சசினாஸ் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
நான் எறிந்த கல் இலைகள் வழியாக அடுத்த வீட்டின் மேல் போடப்பட்டிருந்த ஓடுகள் மேல் போய் விழுந்தது. நீருண்டு கிடந்த ஒற்றையடிப் பாதை வழியாக நான் சாலையை அடைந்தேன். எங்கு போகிறோம் என்று தெரியாமலே நடந்தேன். ஒரு இலட்சியமும் இல்லை. மக்களின் ஆரவாரமும் வண்டிகளின் சத்தமும் ஏதோ கனவில் கேட்பதைப் போல என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. நடந்து நடந்து கடைசியில் கடற்கரையை அடைந்தேன்.
நீல வண்ண விரிப்பைப் போல கடல் எந்தவிதமான அசைவும் இல்லாமல் பரந்து கிடந்தது. மேற்கு திசையில் ஆகாயம் கடலில் முத்தமிடுகிற இடத்தில் செக்கச் செவேர் என்று சூரியன் எரிந்தவாறு கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று என் தலையில் பட்டு ஒருவித சுகமான அனுபவத்தைத் தந்தது. கடற்கரையின் வெண்மையான மணலில் ஆங்காங்கே ஆட்கள் சிதறிப் போய் உட்கார்ந்திருந்தார்கள். நான் யாரும் உட்காராத ஒரு தனிமையான இடத்தில் போய் உட்கார்ந்தேன். சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த சிரிப்புச் சத்தங்களிலும், சந்தோஷ வெளிப்பாடுகளிலும், ஆரவாரங்களிலும் என் கவனம் செல்லவில்லை. என் கண்கள் வெறுமனே இங்குமங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது நான் பார்த்தேன் - தூரத்தில் வெள்ளை வெளேர் என்றிருந்த சர்க்கரை மணலில் தனியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்! மஞ்சள் கரை போட்ட கருப்புப் புடவை!
இதயம் படபடவென்று அடிக்க, நான் நடந்து அவளின் அருகில் சென்றேன். ஹா.. அவளேதான்! என் இதயத்தில் இடத்தைப் பிடித்த அந்த மோகினிதான்! அவளின் அழகு முகத்தில் விழுந்த தலைமுடியை வலது கரத்தால் தள்ளிவிட்ட அவள் இடதுகையில் பிடித்திருந்த புத்தகத்தைக் கண்களால் மேய்ந்து கொண்டிருந்தாள். கருப்பு வண்ண புடவைக்கு சரியான மாற்றைப் போல அவள் அணிந்திருந்த தூய வெள்ளை நிற ப்ளவுஸின் வலது பக்கம் இலேசாக முன்புறமாக உயர்ந்து தெரிந்தது. இளம் சிவப்பு வண்ண நீள முகம் அவளுக்கு.
லேசாகப் பட்டாலே சரிந்துவிடக்கூடிய மணலில் இங்கும் அங்குமாய் இரண்டு மூன்று முறை நடந்தேன். அவளின் இடையைப் பார்த்தேன் - மிகவும் அழகாக இருந்தது. அருமையான ஒரு வாசனை காற்றில் மிதந்து வந்தது. எனக்கு பைத்தியம் பிடிப்பதைப் போல் இருந்தது. என்னுடைய முகத்தில் உஷ்ணமேறியது. இதயம் அளவுக்கு மேல் படபடத்தது. அமைதியாக அவளிடமிருந்து சற்று தூரத்தில் நான் உட்கார்ந்தேன். இருமலாம் என்று முயற்சி பண்ணினால், சத்தமே வெளியே வரமாட்டேன் என்றது. கண்களைக் கொஞ்சம் கூட இமைக்காமல் அவளையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன். கடைசியில் அவள் என்னைப் பார்த்து விட்டாள். என்னை அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவளின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அமைதியாக என்னை ஒரு பார்வை பார்த்தாள். அதற்குப் பிறகு அவள் பார்க்கவே இல்லை. நான் ஏதோ கல்லோ மரமோ என்று அவள் நினைப்பது மாதிரி இருந்தது.
