மூன்று சீட்டுக்காரனின் மகள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6498
மூன்று சீட்டுக்காரனின் மகள்' என்ற இந்த சரித்திரக் கதையின் மூலம் தெரிய வரும் அருமையான பாடம் என்ன என்பதை ஆரம்பத்திலேயே உங்களால் சொல்லிவிட முடியும். எனினும், பெண்களின் உடல்நலம் கருதி அதை இப்போது சொல்லாமல் இருப்பதே நல்லது. மொத்தத்தில் பெண்கள்... அவர்கள் என்ன வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி... எவ்வளவு வேகமாக முடியுமோ... அவ்வளவு சீக்கிரம் அவர்களை உலகத்தில் ஒரேயடியாக இல்லாமல் செய்துவிடுங்கள்!
இதைக் கேட்டு யாரும் திகைப்படைந்து போய் விடாதீர்கள். இது என்னுடைய சொந்தக் கருத்து என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நான் ஒன்றுமே தெரியாதவன். ஒரு பாவமும் அறியாதவன். பெண்மணிகளும் அவரின் ஆதரவாளர்களும், அவர்களை நம்பியிருப்பவர்களும் என்னோடு சண்டை போடும் நோக்கத்தில் வந்து விடாதீர்கள். என்னைத் தாக்கும் எண்ணத்திலும் வரவேண்டாம். இது விஷயமாக யாருக்காவது சண்டை போட வேண்டும் என்று தோன்றினால், நேராக ஒற்றைக் கண்ணன் போக்கரைத் தேடி போகவும். அவன்தான் இந்தச் சரித்திர கதையில் துக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் முக்கிய நாயகன். இதில் வில்லனாக வருபவன் முட்டாள் முத்தபா. ஆனால், அந்த வில்லன் ஒரு போர்வீரனாக, கதாநாயகனாக ஒற்றைக் கண்ணன் போக்கருடன் சண்டை போடும் அருமையான காட்சியை நாம் பார்க்கலாம். ஸைனபா கூட சண்டை போடுகிறாள். இவர்களைத் தவிர, ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள், பிறகு... பெரிய திருடர்களான தொரப்பன் அவறான், ட்ரைவர் பப்புண்ணி ஆகியோரும் கூட இருக்கிறார்கள். அவர்கள் இப்போது ஊரில் இல்லை. கிட்டத்தட்ட அவர்களின் தொழிலைச் செய்பவர்கள்தான் தங்கச் சிலுவை தோமாவும், யானைவாரி ராமன்நாயரும் (இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நான் எழுதிய 'யானைவாரியும் தங்கச் சிலுவையும்' என்ற சரித்திரத்தைப் படிக்க வேண்டும். இவர்களும் பெயர் பெற்ற திருடர்கள்தான். அவர்களின் சீடனான எட்டுகாலி மம்மூந்து, பிறகு... அவர்களின் வேறு சில ரசிகர்கள்... இவர்கள் தவிர, ஊரில் இருக்கும் இரண்டாயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்... அவர்கள் எல்லோருமே பொதுவாக அமைதியாக வாழ விரும்புபவர்கள்தாம். போர்க்குணம் கொண்ட மனிதர்கள் அல்ல அவர்கள். இவ்வளவு விஷயங்களையும் உலகத்தில் உள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்த வரலாற்று ஆசிரியனின் விருப்பம். பிறகு...மேலும் விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்தச் சரித்திரத்தில் வரும் ஊர்க்காரர்கள் இல்லாமல் ஆண்களும் பெண்களுமென ஒரு இரண்டாயிரத்து அறுநூறு பேர் வருவார்கள். அவர்கள் இந்தச் சரித்திரத்தில் செவ்வாய்க் கிழமையும் சனிக்கிழமையும் மட்டுமே வருவார்கள். அவர்கள் வருவது சந்தைக்குத்தான். வாங்குவதற்கும் விற்பதற்கும்... பொதுவாக அவர்கள் வந்தாலே ஊர் பயங்கரமான ஆரவாரத்தில் மூழ்கி விடும். எங்கு பார்த்தாலும் ஒரே குரல்கள் மயம்தான்...
அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து வேலை செய்யும் இரண்டு கலைஞர்கள்தான் மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கரும், பிக்பாக்கெட் அடிக்கும் முட்டாள் முத்தபாவும்.
ஸைனபாவும் பொதுமக்களில் ஒருத்திதான் என்றாலும், அவளை பொதுமக்களுடன் சேர்த்துப் பார்க்க முடியாது. அவளின் கலைகள் எல்லாம் மிக மிக ரகசியமானவை. அவள் என்ன செய்தாள்?
