சசினாஸ் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
மாளிகையின் முற்றத்தில் நிலவொளியில் ஒரு பெண் உருவம்! காற்றில் சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த தலை முடி, மிருதுவான வெண்மை நிற ஆடையால் மூடப்பட்ட உடம்பு... சசினாஸ்! அவள்தான் நிலவொளியில் நின்றிருந்தாள்! அவளிடமிருந்து புறப்பட்டு வந்த நறுமணம்தான் என்னிடம் இதுவரை வந்து சேர்ந்தது.. நான் அவளையே பார்த்தேன். மனதில் ஒரே பதைபதைப்பு. வேதனை அதிகமாகக் குடிகொள்ள, நான் மதிலைத் தாவிக் கடந்தேன். கீழே கிடந்த காய்ந்து போன இலைகள் மீது 'கிருகிரா' என சத்தம் வருமாறு நடந்து சென்றேன். ஒருவித நடுக்கத்துடன் கனவுகள் காணும் அந்த கண்கள் என்னை நோக்கித் திரும்பின. நான் ஒரு வித கலக்கத்துடன் அவள் முன் போய் நின்றேன்.
"என்ன?"
அவளின் கேள்வி என்னை எரிச்சலடையச் செய்தது. என் இதயம் கட்டுப்பாட்டை இழந்தது.
"சசினாஸ்... சசி...னாஸ்! நான் வெந்து சாகுறேன்.. காதலால். தயவு செஞ்சு.. தயவு செஞ்சு... சொல்லு. என்னை நீ காதலிக்கிறேல்ல? என் சசி.. னாஸ்...சொல்லு..."
நான் அவளின் பாதங்களில் விழுந்து வணங்கினேன். என் கண்ணீரால் அவளின் கால்களை நனைத்தேன். அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அடுத்த நிமிடம் அவள்
குனிந்தாள். அவளின் மார்பகங்கள் என் தலை மீது பட்டு உரசின. அவள் என்னைப் பிடித்து தூக்கினாள். குளிர்ச்சியான அந்த ஸ்பரிசம்! அவளுடைய முகம் ஏனோ வெளிறிப் போயிருந்தது. அந்தக் கண்களில் என்னவோ ஒரு கவலை நிழலாடிக் கொண்டிருந்தது. அவள் கீழே உட்கார்ந்தாள். நானும் உட்கார்ந்தேன். இதயத்தில் கையை வைத்தவாறு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சசினாஸ் மெதுவான குரலில் சொன்னாள்.
"நான் யாருன்னோ எப்படிப்பட்ட பெண்ணுன்னோ உங்களுக்குத் தெரியுமா?"
நான் இடையில் புகுந்து தடுத்தேன்.
"சசினாஸ்! எனக்குத் தெரிய வேண்டாம். என்னை நீ காதலிச்சா போதும்... என்னைக்கும் காலாகாலத்திற்கும்..."
வேகமாக மூச்சு விட்டதால் அவளின் மார்பகங்கள் இடைவிடாது உயர்வதுமாய் தாழ்வதுமாய் இருந்தன. என் இரண்டு கைகளையும் தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டு, என் கண்களை கனிவுடன் பார்த்தவாறு அவள் கேட்டாள்.
"தெரியுமா? நான் எப்படிப்பட்ட பெண்ணுன்னு..."
"தெரியாம என்ன? அழகான... பிரகாசமான மென்மையான புதிய பனி நீர் சொறியும் மலர்... என்னுடைய உயிரான சசி...னாஸ்!"
அவளின் உள்ளங்கையில் நான் முத்தம் பதித்தேன். அவளின் கைகள் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.
"சசினாஸ்! என்னை நீ காதலிக்கிறியா?"
கண்களில் நீர் வழிய, நான் தலையை உயர்த்தினேன். அவளின் துடித்துக் கொண்டிருந்த சிவந்த அதரங்களையும் கனவுகள் நிழலாடிக் கொண்டிருந்த கண்களையும் நான் பார்த்தேன்.
என் கண்களில் கண்ணீர் துளிகள் கீழே விழும் நிலையில் இருந்தன. லேசாக பதறிய குரலில் அவள் சொன்னாள்.
"சரி... போயி தூங்குங்க... நாளைக்கு நான் எல்லாத்தையும் சொல்றேன்."
அவள் எழுந்தாள். ஒரு வித ஏமாற்றத்துடன் நானும் எழுந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஒரு சிறு குழந்தைப்போல எண்ணி என் கண்களை அவள் துடைத்து விட்டாள். என் கண்களைப் பார்த்து புன்னகைத்தவாறு அவள் சொன்னாள்.