ஒரு வகை சோகம் கப்ப, சூரியன் கடலுக்குள் மூழ்கினான். பிரபஞ்சத்தின் முகம் லேசாக மங்கியது. குளிர்ந்த காற்று அப்போது வீசியது மனதிற்கு இதமாக இருந்தது. அவள் எழுந்தாள். அடடா... என்ன அழகு! கம்பீரமாக உயர்ந்து நின்று உலகத்தைச் சவால் விட்டு அழைத்தன அவளின் மார்பகங்கள். அமைதி தவழ என்னை நோக்கி அவளின் கண்கள் திரும்பின. கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. பொசு பொசுவென்று உதிரும் மணல் மீது அவள் நடந்து சென்றாள். அந்த நடையில் இருந்த கம்பீரத்தைப் பார்க்க வேண்டுமே!
என் உடல் உஷ்ணத்தால் தகித்தது. பாதி இரவு கழிந்த பிறகும் கூட எனக்கு தூக்கம் வரவில்லை. இதயத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட அந்த அழகு தேவதை என்னை ஒவ்வொரு நிமிடமும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தாள். 'கிண்' என்று உயர்ந்து நின்ற அவள் உடல் வனப்பு என்னைப் பித்துப் பிடிக்கச் செய்தது. அவளின் ஒவ்வொரு அங்கமும் என் ஞாபகத்தில் தோன்றித் தோன்றி என்னைப் பாடாய் படுத்தின. கண்களை மூடினால் கருப்பு வண்ணப் புடவையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த அழகு விக்கிரகம்தான் தோன்றியது. உடல் முழுக்க ஒரே உஷ்ணமயம்... அக்னி திராவகம் நரம்புகளில் ஓடுகின்றதோ என்று நானே சந்தேகம் கொள்ள ஆரம்பித்தேன். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் அக்னி குண்டத்திற்குப் பக்கத்திலேயே படுத்திருப்பதைப்போல் ஒரு உணர்வு. உஷ்ணம்... தாங்கிக்கொள்ள முடியாத உஷ்ணம்...
எப்படியோ பொழுது விடிந்தது. தலை ஒரே வேதனையாக இருக்க, நான் படுக்கையை விட்டு எழுந்தேன். ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அங்கு யாருமே இல்லை! எனக்கு மூச்சுவிடவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் மிகவும் கனமாகக் கடந்து செல்வதைப் போல் இருந்தது. திடீரென்று கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவள் வந்தாள். அவழித்து விடப்பட்டு சுதந்திரமாகக் கிடந்த தலைமுடியின் நுனிப்பகுதி ப்ளவுஸின் முன் பக்கத்தில் கிடந்தது. காலை நேர சூரியனின் கதிர்கள் பட்டு அவளின் முகம் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவள் என்னைப் பார்த்து புன்னகைக்கிறாளா என்ன? என் உடல் நடுங்கியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. ஜன்னல் கம்பிகளை நான் இறுக பற்றிக்கொண்டேன். பார்த்தேன். அவள் இப்போது அங்கு இல்லை. போய் விட்டிருந்தாள்.
எந்தவித இலட்சியமும் இல்லாமல் இரவும், பகலும் கடந்து போய்க் கொண்டிருந்தன. எங்களுக்குள் பெரிய போட்டி என்றுதான் சொல்ல வேண்டும். நான் இருக்கும்போது அவள் அந்த ஜன்னல் பக்கம் வருவதேயில்லை. அவள் இல்லாதபோதும் இருக்கிறபோதும் நான் என்னுடைய அறையில் இருக்கும் ஜன்னலை விட்டு நகர்வதே இல்லை. சரியாக உணவு உட்கொள்ளாமலும் ஒழுங்கான நேரத்திற்கு தூங்காமலும் நான் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத ஒரு மனிதனாக மாறினேன். கவலையும், அக்கறையின்மையும் என்னை வெகுவாக வந்து பாதித்தன. உடல் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. மனதோ நாட்கள் ஆக ஆக இறுகிக்கொண்டே வந்தது.
எவ்வளவு நாட்களுக்கு இப்படியே ஜன்னலைப் பார்த்தவாறு நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பது! அவளுடன் பேசுவதற்கு என்ன வழி? வீட்டுச் சொந்தக்காரரைப் போய் பார்த்தால் உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மனதில் ஏகப்பட்ட கவலைகள் மண்டிக்கிடக்க, நான் சென்றேன். வீட்டுச் சொந்தக்காரர் பெரிய ஒரு ஹோட்டலுக்கு அதிபர். தொப்பை உள்ள வயிறையும், வழுக்கைத் தலையையும் கொண்ட அறுபது வயதைத் தாண்டிய ஒரு மனிதர் அவர்.