அதை நினைத்துப் பார்த்தால் யாரின் கண்ணும் வெளியே வந்து விடும். பெண்களில் ஒருத்தியையாவது நம்ப முடியுமா? தந்தைமார்களின் திட்டங்களை ஏன்தான் இவர்கள் ஒன்றுமே இல்லாமல் அடித்து நொறுக்குகிறார்களோ தெரியவில்லை.
ஹா! தந்தைமார்களின் கஷ்டம் என்னவென்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா?
இது எல்லாமே ஒற்றைக் கண்ணன் போக்கரின் கேள்விகள். இதற்கு நாம் என்ன பதில் சொல்வது?
இந்தக் கதையை எழுதும் சரித்திர ஆசிரியனான நான் இதில் வரும் எல்லோருடனும் பேசிப் பார்த்தேன். ஆரம்பத்தில் என்னுடைய தார்மீக ஆதரவை சிலருக்குத் தரவும் செய்தேன். யாருக்கு என்கிறீர்களா? மொத்தத்தில் விஷயம் லேசானதல்ல. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்தது. வரலாற்று மாணவர்களுக்காக அந்தச் சரித்திரத்தை நான் இங்கு எழுதுகிறேன்.
ஒற்றைக் கண்ணன் போக்கரிடமிருந்து சரித்திரத்தை ஆரம்பிப்போம். அவனுக்கு இருப்பது ஒரே ஒரு கண்தான். 'ஒன் ஐஸ் மங்கி' என்று ஊரில் இருக்கும் சில அறிவுஜீவிகள் அவனைப் பற்றி ரகசியமாகக் கூறுவதுண்டு. பரவாயில்லை.மற்றொரு கண்ணை அவன் இளம் பிராயத்தில் இருந்தபோது ஏதோ ஒரு தர்ம சண்டையில் இழந்து விட்டிருக்கிறான். அவனுக்கு இப்போது நடப்பது நாற்பத்தொன்பது வயது.ஆள் பார்க்க வெள்ளையாக இருப்பான். அவனுடைய வாயில் எஞ்சி இருக்கும் பற்களின் நிறம் என்ன என்பதை யாராலும் கூற முடியாது. வெற்றிலை போட்டுப் போட்டு அந்தப் பற்கள் எல்லாம் காவி வண்ணத்தில் இருக்கும். ஒற்றைக் கண்ணன் போக்கரை பொதுவாக எல்லோருமே மூன்று சீட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கர் என்றுதான் அழைப்பார்கள்.
இவ்வளவு விஷயங்கள் கூறியதிலிருந்து மேற்சொன்ன நபரின் செல்ல மகள்தான் ஸைனபா என்ற உண்மையைச் சரித்திர மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? அவளுக்கு இப்போது நடப்பது பத்தொன்பது வயது. ஊரிலேயே நல்ல அழகி அவள்தான். அவளை நல்ல ஒரு இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒற்றைக் கண்ணன் போக்கர் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தான். சமீபத்தில் அவன் கையில் ரொக்கம் என்று நூற்று இருபது ரூபாய் இருந்தது.
அந்தப் பணம் எங்கே போனது? அந்தக் கதையையும் பின்னால் நான் இங்கு எழுதுகிறேன்.
ஸைனபா அந்தப் பணத்தை எடுக்கவில்லை என்ற உண்மையை முன் கூட்டியே கூறி விடுகிறேன். தங்கச்சிலுவை தோமாவும் அதை திருடவில்லை. யானைவாரி ராமன் நாயரும் திருடவில்லை. எட்டுகாலி மம்மூந்தும் திருடவில்லை. சொந்தத்தில் சொத்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடன்பாடு இல்லாத மனிதர்கள் அவர்கள். அவர்களின் தொண்டரடிப் பொடிகள் கூட்டம் கூட அதைத் திருடவில்லை. ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள் கூட அதை எடுக்கவில்லை. பிறகு யார்தான் திருடியது? ஸ்ரீஜித் முட்டாள் முத்தபாவா?
யாரும் அந்தப் பணத்தைத் திருடவில்லை என்று உறுதியான குரலில் கூற முடியும். அப்படியென்றால் அந்த நூற்று இருபது ரூபாய் எங்கே போனது? அதைப் பின்னால் சொல்கிறேன்.
இப்போது சரித்திரத்தை பெரும் மதிப்பிற்குரிய முட்டாள் முத்தபாவிடமிருந்து ஆரம்பிப்போம். அவன் வயது இருபத்தொன்று. ஆள் நல்ல கருப்பாக இருப்பான். லேசாக மாறுகண் இருக்கும். இருந்தாலும் முட்டாள் முத்தபாவின் வெள்ளைப் பற்களால் ஆன சிரிப்பு எல்லோருக்குமே பிடிக்கும். ஸைனபாவைப் போலவே அவனுக்கும் உம்மா இல்லை.