தீர்த்த யாத்திரை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
உண்மையைச் சொல்லட்டுமா? நான் ஒரு நல்ல மனிதனே இல்லை. என்னிடம் பல பலவீனமான விஷயங்களும் இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த நான் பலமுறை முயற்சித்திருக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை என்பதே உண்மை. இல்லாவிட்டால் என் இரண்டு அல்லது மூன்று நாட்கள் முயற்சியில் நான் வெற்றி பெற்றிருப்பேன். அதற்குப் பிறகு நிச்சயம் நான் தோல்வியையே சந்திப்பேன். சுருக்கமாகச் சொன்னால், நான் காமக் களியாட்டங்களில் விருப்பம் உள்ளவன். சுவையான உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடக்கூடியவன். மது அருந்தக்கூடியவன். ஆடம்பரப் பிரியனும், பணக்காரனுமான ஒரு மோசமான கிழவன். எனக்கு இப்போது அறுபத்தைந்தாவது வயது நடந்து கொண்டிருக்கிறது.
கடவுளுக்கு நான் செய்யும் பாவச் செயல்கள் ஒவ்வொன்றும் நன்றாகத் தெரியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருந்தாலும், கருணை வடிவமான அவர் என்னைப் போன்ற ஒரு பாவியை தண்டிக்க வேண்டிய விதத்தில் தண்டிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மாறாக, பல விதங்களிலும் எனக்கு தன்னுடைய அருளை வாரி வழங்கி வந்திருக்கிறார் என்பதே உண்மை. ஒருவேளை... எனக்குக் கொடுக்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் அவர் ஒன்று திரட்டி தன் வசம் வைத்திருக்கலாம். எனக்கொரு சந்தேகம்- பாவம் செய்கிற நேரங்களில் தனியே அமர்ந்து, ரகசியமாக, யாருக்கும் தெரியாமல், ஒரு திருடனைப்போல் நான் கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பேன். இதனால் அவர் மிகவும் குழப்பமடைந்து போயிருப்பாரோ? இந்தக் கிழவன் ஒரு துரோகி; அவன் அவ்வளவு நல்லவன் இல்லை; அவன் காதைப் பிடித்துத் திருகினால்தான் சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றுகிற நேரத்தில், நான் அவரை நோக்கிச் செய்த பிரார்த்தனைகள் அவரின் பாதங்களில் சாஷ்டாங்கமாய் போய் விழுந்திருக்குமோ? மனம் இரங்கிப்போன கடவுள் என்னை மீண்டும் பிழைத்துப் போகட்டும் என்று மன்னித்திருப்பாரோ? அதன் விளைவு- இந்த அறுபத்தைந்தாவது வயதிலும் ஏகப்பட்ட கெட்ட செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு நான் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். யாரும் இதைத் தங்கள் வாழ்விலும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால், ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- வேறு வழியே இல்லை என்றால்தான் பாவம் செய்ய வேண்டும். நாம் செய்யக்கூடிய பாவச் செயல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது. நான் எவ்வளவு கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, மனதிற்குள் அசை போட்டுப் பார்த்து, ஒவ்வொரு பாவச் செயலையும் செய்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். இனி என் விஷயம் என்னவென்று சொல்கிறேன். நான் ஒரு தனிமனிதன். மனைவி இறந்துவிட்டாள். எனக்கிருந்த இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்வித்து, அனுப்பிவிட்டேன். இளைய மகளின் திருமணம் முடிந்து, எல்லாரும் போய்விட்டபிறகு நான் வேஷ்டியை மடக்கிக்கட்டி, இரண்டு கைகளையும் நன்றாக விரித்துக் கொண்டு, ஒரு சினிமா பாட்டை படு உற்சாகமாக விசிலடித்தவாறு இந்த வீட்டில் ஜாலியாக இங்குமங்குமாய் நடந்தேன். இனிமேல் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். என் மனதில் இருந்த ஆசைகளை எல்லாம் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பசுக்களை அவிழ்த்துவிடுவதைப்போல நான் சுதந்திரமாகக் காற்றில் பறந்து திரிய விட்டேன்.
