சசினாஸ் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
அந்தப் புலியைப் போன்ற பெண் வாசல் கதவோரத்தில வந்து நின்றாள். அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை அவள் பார்வையில் இருந்தே தெரிந்து கொண்டேன். அவளின் முகத்தில் கொஞ்சம் கூட அன்பின் வெளிப்பாடு தெரியவில்லை. அவள் சசினாஸை அழைத்து சாப்பாட்டு விஷயத்தைப் பற்றியோ இல்லாவிட்டால் வேறு ஏதோ விஷயத்தைப் பற்றியோ சொல்லி விட்டு அடுத்த நிமிடம் மறைந்து போனாள். நான் புறப்படலாமென்று எழுந்தேன். அவள் என்னைப் பார்த்து சொன்னாள்.
"சாப்பிட்டுட்டுப் போகலாமே!"
அவள் அப்படிச் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் மரியாதை காரணமாக நான் அதை நிராகரித்தேன்.
"சொன்னதற்கு ரொம்ப மகிழ்ச்சி. நான் புறப்படுகிறேன்"
"ஏன்?"
"ஒண்ணுமில்ல..."
ஒருவகை ஏக்கத்துடன் அவளின் முகத்தைப் பார்த்த நான் படிகளில் இறங்கினேன். "வந்த விஷயத்தைச் சொல்லலையே!"
பாதிப்படிகளில் நின்றவாறு, நான் மேலே பார்த்தேன்.
"நான் வந்த விஷயமா?"
"ஆமா..."
என் மனதில் கவலை தோன்றியது. நான் அழுகிற குரலில் சொன்னேன்.
"சும்மாதான் வந்தேன்..."
"சும்மாவா?"
அவள் புன்னகைத்தாள். அந்தக் கண்கள் படு பிரகாசமாக இருந்தன. அவற்றில் ஏதோ ஒன்று வெளிப்படுவதைக் கண்டேன். அதைப் பார்த்து என் இதயம் குளிர்ந்தது. உதடுகளில் புன்னகை தவழ, நான் படிகளில் இறங்கி வெளியே வந்தேன். வெளியே நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் வெயிலில் நான் மகிழ்ச்சியுடன் நடந்தேன்.
ஒவ்வொரு நாளும் நான் அங்கு போவேன். நான் அங்கு சென்று பேசிக் கொண்டிருக்கும் நிமிடங்களில் சசினாஸ் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பதாக எனக்குப் பட்டது. நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். தான் போயிருக்கும் இடங்களில் உள்ள சிறப்புச் செய்திகள் பலவற்றையும் சசினாஸ் என்னிடம் கூறுவாள். இப்படியே நாட்கள் படுவேகமாக நீங்கிக் கொண்டிருந்தன.
ஒரு நாள் காலையில் பூங்காவைத் தாண்டி நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, புதிதாக மலர்ந்திருந்த பன்னீர் பூவின் வாசனை என்னை மிகவும் கவர்ந்தது. உயர்ந்து நிற்கும் கம்பி வேலிக்கு அப்பால் பெரிதாக வளர்ந்திருக்கும் செடிகளில் கொத்துக் கொத்தாக மலர்ந்து நிற்கும் ரோஜாச் செடிகளைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் சசினாஸைப் பற்றி எனக்கு நினைவு வந்தது. யாரும் பார்க்காதபடி நான் கம்பி வேலியின் மேல் ஏறி சில ரோஜாப் பூக்களைப் பறித்துக் கொண்டு வெளியேறினேன். கம்பிவேலி பட்டு என் சட்டையின் கைப்பகுதியில் லேசாக கிழிசல் உண்டானது. உடம்பில் லேசாக கீறிவிட்டது. விளைவு- அந்த இடத்தில் இரத்தம் வந்தது. ஒரு பச்சை இலையில் அந்த மலர்களை வைத்துச் சுற்றி, அவற்றை எடுத்துக் கொண்டு போனேன். சசினாஸ் ஒரு புத்தகத்தைப் படித்தவாறு ஜன்னலின் அருகில் நின்றிருந்தாள். நான் வரும் ஓசை கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
"என்ன இலையில பொட்டலமா கட்டி கொண்டு வர்றீங்க?" லேசாக தயங்கியவாறு நான் சொன்னேன்.
"சசி... னாஸ்..."
"சசினாஸ்?"
"ஆமா... புதிய ரோஜா மலர்கள்..."
