தீர்த்த யாத்திரை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
ஃபாதர் சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டுக் கேட்டார்: "பனியைப் பார்க்கணும்னு படமாவன் சொன்னான்ல? அவனை எங்கே அனுப்பி வைக்கப் போறீங்க?''
நான் சொன்னேன்: "அவன் காசிக்குப் போறேன்ல சொன்னான்? ஃபாதர்... அங்கே என்ன பனியா இருக்கு?''
"இல்ல...'' ஃபாதர் சொன்னார்: "பனி உருகி வர்ற தண்ணி இருக்கு.''
நான் கேட்டேன்: "தண்ணியா? என்ன தண்ணி?''
அவர் சொன்னார்: "ஓடி வர்ற கங்கை நதியைச் சொல்றேன். பனி உருகி வர்ற தண்ணீராமே அது!'' "அது எங்கேயுள்ள பனி?'' நான் கேட்டேன். "இமயமலையில...'' ஃபாதர் சொன்னார். "அப்படின்னா... படமாவனை பேசாம அங்கேயே அனுப்பிவிட வேண்டியதுதான்.'' நான் சொன்னேன். "அவன் அங்கே போய் குளிக்கட்டும். தன்னுடைய பனியைப் பார்க்க வேண்டும்ங்கற ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும். தன் பயணத்தை அவன் நடத்திக் கொள்ளட்டும். அவன் பிரச்சினை ஒருவிதத்தில் முடிந்தது. ஒரு விதத்தில் அது நல்லதாகவும் போயிற்று.'' ஃபாதர் சொன்னார்: "அவன் காசி வழியே இமயமலைக்குப் போகட்டும்.'' "செலவு அதிகமாகுமா ஃபாதர்?'' நான் கேட்டேன்.
ஃபாதர் சொன்னார்: "அதைப் பற்றி பெரிசா நினைக்காதீங்க அண்ணே... என்ன இருந்தாலும் ஒரு நல்ல காரியத்துக்குத்தானே செலவழிக்கிறீங்க?'' நான் கொஞ்சம் ப்ளூ லேபிளை ஃபாதரின் டம்ளரிலும் என் டம்ளரிலும் ஊற்றினேன். நான் சொன்னேன்: "என்னோட இந்த விஷயங்களை, ஃபாதர்... நீங்க மட்டும் இல்லேன்னா, நான் வேற யாருகிட்ட சொல்லியிருக்க முடியும்?'' ஃபாதர் சிரித்துக் கொண்டே சொன்னார்: "அண்ணே... நான் இல்லைன்னா இன்னொரு ஆள்.'' நான் சொன்னேன்: "என்னோட பயம் இப்போ கூட போகல ஃபாதர்.'' "பயப்படாதீங்க...'' ஃபாதர் சொன்னார்:
"அண்ணே... உங்க மனசுல ஏதாவது கவலை இருக்கா? கவலை இருக்குற மாதிரிதான் எனக்குத் தெரியுது?'' நான் சொன்னேன்: "என் மனசுல இருக்குற விஷயங்களை என்னாலயே பல நேரங்கள்ல புரிஞ்சுக்க முடியல!'' ஃபாதர் என் கையில் தன் கையை வைத்துக் கொண்டு சொன்னார்: "அண்ணே... நீங்க கடவுளை மனசுல நினைச்சா போதும்.'' நான் வர்கீஸை அழைத்தேன்: "வர்கீஸ்... என்னடா நீ தூங்கிக்கிட்டு இருக்கியா?'' அவன் என்னவோ சொன்னான். நான் சொன்னேன்: "ஃபாதருக்கும் எனக்கும் சாதம் போடு!'' சாப்பிட்டு முடித்து ஃபாதர் மோட்டார் சைக்கிளைக் கிளப்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. "குட் நைட்.'' ஃபாதர் சொன்னார்: "பத்திரமா போகணும், ஃபாதர்.'' நான் சொன்னேன்.
2
சர்ச்சில் பாவமன்னிப்பு கூண்டுக்கு முன்னால் இன்று அப்படியொன்றும் கூட்டமில்லை. இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே நின்றிருந்தார்கள். ஏற்கெனவே அங்கு நின்றிருந்த கிழவி சிலுவையை வரைந்தவாறு எழுந்து போனபோது, ஃபாதர் முதுகை நிமிர்த்திக்கொண்டு கொட்டாவி விட்டார். பிறகு மீண்டும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். அடுத்து ஒரு இளம்பெண் வந்து நின்றாள். அவள் பாவமன்னிப்பு கூண்டின் படியில் முழங்கால் போட்டு அமர்ந்து சிலுவை வரைந்தவாறு, அந்தக் கூண்டின் சிறிய பித்தளைச் சதுரத்தின்மேல் தன் முகத்தை வைத்தாள். உள்ளே ஃபாதரின் தலை அவளுக்கு நேராக சாய்ந்தது. அவள் சொன்னாள்: "நான் பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்.''
"சொல்லு.'' ஃபாதர் சொன்னார்.
