சசினாஸ்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
குபேர புத்திரனாக வளர்ந்து, வறுமை சூழ்ந்த ஒரு இளைஞனாக வாழ்க்கைப் பாதையில் நான் இறங்கி நடந்தேன். தாங்க முடியாத கொடுமையான தனிமையில், மனம் முழுக்க கவலைகள் ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த என்னுடைய இருபத்து இரண்டாவது வயது. பள்ளி இறுதி வகுப்பு முடித்து அதில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைக் கையில் வைத்துக் கொண்டு வேலை தேடி ஒவ்வொரு அலுவலகத்தின் படியாக ஏறி இறங்கி விரக்தியடைந்து நான் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
மக்கள் ஏராளமாக நடமாடிக் கொண்டிருக்கும் நகரத்திற்கு வெளியே தென்னை மரங்கள் வானளவிற்கு உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நிலத்தின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டில் தான் நான் வசித்துக் கொண்டிருந்தேன். நானிருக்கும் அறைக்கு அடுத்து மேற்குப் பக்கமாய் இருக்கும் ஜன்னலைத் திறந்தால் அமைதியான ஒரு வெளிச்சுவரைப் பார்க்கலாம். அதற்குள் எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்ட, கம்பீரமான மவுனத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு இரண்டு மாடி கட்டிடம். எப்போதும் அங்கு ஒரே அமைதி நிலவிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு பறவையின் ஓசையைக் கூட கேட்க முடியாது. ஒரு காட்டின் மவுனம் அங்கு இருப்பதை நம்மால் உணர முடியும். அந்த தாங்க முடியாத அமைதி மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கும். என் மனதில் ஏற்கனவே கவலைகள் அளவுக்கு மேல் ஆக்கிரமித்து விட்டிருந்ததால், மேற்குப் பக்கம் இருந்த அந்த ஜன்னலை பொதுவாக நான் திறப்பதேயில்லை.
இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. கோடை காலத்தின் ஒரு மதிய நேரம். ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு நான் வேக வேகமாக ஒரு மனு எழுதிக் கொண்டிருந்தேன். என் பேனாவின் 'கரகரா'சத்தம் அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதியை இலேசாக கலைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு சத்தம். ஒரு மணியோசை போன்ற சிரிப்பு. எங்கேயிருந்து அது வருகிறது என்று காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு கவனித்தேன். இனிமையான அந்தச் சிரிப்பு அதற்குப் பிறகும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.
ஆவலுடன் நான் எழுந்தேன். ஜன்னலை வேகமாகத் திறந்தேன். என்ன ஆச்சரியம். அந்த பெரிய கட்டிடம் புன்னகை தவழ நின்றிருந்தது. ஜன்னல்கள் நன்றாகத் திறந்து விடப்பட்டிருந்தன. வெள்ளை நிறத்தில் திரைச்சீலைகள் ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருந்தன. சமையறையில் இருந்து நீல நிறத்தில் புகை வந்து கொண்டிருந்தது. ஆட்களின் சத்தம். எங்கும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
என் கண்கள் இங்குமங்குமாய் ஆர்வத்துடன் அலைந்தன. ஒரு நிமிடத்தில் என் விழிகள் ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டன. மேல் மாடியில், நடுவில் இருக்கும் ஜன்னலில், வெள்ளை நிற திரைச்சீலைக்கு மேலே மஞ்சள் கரை போட்ட கறுப்பு வர்ணத்தில் புடவையும், வெள்ளை ப்ளவுசும் அணிந்த ஒரு அழகு தேவதை.
வெள்ளை வகிடு எடுத்து வாரப்பட்ட தலையில் ஒரு பக்கம் சுருண்டு காணப்படும் முடியும், நிலவென பிரகாசமாக தெரியும் அவளின் முகமும்.
