தீர்த்த யாத்திரை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
அப்ப உங்க முகத்தைப் பார்க்குறப்போ அவுங்களுக்கு ஒரு மாதிரி ஆயிடக்கூடாது. அதனால, அவுங்க உங்க பக்கத்துல இருக்குறப்போ நீங்க அறையில இருக்குற விளக்கைப் போடக்கூடாது. முழுசா அணைச்சிடணும். அண்ணே... உங்களுக்கு இதுல ஒண்ணும் பிரச்சினை இல்லியே!"
"அது ஒரு பெரிய பிரச்சினையே இல்ல." நான் சொன்னேன். "குஞ்ஞு... எப்படி நினைக்கிறியோ அப்படியே நடக்கட்டும். பிறகு... இந்தக் காரியத்தை நான் செய்றதுக்குக் காரணமே அவுங்களோட மனசை நான் புரிஞ்சிக்கணும்ன்றதுக்குத்தான். சரி... இப்போ உன்னோட ரேட் எவ்வளவுன்னு சொல்லு..." அவன் கொஞ்ச நேரம் வராந்தாவுல சுவர்ல மாட்டியிருந்த என்னோட பெரியப்பா, பெரியம்மாவோட புகைப்படங்களைப் பார்த்துக்கிட்டு நின்னான். பிறகு சொன்னான்: "அண்ணே இந்த விஷயத்தை நான் செய்றதுக்கு உங்ககிட்ட ரேட்னு ஒண்ணு நான் கேட்கல. ஒரே ஒரு விஷயத்தை எனக்கு நீங்க செஞ்சு தந்தா போதும்." "சரி... சொல்லு... செய்றேன்." நான் சொன்னேன். அதே நேரத்துல என் மனசுக்குள்ள நான் நினைச்சேன்... உலகத்துல இல்லாத ஒண்ணைச் சொல்லி வேணும்னு கேக்கப் போறான். அப்ப என்ன செய்யப் போறேனோன்னு. ஆனா... ஃபாதர், அவன் ஒண்ணும் பெரிசா கேக்கல. அவன் என்ன கேட்டான் தெரியுமா? "அண்ணே... நான் இதுவரை கேரளத்தைத் தாண்டிப் போனதே இல்ல.... சினிமாவுல தவிர வேற எங்கேயும் பனியை நான் பார்த்ததே இல்ல. கேரளத்தை விட்டு வேற எங்கேயாவது வெளியே போயி பனி இருக்குற இடமா நான் பார்த்துட்டு வரணும். அண்ணே... நீங்க எனக்கு அந்த ஏற்பாட்டை மட்டும் செஞ்சு கொடுத்தா போதும். நான் கொண்டுவர்ற பெண்களுக்கு அண்ணே... நீங்க நல்ல மாதிரி ஏதாவது தாங்க. நீங்க இதுவரை செஞ்சதைப் பத்தி யாரும் ஒரு குறையும் என்கிட்ட சொன்னது இல்ல." "டேய்... குஞ்ஞு!" நான் சொன்னேன்: "உனக்கு இதுதானே நான் செய்யணும். நிச்சயம் நான் இந்த ஏற்பாட்டைச் செஞ்சு தர்றேன். ஆனா, பனிக்கு நான் எங்கேடா போவேன்?" "காசியில பனி இருக்குமாண்ணே?" அவன் கேட்டான். நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்: "டேய்... ஒரு கிறிஸ்துவனான உனக்கு காசியில என்னடா வேலை? அங்க போறவங்க யாரு தெரியுமா? மரணமடையணும்னு நினைக்கிற இந்துக்கள்..." அவன் சொன்னான்: "அங்க இருக்குற ஆத்துல இறங்கி குளிச்சா நல்லதுன்னு நான் ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சிருக்கேன்." நான் சொன்னேன்: "டேய், படமாவா! இரு... பனி இருக்குற இடம் எங்கே இருக்குன்னு நான் விசாரிச்சுப் பாக்குறேன். டிக்கெட் எடுத்துத் தந்து, செலவுக்குப் பணமும் நான் தர்றேன். நீ இப்பத்தான் முதல் தடவையா உனக்குன்னு இருக்குற ஒரு விருப்பத்தை என்கிட்ட சொல்லி இருக்கே! நான் அதைச் செஞ்சு தராம இருப்பேனா? அப்ப... நமக்குள்ள நடக்க வேண்டிய ஒப்பந்தம் முடிஞ்சாச்சு இல்லியா?" "ஆமா..." அவன் சொன்னான்.