"நாளைக்குச் சொல்றேன்... என்ன?"
"ம்..."
"சரி... போய் தூங்குங்க... நாளைக்கு..."
மனதில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல்... அதே நேரத்தில் சந்தோஷத்துடன் நான் மெதுவாக நடந்தேன். திரும்பிப் பார்த்தேன். சசினாஸ் வாசல் படியின் அருகில் நின்றிருந்தாள். இரண்டு கதவுகளையும் பிடித்தவாறு அவள் புன்னகை செய்தாள். நாங்கள் அப்படியே ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றோம். சிறிது நேரம் சென்றது. அந்தக் கதவு அடைக்கப்பட்டது.
வெளி மதிலைத் தாண்டி நான் அறைக்குள் வந்தேன். கதவை அடைத்தேன். ஜன்னல் வழியே பார்த்தேன். தெளிவில்லாமல் அவளை அந்த ஜன்னல் மூலம் பார்க்கலாம். சிறிது நேரம் கழித்து அதுவும் இல்லாமல் போனது.
நான் ஜன்னலை அடைத்தேன்.
'நாளைக்கு... நாளைக்கு...' - இப்படி மனதிற்குள் சொல்லியவாறு மன அமைதியுடன் நான் உறங்கினேன். இங்குமங்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் வெண்மையான மேகங்களைத் தாண்டி, எண்ணற்ற நட்சத்திரங்களைத் தாண்டி, நிலவைத் தாண்டி மலர்ந்து அழகு காட்டிக் கொண்டிருந்த மலர்கள் நறுமணத்தைப் பரவச் செய்ய, அதை முகர்ந்தவாறு நான் நடந்து செல்கிறேன். மெல்லிய வெண்ணிற ஆடை அணிந்த ஒரு அழகு தேவதை என்னுடன் இருக்கிறாள். சசினாஸ்... அவளின் மயக்க வைக்கும் உடலழகை மெல்லிய ஆடைகள் வழியே தெளிவாகப் பார்க்கலாம். அவளை அப்படியே இறுகக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை நெருங்குகிறேன். அழகான ஒரு சிரிப்புடன் அவள் என்னைப் பிடித்து பின்னால் தள்ளுகிறாள். நான் மல்லாக்க விழுகிறேன். சிரித்தவாறு நான் கண்களைத் திறந்தேன். பகல் பதினொரு மணி ஆகியிருந்தது!
"இன்னைக்குத்தானே அந்த நாளை..."- நான் வேகமாக படுக்கையை விட்டு எழுந்தேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகக் குளித்து முடித்தேன். வேக வேகமாக ஆடைகளை அணிந்தேன். பரபரப்புடன் காபியைக் குடித்து விட்டு, வேகமாக நடந்தேன். மூடப்பட்டிருந்த கதவைத் தட்டினேன்.
"சசினாஸ்! சசி... னாஸ்!"
ஒரு பதிலும் இல்லை. வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து தொண்டையே கிழிந்து விடும் அளவிற்கு கத்தினேன்.
"சசி....நாஸ்!"
ஒரு சிறு அசைவு கூட இல்லை. என்ன நடந்தது? ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அந்த மாளிகை கம்பீரமான மௌனத்துடன் இருந்தது. பதைபதைப்பும் ஏமாற்றமும் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன. நான் வேகமாக ஓடிப்போய் வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்தேன். அவர்கள் அதிகாலையிலேயே இங்கிருந்து போய் விட்டார்களாம்! எங்கு போனார்கள் என்பது அவருக்குத் தெரியாதாம்!
எனக்கு உலகமே இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது. இனம் புரியாத சூனியம் என்னை ஆட்கொண்டு விட்டதைப் போல் உணர்ந்தேன். என் இதயம் தேம்பித் தேம்பி அழுதது.
உயிரோட்டம் இல்லாத பகல்களும், தனிமையும் பயங்கரமும் நிறைந்த இரவுகளுமாக... வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கஷ்டங்களின் கொடுங்காற்று என்னை நோக்கி வீசத் தொடங்கியது. ஹோட்டலின் கடன், குடியிருக்கும் அறை வாடகை... கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. உலகம் கருணையே இல்லாமல் என்னைக் கொல்ல வருகிறதோ? பார்க்குமிடங்களில் எல்லாம் அவளின் பெயர்தான் தெரிந்தது. அதைப் பார்த்தபோது மனதிற்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சசினாஸ் முத்தம் தந்த அந்த மலர்... அவளின் கண்ணீர் விழுந்து வாடிப் போயிருக்கும் அந்த ரோஜா மலர்...