தீர்த்த யாத்திரை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
"இளமை போனா முதுமை வரத்தான் செய்யும். என்ன செய்வது.'' ஃபாதர் சொன்னார். நான் சொன்னேன்: "ஃபாதர்... ஒருநாள்... சாயங்கால நேரம். என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே, ஒண்ணுமே இல்லாம நாசமாப் போச்சே... என் ஆசைகள் ஒவ்வொண்ணும் மண்ணாப் போயிடுச்சேன்னு நான் திண்ணையில சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துக்கிட்டு வேதனைப்பட்டுக்கிட்டு இருக்கேன்.
அப்போ படமாவன் வந்து முற்றத்துல நிற்கிறான். "என்னடா குஞ்ஞூ விசேஷம்?"னு நான் கேட்டேன். "ஒண்ணுமில்ல"ன்னு சொல்லிட்டு அவன் ஒரு பீடியைப் பத்த வச்சு இழுக்க ஆரம்பிக்கிறான். ரெண்டு மூணு முறை புகையை விட்டுட்டு அவன் என்னையே பார்த்தான். பணம் கிணம் கடன் வாங்கலாம்னு வந்திருப்பான்போல இருக்குன்னு நான் நினைச்சேன். கொடுக்கலாமா வேண்டாமா? முதல்ல எவ்வளவு கேக்குறான்னு பார்ப்போம்னு நான் அவனுக்காகக் காத்திருந்தேன். அப்போ அவன் கேட்டான்: "ஏண்ணே... இப்படியே தனியா எத்தனை நாளைக்குத்தான் இருக்கப் போறீங்க? உங்களுக்கே வெறுப்பா இல்லியா?" நான் ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு அவனைப் பார்த்து கேட்டேன். "என்னடா பேசுறே? என்னை என்ன இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீயா?" அவன் வராந்தாவுக்குப் பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு சாதாரணமா சொல்ற மாதிரி என்னைப் பார்த்துச் சொன்னான்: "அண்ணே... நீங்க இப்போ கூட திடகாத்திரமா, ஆரோக்கியமாத்தான் இருக்கீங்க... உடம்புல நல்ல தேஜஸ் இருக்கு. நடை, எடுப்பு எல்லாமே நல்லாத்தான் இருக்கு. உங்க பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. பொண்டாட்டியும் போய்ச் சேர்ந்தாச்சு. கடவுள் உங்களுக்கு எல்லாத்தையும் கொடுத்திருக்கார். கல்யாணம் செய்யிங்கன்னு நான் சொல்லல. காரணம்- அதுக்கெல்லாம் வயசுன்னு ஒண்ணு இருக்கு. ஆனா, ஒரு பெண் பக்கத்துல இருக்கணும்னா அதுக்காக கட்டாயம் கல்யாணம் பண்ணினாத்தான் முடியுமா என்ன? சொல்லுங்கண்ணே.." ஃபாதர், அவன் அப்படிச் சொன்னதும் என் மனசுல எந்த அளவுக்கு சந்தோஷம் உண்டாச்சு தெரியுமா? என் மனசுக்குள்ள நான் சொல்லிக் கிட்டேன். "என்னைப் படைச்ச ஆண்டவனே! நீ என் மனசைப் புரிஞ்சிக்கிட்டு நான் எதற்காக ஏங்கிக்கிட்டு இத்தனை நாட்கள் இருந்தேனோ, அதைக்கூட நிறைவேத்தி வைக்கிறதுன்னு முடிவு பண்ணினியா? இல்லாட்டி சாத்தானை என் பக்கம் அனுப்பி விட்டிருக்கியா?" ஜாலியாக, குதூகலத்தோட இந்த வாழ்க்கையை வாழலாம்னு நான் முடிவெடுத்துட்டேனே தவிர, உண்மையிலேயே நான் பயப்படவும் செஞ்சேன். ஏன் தெரியுமா? ஃபாதர்... தெய்யாம்மாவைப் பத்தி அப்போ எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துல வந்துச்சு. ஃபாதர், நடந்தது என்ன தெரியுமா? ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என்னோட மகள்கள் ஜெயா, கீதா- இவங்களோட ட்யூஷன் டீச்சர் வீட்டுக்கு ட்யூஷன் சொல்லித் தர்றதுக்கு வந்தப்போ, என் மனைவி தெய்யாம்மா, மகள்கள் ஜெயா, கீதா எல்லாரும் சர்ச்சுக்குப் போயிருந்தாங்க. இன்னும் திரும்பி வீட்டுக்கு வரல. நான் ஏதோ ஒரு தைரியத்தில் கனகம்மாக்கிட்ட சொன்னேன். "டீச்சர்... அவங்க வர்றதுக்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். நான் முன்னாடி கேட்ட கேள்வியையே இப்பவும் கேக்குறேன். நாம ரெண்டு பேரும் கொஞ்சம் பிரியமா இருந்தா என்ன?" நான் இப்படிக் கேட்டதும் டீச்சர் வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டு சிரித்தாள். எனக்கு அப்போ வயசு குறைவுதான். பார்க்குறதுக்குக்கூட நல்லாவே இருப்பேன். ஃபாதர்...