கிழவனான என்னைக் கனிவுடன் கடவுள் பார்க்கட்டும் என்று நினைத்ததே காரணம். இப்படித்தான் இந்த முதுமை வயதிலும் நான் காமக் களிட்டங்களில் விருப்பமுள்ள மனிதனாகவும், சுகபோகங்களில் எந்நேரமும் திளைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடியவனாகவும் மாறிப் போனேன். கடவுள் எனக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தந்திருந்தார். எனக்கு இருக்கும் ஒரேயொரு பிரச்சினை- கண்ணில், குறிப்பாக இரவு நேரங்களில் பார்வை கொஞ்சம் மங்கலாகத் தெரியும். அந்தக் குறையைக்கூட சீக்கிரம் இல்லாமல் செய்துவிடலாம் என்று கூறிய டாக்டர் பரமேஸ்வரன் நாயர் மதுரையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளைக்கூட இப்போது செய்து கொண்டிருக்கிறார். எனக்கு அவர் சொன்னது அதிகமான தைரியத்தைத் தந்தது. எனக்கு நண்பர் என்று இருப்பவர் எங்களின் சர்ச் ஃபாதர்தான். ஃபாதர் எப்போதாவது நல்ல சுவையான உணவு சாப்பிடுவதற்கோ, என் மருமகன் இங்கிலாந்தில் இருந்து கொடுத்து விடுகிற நெப்போலியன் பிராந்தியைக் கொஞ்சம் ருசி பார்க்கலாம் என்றோ இங்கே வருவார். சமீபத்தில் ஒருநாள் நான் அவரிடம் சொன்னேன்.
"ஃபாதர், எனக்கும் வயசாயிடுச்சு. என் வாழ்க்கை இப்படியே ஆயிடுச்சு. என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் நடைபெறுகிற சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கு நல்லா தெரியும். உங்களைத் தவிர, இந்த உண்மைகள் வேற யாருக்கும் தெரியக்கூடாது, நான் சர்ச்சுக்கு வந்து பாவமன்னிப்பு கூண்டுக்குள் முழங்கால் போட்டு, நான் செஞ்ச ஒவ்வொரு பாவத்தையும் சொல்லணுமா? இல்லாட்டி- இந்த ஸ்மால் அடிக்கிறப்பவே, என்னோட பாவங்கள் ஒவ்வொண்ணையும் ஃபாதர் உங்கக்கிட்ட இங்கேயே ஒரு கதை மாதிரி சொன்னா போதாதா? நாம ஏதோ பேசினது மாதிரியும் இருக்கும். என்னோட பாவச் செயல்களைக் கேட்டு பரிகாரம் உண்டாக்க வேண்டியது ஃபாதர், உங்க விருப்பம்...''
ஃபாதருக்கு இப்போது வயது ஐம்பதுகூட ஆகவில்லை. அவரின் முகம் திடீரென்று சிவந்துவிட்டது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது என்பதை என்னால் உணரமுடிந்தது. சிறிது நேரம் ஃபாதர் எதுவுமே பேசவில்லை. கோபம் மறைந்தபிறகு ஃபாதர் சொன்னார்:
"கதையையும் குற்றவாளிக் கூண்டையும் ஏன் தேவையில்லாம ஒண்ணு சேக்குறீங்க யோஹன்னான் அண்ணே? இடையில ஒருநாள் சர்ச்சுக்கு வந்து மன்னிப்பு கூண்டுல முழங்கால் போட்டு கொஞ்ச நேரம் இருக்குறதுல நாம் என்ன இழந்திடப் போறோம்? இல்லாட்டி ஆளுங்கதான் என்ன நினைப்பாங்க? ஏதாவது ரெண்டு சின்ன பாவங்களை நீங்க சொன்னாகூட போதும். அந்தச் சடங்கை வேண்டாம்னு நீங்க சொல்லக்கூடாது. மனசுல நாம செஞ்சது தப்புன்னு பட்டதுல்ல? அதுவே பெரிய விஷயம்தான். இருந்தாலும், சர்ச்ல அதைச் சொல்லணும்னு சில விதிமுறைகள் இருக்கே! எனக்குப் பின்னால வேற யாராவது ஃபாதரா வரலாம். வரப்போறது யாருன்னு நமக்குத் தெரியுமா? யோஹன்னான் அண்ணனுக்கு எந்தவிதமான சடங்குகளும் சரிவர நடத்தலைன்னு நாலு பேர் எதிரா சொன்னாங்கன்னு வச்சுக்கோங்க. இது தேவையில்லாத பிரச்சினைதானே!''
"நீங்க சொல்றது சரிதான் ஃபாதர்..'' நான் லேசாக நடுங்கியவாறு சொன்னேன். உண்மையிலேயே இந்த விஷயம் இவ்வளவு பெரிய விஷயம் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஃபாதர் வந்த கொட்டாவியை அடக்கியவாறு சொன்னார்: "மரணம்ன்ற விஷயத்தை நாம எல்லாருமே மறந்திடுறோம்.