அவள் சொன்னாள்: "நான் ஆம்பளைங்கூட படுத்து பாவம் செஞ்சிக்கிட்டு இருக்குற ஒரு பெண்!''
"கடவுள் எல்லா பாவத்தையும் பொறுத்துக்குவார்.'' ஃபாதர் சொன்னார்: "நீ செஞ்ச பாவத்துக்காக வருத்தப்படுறதா இருந்தா...!''
"நான் செஞ்ச பாவச் செயலை என்னாலேயே தாங்கிக்க முடியல.'' அவள் சொன்னாள்.
"அப்படி நீ செஞ்ச பாவம்தான் என்ன?'' ஃபாதர் கேட்டார்.
"நான் பாவம் செஞ்சதோடு நிற்கல. அதோட சேர்ந்து நம்பிக்கை துரோகமும் செஞ்சிருக்கேன்.''
"எப்படின்னு சொல்லு.'' ஃபாதர் கேட்டார்.
அவள் சொன்னாள்: "என்னை ஆண்கள்கிட்ட அழைச்சிட்டுப்போற ஒரு ஆள் இருக்கான். அவன் சொன்னான்: "ரோஸ்... நீ நல்லா இருக்குறதுக்கு நான் உனக்கு ஒரு வழி சொல்லித் தரப் போறேன். விஷயம் என்னன்னு நான் சொல்றேன். ஒரு ஆளுக்கு பதிமூணு விதத்துல பெண்கள் தேவைப்படுது. ஆள் நல்ல மனுஷன். பணம் தருவார். தொந்தரவு எதுவும் கிடையாது. இங்க பாரு... இந்தப் பட்டியல்ல இருக்குற பதிமூணு பெண்கள்தான் அந்த ஆளுக்கு வேணும். நீ தைரியசாலிப் பெண்ணாச்சே! நல்லா பேசவும் செய்வே. நீ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணா அந்த ஆளு முன்னாடி போய் நிக்கணும். உன்னை அந்த ஆளால அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. காரணம்-அந்த ஆளோட கண்கள்ல பிரச்சினை இருக்கு. சரியா பார்வை தெரியாது. ஆபரேஷன் பண்ணப்போறாரு. நீ ஒவ்வொரு நாளும் அந்த ஆளுகிட்ட என்ன பேசணும்னு நான் சொல்லித் தர்றேன். ஒவ்வொரு நாளும் எந்தெந்த மாதிரி ஆடைகள் அணியணும்ன்றதையும் நானே சொல்றேன். உன் கையில பணம் வந்ததும், நீ என்னசெய்வே?" நான் சொன்னேன்: "அண்ணே... உங்களுக்கு அதுல பாதியைத் தந்திடறேன்.'' அவன் சொன்னான்: "வேண்டாம்... நான் வேற ஒரு ஊருக்குப்போறேன். நீ எனக்கு ஒரு உதவி செஞ்சா போதும். என்னோட அம்மா வீட்ல தனியா இருக்கு. தினம் நீ காலையில போயி பசுக்கிட்ட பால் கறந்து கொடுக்கணும். நல்ல- சாதுவான பசு. அம்மாவுக்கு ஏதாவது தேவையான்னு அப்பப்ப விசாரிச்சிக்கணும்!"
ஃபாதர்... நான் அந்த ஆளு சொன்னது மாதிரியே பதிமூணு ராத்திரிகளுக்கு அந்த வயசானவர் இருந்த வீட்டுக்குப் போனேன். ஒவ்வொரு முறை நான் போறப்பவும் அவர் நினைச்சிக்கிடுவாரு, நான் வேற வேற பெண்ணுன்னு. கடைசி நாள் என்னோட மரு...''
ஃபாதர் கையை உயர்த்திக்கொண்டு சொன்னார்: "விவரமா இதைச் சொல்லணும்னு அவசியம் இல்ல.''
அவள் கேட்டாள்: "எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா, ஃபாதர்?''
"கிடைக்கும்...'' ஃபாதர் சொன்னார்: "நீ செஞ்சது தப்புன்னு உனக்குத் தோணுதா?''
"நிச்சயமா... அந்த ஆளைப்பார்த்து உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்கணும்னு நான் நினைக்கிறேன்.''
ஃபாதர் சொன்னார்: "வேண்டாம்... இனி அதுக்கான அவசியம் இல்ல. நீ அந்தப் பணத்தை வச்சு என்ன செஞ்சே?''
"ஒரு தையல் மெஷினும் ஒரு ஆடும் வாங்கினேன். என்னோட அப்பாவுக்கு ஒரு வெள்ளெழுத்து கண்ணாடி வாங்கினேன். கொஞ்ச பணத்தை இன்னைக்கு மாதாவுக்கு காணிக்கையா போட்டேன். மீதிப் பணத்தை பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்.'' அவள் சொன்னாள்.
ஃபாதர் கேட்டார்: "நீ பசுவைக் கறக்கப் போறியா?''