"ஃபாதர்.'' நான் சொன்னேன்: "நான் கொடுத்த பட்டியல்ல இருந்த பெண்கள்ல தினமும் ஒருத்தியை அவன் என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு வருவான்.'' இதைச் சொல்லிவிட்டு நான் ஃபாதரை உற்று பார்த்தேன். அவர் கொஞ்சம் விஸ்கியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதைக் கையால் சுற்றியவாறு, வெளிச்சத்துக்கு நேராகப் பிடித்துப் பார்த்தார். அப்போது சர்ச்சில் பிரார்த்தனை முடிந்து மணியடித்தது. ஃபாதர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, சிலுவை வரைந்தவாறு கண்களை மூடினார். நானும் கண்களை மூடி ஒரு நிமிடம் கடவுளை நினைத்துப் பார்த்தேன். நான் மனதிற்குள் சொன்னேன்: "என்னைப் படைத்த கடவுளே... என்னை மன்னிச்சிடு. எனக்கு இவ்வளவு வயசாயிடுச்சு. இனி எவ்வளவு நாட்களுக்கு நான் உயிரோட இருக்கப் போறேனோ தெரியல... கண்ல ஆபரேஷன் வேற பண்ண வேண்டியதிருக்கு." நான், ஃபாதர் எப்போது கண்களைத் திறப்பார் என்பதற்காகக் காத்திருந்தேன். அவர் கண்களைத் திறந்தபோது நான் சொன்னேன்: "ஃபாதர்... நான் நடந்த விஷயத்தைச் சொல்லிடட்டா?'' ஃபாதர் ஒன்றுமே பேசவில்லை. நான் சொன்னேன்: "ஃபாதர்... இதைக் கொஞ்சம் விவரமாத்தான் சொல்லி ஆகணும். அப்படிச் சொன்னாதான், நான் முழுமையா இந்த விஷயத்தைச் சொன்னேன்ற மாதிரி ஆகும். நான் சொல்லட்டுமா?'' ஃபாதர் தலையை ஆட்டினார். தொடர்ந்து கண்களை மூடியவாறு, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்க்கும்போது உறங்குவதைப்போல இருந்தது. ஆனால்...
கண்ணாடி டம்ளரை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு அவர் லேசாக அதைச் சுற்றினார். நான் சொன்னேன்: "ஃபாதர்... நான் சொன்னா நம்ப மாட்டீங்க. படமாவன் கொண்டு வந்த பதிமூணு பெண்களுக்கும் ஒரே இடத்துல மரு இருந்துச்சு. ஒரே இடத்துல... ஃபாதர்! வலது பக்க தொடைக்கு மேலே உள் பக்கமா... தொட்டுப் பார்த்தா விரல்ல தட்டும். ஒரு தடவை... ரெண்டு தடவை... அஞ்சாவது தடவையும் அந்த மருவைப் பார்த்ததும், எனக்கு வந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்ல. ஒவ்வொரு தடவையும் மருவைப் பாக்குறப்போ என் மனசுல தோணும்- இதென்னடா அதிசயமா இருக்கு! இப்படியும் உலகத்துல நடக்குமா என்னன்னு நினைப்பேன். ஆனா, அதைப் பத்தி எப்படி வாயைத் திறந்து கேக்குறதுன்னு நினைச்சுக்கிட்டு பேசாம இருந்திடுவேன். சொல்லப்போனா மனசுக்குள்ள ஒருவித பயமே எனக்கு உண்டாயிடுச்சு. ஒவ்வொரு பெண்ணும் என்னைத் தேடி வர்றப்போ, இந்தத் தடவையும் மரு கட்டாயம் இருக்குமோன்னு, சொல்லப்போனா, முன்கூட்டியே நான் பயப்பட ஆரம்பிச்சிட்டேன். பெண் என்னோட அறைக்குள்ள நுழைஞ்ச உடனே, நான் பார்க்குற முதல் விஷயமே மரு இருக்கான்னு கவனிக்கிறதாத்தான் இருக்கும். எனக்கு மூளையில ஏதாவது பிரச்சினையோன்னு அவங்ககூட என்மேல சந்தேகப்பட்டிருக்கலாம். கடைசியில, பதிமூணாவது பெண் என் பக்கத்துல இருக்குறப்போ, அவளோட தொடையைத் தடவிப் பார்த்தேன். அதேமாதிரி மரு இருந்துச்சு! அவ்வளவுதான்- ஆடிப்போனேன். "என்னைப் படைச்ச கடவுளே!"ன்னு இருட்டுல உரத்த குரல்ல கத்திட்டேன். என் உடம்பெல்லாம் பயங்கர வலி. தெப்பமா வியர்வையால உடம்பு முழுக்க நனைஞ்சு போச்சு. வாய் முழுசா வறண்டு போச்சு. கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டேன். மூச்சைக்கூட சரியா விட முடியல. இருட்டுல தரையில கிடந்தேன். என்கூட இருந்த பெண் பயந்து போயிட்டா... ஃபாதர்... அவள் விளக்கைப் போட்டுட்டு என் பக்கத்துல ஓடி வந்து நின்னு, என்னோட நெத்தியில கையை வச்சு பார்த்தா. நான் அவளோட முகத்தை உற்றுப் பார்த்துட்டு ரெண்டு கண்களையும் மூடிக்கிட்டேன்.