மூன்று சீட்டுக்காரனின் மகள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6498
முட்டாள் முத்தபாவிற்கு மூளை இருக்கிறதா? இந்தத் தொழில் செய்ய வேறு என்ன மூலதனங்கள் வேண்டும்? சாதாரணமாக பாக்கெட்டிற்குள் கையை விட்டு பொருட்களை அடிப்பதற்கு கட்டாயம் வேண்டியது மகா துணிச்சல். அதோடு நீளமான மெலிந்த விரல்களும், பெரிய ஒரு சால்வையும். அவற்றை வைத்துக் கொண்டு பொதுமக்கள் மத்தியில் நடக்க வேண்டும். கோஷங்களோ, வாய் பேச்சோ எதுவுமே இங்கு தேவையில்லை. முழுமையான நிசப்தம்தான் இங்கு அவசியத் தேவை. இருந்தாலும், கவனம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். பிறகு... எப்போதும் பொதுமக்களுடன் இரண்டறக் கலந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தத் தொழிலைச் செய்யவே முடியாது. பொதுமக்களுடன கலந்து சங்கமமாகாமல், தனியாக, கோபுரத்தின் உச்சியில் இருந்தால் கூட இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. சரித்திர மாணவர்கள் இந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல பிக்பாக்கெட் எப்போதும் மக்களுடன் கலந்து உறவாடக் கூடியவனாக இருக்கவேண்டும். வாய் நாற்றத்தைப் பற்றியோ, வியர்வை நாற்றத்தைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் மக்களுடன் மக்களாய் கலந்து பழகத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் பொதுமக்களின் நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் அவன் பங்கு கொள்ளவேண்டும். கூட்டு வாழ்க்கை!
இதுதான் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தேவையான அடிப்படை குணம். திருமணங்கள், கூட்டங்கள், மாட்டுச் சந்தைகள், திருவிழாக்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், குஸ்தி, பந்து விளையாட்டு, இலக்கியக் கூட்டங்கள், அரசியல் மாநாடுகள், சவ ஊர்வலங்கள்- சுருக்கமாக கூறுவது என்றால் எங்கெல்லாம் பொதுமக்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் ஆரவாரம் இருக்கிறதோ, எங்கே நெருக்கம் அதிகமாக இருக்கிறதோ, அங்கே இந்தத் தொழிலைச் செய்யக் கூடிய கலைஞன் அவசியம் போய் கலந்து கொள்ள வேண்டியதுதான். கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களுடன் நெருக்கியடித்துக் கொண்டு மடியிலோ, பாக்கெட்டிலோ பணம் வைத்துள்ளவர்களை நெருங்கிப் போக வேண்டும். சால்வை நுனியால் அவர்களின் பாக்கெட்டையோ மடியையோ மூட வேண்டும். வலது கை சால்வைக்கு அடியில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை மறந்து விடக்கூடாது. கண்கள் இமைக்கக்கூடிய நேரத்தில் என்று சொல்வார்களே! அந்த நேரத்திற்குள் 'சட்புட்'டென்று பையையோ பர்ஸையோ எடுத்துவிட வேண்டும். இதை எப்படி வேகமாகச் செய்வது என்பதை ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி ஒன்றால் மட்டுமே இந்த விஷயத்தை ஒருவன் கற்றுக் கொள்ள முடியும். இது தவிர, ஒருவனுக்கு நம்பிக்கையான ஒரு உதவியாளரும் கட்டாயம் இருக்க வேண்டும்.
நாம் உள்ளேயிருந்து பிடுங்கும் பொருளை உடனே வாங்குவதற்கு ஒரு ஆள் வேண்டுமல்லவா? அவன் அதைப் பெற்றுக் கொண்டு அந்தக் கணமே இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். இந்தத் தொழிலைப் பண்ணுவதற்குத் தேவையான விஷயங்களில் முட்டாள் முத்தப்பாவிடம் இருப்பது சற்று நீளமான விரல்களும் ஒரு பழைய சால்வையும் மட்டும்தான். பொருத்தமில்லாத ஒன்று என்று சொல்வதாக இருந்தால் அவனிடம் ஒன்று இருக்கவே செய்தது. அது- அவனின் உயரம் ஆறடி இரண்டு அங்குலம் அவன்.
அதனால் எவ்வளவு பெரிய கூட்டத்தில் அவன் நின்றாலும் அவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதை யாராலும் மிக எளிதாகக் கண்டு பிடித்துவிட முடியும். அதோடு நின்றால் பரவாயில்லை,தூரத்தில் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களில் யாராவதொரு பரம துரோகி உரத்த குரலில் சத்தமாகச் சொல்லுவான்! 'டேய்,
வாழைக்குலைக்காரா! உனக்குப் பக்கத்துல உயரமா நின்னுக்கிட்டு இருக்குற ஆள் ஸ்ரீஜித் முட்டாள் முத்தபா. மடியை பத்திரமா பார்த்துக்கோ. உஷார்! உஷார்!’
