தீர்த்த யாத்திரை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
தரையில வெளிச்சம் விழுந்துச்சு. கனகம்மா ஒரு பக்கம் ஒதுங்கி நின்னா. நான் வராந்தாவுல போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, அங்கேயிருந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன். அதுல இருந்த எதுவுமே என் மனசுக்குள்ள நுழையல. நான் எந்திரிச்சு உள்ளே பார்த்தப்போ கனகம்மா டீச்சர், அவ எப்பவும் ட்யூஷன் சொல்லித் தர்ற மேஜைக்குப் பக்கத்துல நோட்டுப் புத்தகத்தைத் திறந்து வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கா. தெய்யாம்மா சமையலறையில என்னவோ செஞ்சிக்கிட்டு இருக்கிற சத்தம் கேக்குது. கொஞ்ச நேரம் போனதும் அவ ரெண்டு டம்ளர் காப்பியோட வந்து, ஒரு டம்ளரை என்கிட்டயும் இன்னொரு டம்ளரை கனகம்மாகிட்டயும் கொடுத்தா... ஃபாதர்... அன்னைக்கு ராத்திரி அவ என்கிட்ட கேட்டது இது ஒண்ணுதான். "என்னை உங்களுக்குப் பிடிக்கலியா? கனகம்மா என்னைவிட நல்லா இருக்காளா?" நான் அழுதுகிட்டே அவகிட்ட சொன்னேன்: "என் தெய்யா... எப்படியோ நான் இப்படியொரு காரியத்தைச் செஞ்சிட்டேன். இனி நிச்சயம் எந்தக் காலத்திலயும் இப்படி நடக்க மாட்டேன். நீ என்னை மன்னிக்கணும்." இது நடந்து பல வருடங்களுக்குப் பின்னாடி, என் மகள்கள் கல்லூரிக்குப் போகிற வரை கனகம்மாதான் அவங்களுக்கு ட்யூஷன் சொல்லித் தந்தா... ஃபாதர்... தெய்யாம்மா சாகுறதுவரை, நான் இன்னொரு பெண்ணைத் தொட்டுப் பார்த்தது கூட இல்ல. படமாவன் இப்படிச் சொன்னதும் தெய்யாம்மாவை நினைச்சுப் பார்த்தேன். மனசுக்குள்ள சங்கடமா இருந்துச்சு. நான் படமாவன்கிட்ட சொன்னேன்: "டேய்... நீ சொல்றதைக் கேக்குறப்போ ஒருவிதத்துல சரிதான். ஆனா, இப்படி நினைச்சுப் பாரு. நான் செத்துப்போயிட்டேன்னு வச்சுக்கோ. தெய்யாம்மா வயசு ஒண்ணும் அதிகம் ஆகாம இப்படி அவ மட்டும் தனியா இருக்கான்னு வச்சுக்கோ. அவளுக்கொரு துணை வேணும்னு நினைச்சா, என் ஆத்மா அதை ஒத்துக்குமா? அது தெரிஞ்சா நீகூட என்ன நினைப்பே? இந்த முற்றத்துல அப்படி ஒரு காரியம் நடந்தா, காரித்துப்பிட்டு போகமாட்டியா?" படமாவன் சொன்னான்: "அண்ணே... தெய்யாம்மா அக்கா இப்ப உயிரோட இல்ல. அவங்க செத்துப் போயி எவ்வளவோ நாளாச்சு. இனி அதை எல்லாம் நினைச்சுப் பார்த்தா பிரயோஜனமே இல்ல. இப்ப இருக்கிறது அண்ணே... நீங்கதான். உங்களோட மனசாட்சியும் ஆசையும் ஒண்ணு சேர்றது எப்படின்னு முதல்ல பாருங்க. நான் இங்கே வந்தது ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான்றதை மட்டும் நீங்க ஞாபகத்துல வச்சுக்கோங்க".
ஃபாதர்... சிந்திச்சுப் பார்த்தா, படமாவன்கூட நான் வச்ச கொடுக்கல் வாங்கல்கள் என் எண்ணங்களோட கொஞ்சம்கூட ஒத்துப் போகக் கூடியது இல்ல... ஆனா, காம எண்ணங்களை மனசுல வச்சக்கிட்டு இருக்கிற ஒரு வயசான மனிதனோட வாழ்க்கை இப்படித்தான் போகும்... இந்தப் புத்தகங்கள்ல சொல்றதெல்லாம் உண்மையே இல்ல. இதயத்துக்கு எல்லாம் இங்கே வேலையே கிடையாது. நம்ம உடம்புதான் முக்கியம். ஆனா, நான் நினைக்கிறது வேற. இது எல்லாமே எனக்கு இருக்கே! கடவுள் என்னை வாழறதுக்கும், இந்தப் பாவங்களையெல்லாம் நினைச்சுப் பார்க்குறதுக்கும் அனுமதிச்சிருக்காரே! நானும் தெய்யாம்மாவைப் போல செத்துப் போயிருந்தா? ஃபாதர்... ஆளுங்க செத்துப் போறதையும் உயிரோட இருக்கிறதையும் என்னைப் பொறுத்தவரை ரெண்டையுமே ஒரே மாதிரியான வினோதமான விஷயங்களாகத்தான் நான் நினைக்கிறேன்.''