நான் பொட்டலத்தைத் திறந்து காண்பித்தேன். அவளுடைய முகம் வியப்பால் விரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் மலர்களுடன் அவளை நெருங்கினேன். அவள் அதை வாங்கி முகத்தில் ஒற்றிக் கொண்டாள். அதைப் பார்த்து என் இதயம் வேகமாகத் துடித்தது. பூக்களில் முகத்தை அமர்த்திக் கொண்டு அவள் ஏக்கத்துடன் அழுவது போல் எனக்குப்பட்டது. அவள் முகத்தை உயர்த்தினாள். அவளின் கண்கள் நனைந்திருந்தன. முகம் சற்று வெளிறித் தெரிந்தது. மீண்டும் புன்னகையைத் தவழவிட்டபடி அவள் நாற்காலியில் போய் அமர்ந்தாள். இலையைப் பிரித்து மடியில் வைத்தபடி, ஒரு ரோஜா மலரை எடுத்து என்னை நோக்கி நீட்டினாள். என் இதயம் என் கை வழியே இறங்கியதைப் போல் உணர்ந்தேன். நான் அந்தப் பூவை வாங்கி இரண்டு கண்களிலும் வைத்து, அதற்கு ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் என் கையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சட்டை கிழிஞ்சிருக்கே! இரத்தம் வேற வருதே!"
அவள் எழுந்து என்னருகில் வந்தாள். நான் என் கையை அவள் முன் நீட்டினேன். லேசாகக் கீறியிருந்த இடத்தில் இரத்தம் வெளியே கசிந்து கொண்டிருந்தது.
"இது எப்படி வந்துச்சு?"
அதைப் பற்றி கவலைப்படாத குரலில் நான் சொன்னேன்.
"ஓ... பூவைப் பறிக்கிறதுக்காக ஏறினப்போ, கம்பிவேலி கீறிவிட்டிருச்சு..."
அவள் உள்ளே போய் என்னவோ ஒரு ஆயின்மென்ட்டை எடுத்துக்கொண்டு வந்து என் கையில் தடவி விட்டாள். என் உடம்பு முழுக்க இப்படி கீறி விட்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று அப்போது நினைத்தேன். அதற்காக நான் வருத்தப்படவும் செய்தேன். எனக்கு எங்கே மயக்கம் வந்து விடப்போகிறதோ என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அப்படியே அவளின் உடல் மேல் சாய்ந்து விழ வேண்டும் போல் இருந்தது. எந்த அளவிற்கு இதய பூர்வமாக அவள் என் கையை தடவுகிறாள்!
இனிமேல் இப்படி கம்பிவேலி மேல் ஏறி இப்படிப்பட்ட காரியங்களை நான் செய்யக்கூடாது என்ற அறிவுரையுடன் என்னை அவள் அனுப்பினாள். சசினாஸ் தந்த மலரை நான் ஒரு புத்தகத்திற்குள் வைத்தேன். அறையின் வெண்மை நிற சுவரில் சசினாஸ்.. சசி.. னாஸ் என்று கருப்பு பென்சிலால் எழுதி வைத்தேன். கண்ணால்
பார்க்குமிடங்களில் எல்லாம் அவளின் பெயர் இருக்கும். உறங்கிப் போவதற்கு முன் கடைசியாகவும், தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது முதலாவதாகவும் என் கண்களில் படுவது அவளாக இருக்க வேண்டும்.
இதயத்தைத் திறந்து சசினாஸிடம் காட்டுவதற்கு நான் பலமுறை முயன்றேன். அப்போதெல்லாம் அவள் வேறு ஏதாவது விஷயங்களைப் பற்றி பேசி நான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமலே போய்விடும். மனதிற்குள் புழுங்கிப் புழுங்கியே நான் ஒரு மாதிரி ஆகிவிடுவேன் போல் இருந்தது.
நிலவு காய்ந்து கொண்டிருந்த ஒரு அமைதியான இரவு. அழுது கொண்டிருக்கும் இதயத்துடன் முற்றத்தில் நின்று கொண்டிருந்தேன். உஷ்ணமே இல்லாத பகல் நேரத்தில் தெரிவதைப் போல மரங்களும் செடிகளும் மற்ற பொருட்களும் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தன. நட்சத்திரங்கள் நிலவுடன் போட்டி போடுவதைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன. நிர்மலமான ஆகாயத்தில் மேற்குப் பக்க விளம்பில் சில மேகங்கள் எட்டி பார்த்துக் கொண்டிருந்தன. அமைதியாக தவழ்ந்து வந்து என் மேல் மோதிய இளம் காற்றில் கலந்திருந்த நறுமணத்தை நாசிக்குள் இழுத்தவாறு நான் தலையை உயர்த்திப் பார்த்தேன்.