கலைஞர்களுக்கு எப்படி பரிசு கிடைக்கிறது பார்த்தீர்களா? இப்படி உரத்த குரலில் சொல்வது ஊர்க்காரர்களில் யாருமில்லை. வெளியே இருந்து வந்தவர்கள். வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆட்கள். அப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்து முட்டாள் முத்தபாவிற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியே உண்டாக்கி விட்டார்கள். இது போன்ற சந்தர்ப்பங்கள் வருகிறபோது அரசியல்வாதிகள் அழைப்பதைப் போல முட்டாள் முத்தபா அப்படிப்பட்டவர்களை 'துரோகிகள்' என்றோ, 'முதுகில் குத்துபவர்கள்' என்றோ சொல்வதில்லை. மாறாக, அவர்களைப் பார்த்து அவன் புன்னகை செய்வான். வெகுளித்தனமான புன்னகை. அந்தப் புன்னகையில் யாருமே மயங்கி விடுவார்கள். ஆனால் போலீஸ்காரர்கள் மயங்குவார்களா என்ன? ஒவ்வொரு சந்தையிலும் முட்டாள் முத்தபாவிடமிருந்து போலீஸ்காரர்களுக்குப் போய் சேர வேண்டிய தொகை ரூபாய் ஒன்று. இந்த விஷயத்தில் ஊர்க்காரர்கள் போலீஸ்காரர்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் நேர்மையானவர்கள். யோக்கியர்கள். வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆட்களான போலீஸ்காரர்கள் அந்த ஊர்க்காரர்களுக்கு தேவையே இல்லை. ஆனால், போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களுக்குப் பணத்தை எப்படி கொடுக்க முடியும்? ஒன்றுமே கிடைக்கவில்லை. இதைச் சொன்னால் போலீஸ்காரர்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்களா என்ன? இருந்தாலும், முட்டாள் முத்தபாவுக்கு எதிராக சாட்சி சொல்ல எப்போதும் ஒற்றைக்கண்ணன் போக்கர் தயாராகவே இருக்கிறான்.
"அந்த முட்டாள் பயலுக்கு இன்னைக்கு பத்து ரூபா கிடைச்சது. நானே பார்த்தேன்."
அப்போது முட்டாள் முத்தபா சொல்லுவான்.
"ஒற்றைக் கண்ணன் இப்லீஸே... ஒன்ஐஸ் மங்கி... உன்னோட இன்னொரு கண்ணும் இல்லாமப் போகும்!"
இப்படித்தான் ஒற்றைக்கண் போக்கரின் முக்கியமான எதிரிகளின் முக்கிய மனிதனாக ஆனான் முட்டாள் முத்தபா. இப்படித்தான் முட்டாள் முத்தபாவின் முக்கிய எதிரிகளில் முக்கிய மனிதனாக ஆனான் ஒற்றைக் கண்ணன் போக்கர். இந்த விஷயம் பொதுவாக எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். ஊரிலேயே மிகப் பெரிய முட்டாள் பிக்பாக்கெட் அடிக்கும் முட்டாள் முத்தபாதான். ஊரில் இருக்கும் ஒரு அறிவு ஜீவி ஒற்றைக்கண்ணன் போக்கர்.
இப்படிப்பட்ட முட்டாள், இப்படிப்பட்ட அறிவு ஜீவியை மூன்று சீட்டு விளையாட்டில் தோற்கடித்தான் என்பதும், ஸைனபாவை.. ஆ!
அந்த வரலாற்றைத் தான் இனி கொஞ்சம் கொஞ்சமாகக் கூறப் போகிறேன்.
ஒரு சனிக்கிழமை. சந்தை எப்போதும் ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு மூன்று சீட்டு விளையாட்டுக்காரனான ஒற்றைக் கண்ணன் போக்கர் சந்தையில் இருக்கும் பழைமையான பூவரச மரத்தின் நிழலில் தன்னுடைய கலைத் திறமையைக் காட்ட ஆரம்பித்தான். முட்டாள் முத்தபா பொழுது நன்றாக விடிந்திருந்தும், எதுவுமே சாப்பிடாமல் இருந்தான். தேநீர் அருந்தாமல் அவனுக்கு என்னவோ போல் இருந்தது. யாரும் அந்தக் கலைஞனை ஒரு பொருட்டாக நினைத்ததாகவே தெரியவில்லை. அரை டம்ளர் தேநீர் கூட அவனுக்கு வாங்கி வந்து தர பொதுமக்களில் ஒருவர் கூட தயாராக இல்லை. ஸைனபாவைத் தேடிப் போனால் என்ன என்று நினைத்தான் முட்டாள் முத்தபா.