இதைக் கேட்டதும் ஃபாதர் சிரித்தார். அவர் சொன்னார்: "நல்லா சொன்னீங்க அண்ணே... நாம வாழறப்போதான் நாம மரணத்தைப் பற்றி சிந்திச்சுப் பார்க்க முடியும். செத்துப் போன பிறகு, வாழ்றதைப் பற்றி யாராவது நினைச்சுப் பார்க்க முடியுமா?''
நான் சொன்னேன்: "அய்யோ... ஃபாதர், உங்களுக்கு நான் சொன்னது ஒருவேளை போரடிக்க ஆரம்பிச்சிடுச்சோ? நான் இதையெல்லாம் உங்களைவிட்டா வேறு யார்கிட்ட போய்ச் சொல்றது? அதனாலதான் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்றேன்!''
ஃபாதர் சிரித்தவாறு என் தோளில் கை வைத்தவாறு தலையை ஆட்டினார். தொடர்ந்து கண்ணாடி டம்ளரில் விஸ்கியை ஊற்றி ஒரே மடக்கில் குடித்துவிட்டு கீழே கிடந்த ஐஸ் கட்டியை எடுத்து வாயில் போட்டார். "நீங்க சொல்லிக்கிட்டு இருக்குற எல்லா விஷயத்தையும் நான் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். அது ஒண்ணும் போரடிக்கல...'' ஃபாதர் சொன்னார்.
"சரி... அப்படின்னா நான் தொடர்ந்து விஷயத்துக்கு வர்றேன்.'' நான் சொன்னேன். "கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் படமாவன்கிட்ட சொன்னேன்: "டேய், குஞ்ஞூ.. நீ எனக்காக புரோக்கர் வேலை பார்த்து எவ்வளவோ காலமாயிடுச்சு. நீ எனக்கு நல்லதும் பண்ணியிருக்கே- கெட்டதும் பண்ணியிருக்கே. என்னைப் பல நேரங்கள்ல ஏமாற்றமடையவும் செஞ்சிருக்கே. பல நேரங்கள்ல எதிர்பார்த்ததுக்கும் மேலேயே சந்தோஷப்படவும் வச்சிருக்கே. நீ உன்னோட தொழிலை ஒழுங்கா, உண்மையா செஞ்சிக்கிட்டு இருக்கே. இந்தத் தொழிலை நீ ஏன் தேர்ந்தெடுத்தேன்றதைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல. காரணம் என்னன்னா உலகத்துல இருக்குற வேற எவ்வளவோ வேலைகளைச் செஞ்சு உன்னால காசு சம்பாதிக்க முடியும். அதுக்கான திறமை உன்கிட்ட இருக்கு!'' நான் வராந்தாவுல போட்டிருக்குற சாய்வு நாற்காலியில சாஞ்சு உட்கார்ந்திருக்கேன். படமாவன் குஞ்ஞு ஒரு பீடியைப் புகைச்சுக்கிட்டே பக்கத்துல இருந்த தூண்ல சாஞ்சு நின்னுக்கிட்டு இருக்கான். அவன் பிடிச்ச பீடியை முற்றத்துக்கு வெளியே தூக்கி எறிஞ்சிட்டு என்னைப் பார்த்து சிரிச்சான்: "அண்ணே... நீங்க என்ன சொல்றீங்க?" -அவன் கேட்டான். நான் சொன்னேன்: "நான் உன்னைப் பற்றி பல விஷயங்களையும் நினைச்சுப் பார்த்தேன்!" ஆனால் என் மனசுல என்னவோ இருக்குன்னு அவன் எண்ணியிருக்கணும். கொஞ்ச நேரத்திற்கு அவனும் நானும் எதுவுமே பேசிக்கல. சில நிமிடங்கள் போனபிறகு, அவன் முற்றத்துல இறங்கி, ஒரு காலால் மண்ணைக் கிளறிக்கிட்டு சொன்னான்: "கடவுளுக்குத் தெரியாம இந்த உலகத்துல எந்தக் காரியமும் நடக்குறது இல்ல. அண்ணே..., நான் முற்றத்துல இறங்கி அவனையும் என்கூட கூட்டிக்கிட்டு நடந்துக்கிட்டே சொன்னேன்: "டேய் குஞ்ஞு, என மனசுலே ஒரு விருப்பம்..." அவன் எதுவும் பேசாமல் என்னையே பார்த்து நின்னுக்கிட்டிருந்தான். நான் சொன்னேன்: "படமாவா... எனக்கு எவ்வளவோ வயசாயிடுச்சு. பெண்கள் விஷயத்துல என் மனசுல நிறைவேறாத ஆசைகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அவங்க சம்பந்தப்பட்ட சில விஷயங்களை நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. உதாரணத்திற்கு ஒரு கொள்ளைக்காரியோட உள்மனசு எப்படி இருக்கும்? அதை நான் அவகூட படுக்குறப்போ என்னால தெரிஞ்சிக்க முடியுமா?"
படமாவன் முற்றத்தின் ஒரு மூலையில் இருந்த இலந்தை மரத்தில் இருந்து மூணு நாலு இலந்தைப் பழங்களைப் பறிச்சு எடுத்துக்கிட்டு வந்தான்.