை, நீங்க தரகர் வேலை பார்க்குற விஷயம் எனக்கே இப்போத்தான் தெரியுது. அவன் ஏதாவது தந்தான்னா, நீங்க வாங்கிக்கோங்க. ஆனால், இங்கே வந்து இப்படிப்பட்ட விஷயங்களைப் பேச வேண்டாம்."
"நான் தரகர் வேலை எதுவும் பார்க்கல சாணார். உங்கமேல பிரியம் இருக்குற ஒரே காரணத்தால் நான் இதைச் சொன்னேன்."
"இப்படிப்பட்ட பிரியம் எதுவும் இங்கே வேண்டாம் தெரியுதா? நான் கஷ்டத்துல இருக்குறவன்தான். ஆனால், மரியாதையை இழந்து அரிசி வாங்க நான் தயாராக இல்ல சங்கரப்பிள்ளை. போங்க... சங்கரப்பிள்ளை... போங்க."
சங்கரப்பிள்ளை எழுந்து கொண்டே சொன்னார்:
"பழைய பெருமைகள் இப்போ பயன்படாது சாணார்."
"அப்படின்னா ஒரு காரியம் செய்யுங்க சங்கரப்பிள்ளை. உங்களுக்கு மூணு, நாலு பெண் பிள்ளைகள் இருக்காங்கள்ல! பார்க்குறதுக்கு அவங்க அழகாகவும் இருக்காங்கள்ல! அவங்கள்ல ஒரு பொண்ணைப் பிடிச்சு அவனுக்குக் கொடுத்திடுங்க."
சங்கரப்பிள்ளை திரும்பி நடந்தார்.
4
வேலாயுதன் சாணாரின் சகோதரிதான் மாதவி சாணாட்டி. அவளின் கணவர் வாசுப்பணிக்கன். அவர்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். எல்லோருக்கும் இளையவனாக ஒரு மகனும் இருந்தான்.
மூத்த மகள் இந்திரா, சுசீலாவைப் போல அழகானவள் இல்லையென்றாலும், பார்ப்பதற்குப் பரவாயில்லை என்று கூறும் விதத்தில் இருப்பாள். அவள் எட்டாம் வகுப்புவரை படித்திருந்தாள்.
வேலாயுதன் சாணாரின் வீட்டை விட்டு வெளியே வந்த சங்கரப்பிள்ளை நேராகச் சென்றது மாதவிச் சாணாட்டியின் வீட்டிற்குத்தான். அவர்களின் பொருளாதார ரீதியான சிரமங்களை நன்கு தெரிந்திருப்பவர் சங்கரப்பிள்ளை. வேலாயுதன் சாணாரின் மகள் கிடைக்கவில்லையென்றால் அவருடைய சகோதரியின் மகள் கிடைப்பாளா என்று பார்க்க வேண்டும். அதுதான் சங்கரப்பிள்ளையின் நோக்கமாக இருந்தது.
மாதவிச் சாணாட்டிக்கு மாலேத்து குடும்பத்திலிருந்து பங்கு கிடைத்தது. அவளின் கணவரான வாசுப்பணிக்கனுக்கும் சிறிது சொத்து இருந்தது. வாசுப்பணிக்கன் ஒரு சுகவாசி. அதனால் தனக்கென்று இருந்த சொத்தையும் தன் மனைவியின் பெயரில் இருந்த சொத்தையும் இழந்துவிட்டார். அன்றாடச் செலவிற்கே அவர் மிகவும் கஷ்டப்பட ஆரம்பித்தார். மூத்த பெண் பிள்ளைகள் இருவரும் திருமண வயதை அடைந்துவிட்டார்கள். பெண் பிள்ளைகளுக்கு கணவர்களைத் தேடித்தர அவர்களின் தந்தையும் தாயும் எப்போதும் முயற்சித்த வண்ணம் இருந்தனர்.
இப்படி இருக்கும் போதுதான், சிறிதும் எதிர்பாராமல் சங்கரப்பிள்ளை அந்த வீட்டைத் தேடி வந்தார். சங்கரப்பிள்ளை சாதாரணமாக அங்கு செல்லக்கூடியவர் இல்லை. அதனால், சங்கரப்பிள்ளை அங்கு வந்தது அந்த வீட்டில் இருந்தவர்களின் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. மாதவி சாணாட்டி கவலை கலந்த குரலில் சொன்னாள்:
"எங்க எல்லோரையும் மறந்துட்டீங்க... அப்படித்தானே?"
"மறக்க முடியுமா சாணாட்டி? மாலேத்து சாணான்மார்கள் என்று சொன்னால், அவங்க ஊர்ல ராஜாக்களா இருந்தவங்களாச்சே!"
"அதெல்லாம் பழைய கதை. இப்போ பழைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தால்..."
அதைக் கேட்கும்போது சங்கரப்பிள்ளைக்கு ஆறுதலாக இருந்தது. வந்த விஷயத்தில் பாதி வெற்றி கிடைத்ததைப் போல இருந்தது. சங்கரப்பிள்ளை சொன்னார்:
"இருந்தாலும், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் எப்பவும் அவர்களின் குடும்ப குணத்தைக் காட்டுவார்கள்."
"உட்காருங்க"- சாணாட்டி புல்லாலான பாயை விரித்துப் போட்டாள்.
வாசுப்பணிக்கன் உள்ளேயிருந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார்.
"சங்கரப்பிள்ளை, உட்காருங்க."