இதயம் படபடவென அடிக்க, நான் நின்றேன். ஒரு வகை அமைதியுடன் பிரகாசமாக இங்குமங்குமாய் நகர்ந்து கொண்டிருந்த கனவுகள் குடியிருக்கும் அந்தக் கண்களை என் மனதில் பதிய வைப்பதற்கு நான் படாதபாடு பட்டேன். அதிக சத்தம் செய்யாமல் வெறுமனே இருமினேன். திடுக்கிட்டாலும் போல அந்தக் கண்கள் திரும்பிப் பார்த்தன. கறுத்து, வளைந்து காணப்பட்ட புருவம் இலேசாக உயர்ந்தது. கண்ணிமைக்கும் நேரம் அவளின் பார்வை என் மீது படிந்தது. அவ்வளவுதான் - என் இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டது. பிரகாசத்தை ஒளிர்ந்து கொண்டிருந்த அவளின் இரண்டு விழிகளும் என் கண்கள் வழியே இதயத்திற்குள் நுழைந்ததைப் போல் உணர்ந்தேன். மூச்சு விடக்கூட மறந்து ஒரு சிலையைப் போல நான் செயலற்று நின்று விட்டேன். அடுத்த நிமிடம் அந்த முகம் மறைந்தது. யாருமே இல்லாத ஜன்னல். இலேசாக ஆடிக் கொண்டிருந்த வெள்ளை நிற திரைச் சீலைகள். கறுத்து உருண்டு காட்சியளிக்கும் நீளமான இரும்புக் கம்பிகள்.
அந்த வனதேவதையை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று என் கண்கள் அலைபாய்ந்தன. நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தன. வெயியே கொடிகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த மாமரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு வெள்ளைப்புறா தன் ஜோடியை அழைத்து அதோடு சேர்ந்து இன்பத்தில் ஈடுபட்டிருந்தது. எதிர்பார்ப்புடன் நான் அந்த வெறுமையாக இருந்த ஜன்னலையே பார்த்தவாறு ஒரு தூணைப்போல நின்றிருந்தேன்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடியிருக்கும். அவள் வந்தாள். என்னைப் பார்த்தாள். அடுத்த நிமிடம் மறைந்தாள். நான் நின்றேன். நின்று நின்று கால்கள் பயங்கரமாக வலித்தன. நான் அந்த இடத்தை விட்டு நகர்வதாய் இல்லை. எனக்கு என்னவோ ஆகிவிட்டது. அது மட்டும் நிச்சயம். தாகம் இல்லை. பசி இல்லை. மொத்தத்தில் ஒரு ஆர்வம்.
நான்கு மணி கடந்திருக்கும். நிழல் போல அவள் அசைவதை ஜன்னல் வழியாக நான் பார்த்தேன். படியைக் கடந்து ஒரு ரிக்க்ஷா வண்டியில் ஏறி அவள் வேகமாக எங்கோ போனாள். காற்றில் பறந்து கொண்டிருந்த கருப்பு வண்ண புடவைத் தலைப்பும் அழகான கழுத்தின் ஒருபகுதியும் நன்றாக வாரி கட்டப்பட்டிருந்த தலை முடியும் கொஞ்சம் கொஞ்சமாக என் பார்வையை விட்டு மறைந்தன. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் உண்டானது போல் இருந்தது. எல்லாமே என்னை விட்டு போய் விட்டதைப் போல் உணர்ந்தேன். இருளடைந்து விட்டது மாதிரி தோன்றியது எனக்கு. வாய்விட்டு உரக்க அழவேண்டும் போல் இருந்தது.
பெருமூச்சு விட்டவாறு பாதி எழுதி வைத்திருந்த மனுவைக் கையில் எடுத்தேன். அதற்கு மேல் எதுவும் எழுத எனக்கு உற்சாகம் இல்லை. மனதில் ஒரே கோபம் கோபமாக வந்தது. அதே நேரத்தில் இனம் புரியாத ஒரு வெறுப்பும்... எரிச்சலுடன் அந்த மனுவைக் கசக்கி முற்றத்தில் விட்டெறிந்தேன். அறையைப் பூட்டிவிட்டு வெளியே இறங்கினேன். பாக்கு மரத்தோடு சேர்ந்து இருந்த மாமரத்தின் கிளையில் இருந்த இரண்டு புறாக்களும் தங்களுக்குள் என்னவோ ரகசிய குரலில் பேசிக் கொண்டிருந்தன. கருப்பு நிறத்தில் இருந்த புறா வெள்ளை வண்ணப் புறாவின் தலையில் தன்னுடைய சிறிய உதடுகளால் என்னவோ செய்தது. அதைப் பார்த்து எனக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து எறிந்தேன். அவ்வளவுதான் - புறாக்கள் இரண்டும் அடுத்த நிமிடம் இடத்தை விட்டுப் பறந்தன.