அந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய ஃபாதருக்குப் பதிலா சின்ன ஃபாதர் காலை நேரப் பிரார்த்தனையை நடத்தியிருக்கார்.
அன்னைக்கு பிரசங்கம் எதுவும் இல்ல. சின்ன ஃபாதர் வேக வேகமா எல்லாத்தையும் சொல்லுவார். அதனால நான் கனகம்மா டீச்சரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு தரையில் ஒரு பாயை விரிச்சு படுத்துக்கிடக்கிறப்போ, தெய்யாம்மா தலையில துணியைப் போர்த்திக்கிட்டு கதவைத் திறந்து உள்ளே வந்துக்கிட்டு இருக்கா. அடுத்த அறையில ஜெயாவும் கீதாவும் என்னவோ பேசி சிரிக்கிறாங்க. நான் காரியமே கண்ணாக இருந்ததால், இவங்க ஏற்கெனவே வந்த விஷயத்தை கவனிக்கவே இல்ல. நாங்க இருந்த இடம் ஒரே இருட்டா இருந்ததால், தெய்யாம்மா எங்களை கவனிக்கல. கனகம்மா டீச்சரை அவளோட புடவையால மூடிட்டு நான் வேஷ்டியை எடுத்து கட்டிக்கிட்டு எழுந்து நின்னு மெதுவான குரல்ல கூப்பிட்டேன். "தெய்யாம்மா..."
அவள் துணி மாற்றிக்கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்து அவள் அறையைச் சுற்றிலும் பார்த்தாள். நான் சொன்னேன்: "தெய்யாம்மா நான்தான். நீ விளக்கைப் போடாதே. பிள்ளைங்க பார்த்தா பிரச்சினை ஆயிடும். என்கூட இன்னொரு ஆள் இருக்கு. நீதான் என்னைக் காப்பாத்தணும். அந்தக் கதவை முதல்ல அடை." நான் சொன்னவுடன் தெய்யாம்மா போய் கதவை அடைச்சா. நான் ஓடிப்போய் அவளோட காலடியில் போய் விழுந்து, அவளோட இரண்டு கால்களையும் இறுக கட்டிப்பிடிச்சுக்கிட்டு சொன்னேன்: "நீ என்னை மன்னிக்கணும். இங்கே ஒரு தப்பு நடந்திடுச்சு. இந்த அறையில இப்ப கனகம்மா டீச்சர் இருக்கா." தெய்யாம்மா குனிஞ்சு இருட்டுல என் முகத்தை உற்றுப் பார்த்தா. பேசுறது நான்தானா இல்லாட்டி வேற யாருமான்னு அவளுக்கு சந்தேகம்போல. கொஞ்ச நேரம் கழிச்சு அவளோட ரெண்டு கைகளாலயும் என் தலையையும் முகத்தையும் தொட்டுப் பார்த்தா. ஃபாதர்... எனக்கு இப்போ கூட ஞாபகம் இருக்கு. அவளோட புடவையில சர்ச் மெழுகுவர்த்தியோட மணம் இருந்துச்சு. அவள் கொஞ்ச நேரம் விக்கிவிக்கி அழுதா. அதுக்குப் பிறகு ஒரு சத்தத்தையும் காணோம்.
கனகம்மா ஓடி வந்து தெய்யாம்மாவோட ரெண்டு கைகளையும் பிடிச்சிகிட்டு வாய்விட்டு யாருக்கும் கேட்காத மாதிரி அழுதா. கண்ணீர்த் துளிகள் என் தலைமேல் விழுந்துச்சு. இது யாரோட கண்ணீர்த் துளிகளா இருக்கும்னு நான் யோசிச்சேன். தெய்யாம்மாவோட கண்ணீரா, இல்லாட்டி கனகம்மாவோட கண்ணீரா? கண்ணீரை வச்சு இது யாரோடதுன்றது கண்டுபிடிக்க முடியாதுல்லியா? தலையை உயர்த்திப் பார்க்குறதுக்கு எனக்கும் ரொம்பவும் பயம். யாரோட கண்ணை நான் பார்ப்பேன்? கொஞ்ச நேரம் ஆனவுடனே தெய்யம்மா நடந்துபோய் அடைச்சிருந்த கதவைத் திறந்து வெளியே போய் கதவைத் திருப்பியும் அடைச்சா. நானும் கனகம்மாவும் மட்டும் அறைக்குள்ளே தனியா நின்னுக்கிட்டு இருக்கோம். நடந்த சம்பவத்தைப் பிள்ளைங்ககிட்ட சொல்லி அழுறதுக்காக ஒருவேளை தெய்யாம்மா போயிருப்பாளோ? யாருக்குத் தெரியும்? அப்போ தெய்யாம்மா உரத்த குரல்ல சொல்லிக்கிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு: "அடியே கீதா, ஜெயா... நீங்க ரெண்டு பேரும் அந்த நெல்லிக்காய் மரத்துக்கிட்ட போயி கூட்டு வைக்கிறதுக்கு பாவைக்காய் பறிச்சிட்டு வாங்க. போங்க... போங்க..." மகள்கள் ரெண்டு பேரும் கிளம்பிப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சப்புறம், நான் முன்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.