சங்கரப்பிள்ளை அமர்ந்தார். வாசுப்பணிக்கனும் உட்கார்ந்தார். வாசுப்பணிக்கன் சொன்னார்:
"சங்கரப்பிள்ளை, ஒரு விஷய்ததைக் கேக்குறீங்களா? அந்தக் காலத்துல இவளோட வீட்டைச் சேர்ந்தவங்கதான் ஊரையே ஆண்டாங்க. என் வீட்டைச் சேர்ந்தவர்களும் மோசம் என்று கூற முடியாத அளவுக்கு இருந்தாங்க. ஆனால், பெரியவர்கள் யானைமேல ஏறி உட்கார்ந்தா, பேரர்களின் இருக்கையில் தழும்பு உண்டாகுமா?"
"அப்படிச் சொல்லுங்க வாசுப்பணிக்கர். காலம் மாறும் போது, நாமளும் மாறணும். அதுதான் தேவை."
"சங்கரப்பிள்ளை, இப்போ உங்களுக்கு நல்ல நேரமாச்சே! கொச்சப்பன் முதலாளி நீங்க சொல்றபடி கேப்பாருன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க"- மாதவி சாணாட்டி தந்திரத்தனமாக ஒரு வாக்கியத்தை எறிந்தாள். சங்கரப்பிள்ளையை உற்சாகம் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காகச் சொன்னது அது.
ஆனால், அதில் சிறது உண்மையும் இருக்கவே செய்தது. சங்கரப்பிள்ளை கொச்சப்பன் முதலாளியின் கணக்குப் பிள்ளை மட்டுமல்ல- அவருக்கு ஆலோசனைகள் கூறக் கூடியவரும்கூட. வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், வீட்டு விஷயங்களிலும் சங்கரப்பிள்ளை முதலாளிக்கு ஆலோசனைகள் கூறுவார். அப்படி கூறப்படும் ஆலோசனைகளில் பலவற்றை முதலாளி ஏற்றுக் கொள்ளவும் செய்வார். அதனால்தான் முதலாளியின் சம்மதத்தைக் கேட்காமலேயே, மாதவி சாணாட்டியின் வீட்டிற்குச் சென்று திருமண விஷயமாகப் பேசுவதற்கு சங்கரப்பிள்ளை தயாரானார்.
மாதவி சாணாட்டி கூறிய வார்த்தைகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதற்காக வாசுப்பணிக்கர் சொன்னார்:
"சங்கரப்பிள்ளை, உங்க ஆலோசனைகளைக் கேட்டதால்தானே கொச்சப்பன் முதலாளி இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறார்?"
"வாசுப்பணிக்கரே, ஒரு விஷயத்தைக் கேளுங்க. கொச்சப்பன் முதலாளி ரொம்பவும் நல்லவர். கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவர். தந்தையைப் போலவேதான் ரவீந்திரனும்."
"அது அப்படித்தான் இருக்கும்! தந்தையோட மகனாச்சே!"
சாணாட்டி இடையில் புகுந்து சொன்னாள்:
"அவங்க கஷ்டத்தை அனுபவிச்சவங்க. அதனால்தான் அவங்களுக்கு கஷ்டப்படுறவங்கமேல கருணை இருக்கு."
"ரவீந்திரன் விஷயத்தைக் கேளுங்க சாணாட்டி.. கல்யாணம் ஆன பிறகு நகரத்தில் இருக்க வைக்கணும் என்பதுதான் அவரோட முடிவு. நிலம் வாங்கி, வீடும் கட்டியாச்சு. புதிய மாதிரியில் இருக்கக் கூடிய ஒரு பெரிய வீட்டைக் கட்டி முடிச்சாச்சு. திருமண ஆலோசனைகளும் வர ஆரம்பிச்சிடுச்சு."
"அது வராம இருக்குமா, சங்கரப்பிள்ளை? பணக்காரன், இளைஞன், படிப்பு உள்ளவன்... ரவீந்திரனுக்கு யார் பெண் தராம இருப்பாங்க?"
"ஆனால், ரவீந்திரன் என்ன சொல்றார் தெரியுமா? பணக்காரர்களின் பொண்ணுகளோ, உத்தியோகத்துல இருப்பவர்களின் பொண்ணுகளோ தனக்கு வேண்டாவே வேண்டாம்னு சொல்றாரு அவர். பார்க்குறதுக்கு அழகாக இருக்கணும். நல்ல குணத்தைக் கொண்ட பொண்ணா இருக்கணும்- இதுதான் ரவீந்திரன் சொல்றது..."
மாதவி சாணாட்டி ஆர்வத்துடன் கேட்டாள்:
"அப்படின்னா, திருமண விஷயம் முடிஞ்சிடுச்சா?"
"முடிவாகல. ரவீந்திரனுக்குப் பொருத்தமான பொண்ணைப் பார்க்குற பொறுப்பை என்கிட்டதான் ஒப்படைச்சிருக்காங்க. அழகு இருக்கணும். நல்ல குடும்பத்துல பிறந்த பெண்ணாக இருக்கணும் என்பது கொச்சப்பன் முதலாளியின் கறாரான எண்ணம். அதனால்தான் நான் இங்கே வர முடிவெடுத்தேன்."
"சங்கரப்பிள்ளைக்கு தேநீர் கொடுக்க வேண்டாமா மாதவி?"- வாசுப்பணிக்கன் கேட்டார்.
"நான் போயி தேநீர் போட்டு எடுத்துட்டு வர்றேன்"- சாணாட்டி போக முற்பட்டாள்.
"வேண்டாம்... வேண்டாம்.. நான் தேநீர் குடிச்சிட்டுத்தான் வந்தேன். நான் சீக்கிரமா அங்கே போகணும். உங்க ரெண்டு பேரையும் பார்த்து இந்த விஷயத்தைச் சொல்ணும்ன்றதுக்காகத்தான் நான் இங்கே வந்தேன்."